குண்டுப் புரளியைக் கிளப்பிய, இளம் மௌலவி - நடந்தது என்ன...?
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
கடந்து சென்ற நோன்புப் பெருநாள் கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு சவாலான ஒரு பெருநாளாகவே அமைந்திருந்தது. ரமழான் இறுதி நாட்கள் மற்றும் நோன்புப் பெருநாள் காலப்பகுதியில் அக்குறணை பள்ளிவாசல்களில் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்கள் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக பரவிய பொய்யான தகவல்களே இதற்குக் காரணம்.
அக்குறணையிலும், கம்பளையிலும் குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என அரச புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து கண்டி மாவட்ட பள்ளிவாசல் நிர்வாகங்கள் இது தொடர்பில் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும்படி பொலிஸாரினால் அறிவுறுத்தப்பட்டன. கண்டி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களுக்கு அந்தந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேரில் சென்றும் தொலைபேசி மூலமும் அறிவுறுத்தல்களை வழங்கினார்கள்.
கடந்த 18 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அவசர இலக்கத்துக்கு (118) அக்குறணை பள்ளிவாசல்களுக்கு குண்டுத்தாக்குதல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டது. 118 எனும் இலக்கத்தை தொடர்பு கொண்ட நபர் குறிப்பிட்ட தகவலை வழங்கிவிட்டு தான் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் அவசர இலக்கத்துக்கு (118) கடந்த 19 ஆம் திகதி காலையில் மற்றுமொரு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டவர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடாத்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்தோடு தான் ஹல்துமுல்லை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் கூறியுள்ளார். இந்த தகவல்கள் கிடைத்ததன் பின்பே பொலிஸார் உடனடியாக செயலில் இறங்கினார்கள்.
கடந்த 18 ஆம் திகதி மாலை அஸர் தொழுகையின் பின்பு அக்குறணை அஸ்னா பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த கண்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அலவத்து கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்போர் இது தொடர்பில் எச்சரிக்கையை விடுத்தனர். குண்டு தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெறவுள்ளதாக பாதுகாப்பு உளவுப் பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் தெரிவித்தனர்.
கடந்த 18 ஆம் திகதி முதல் நோன்புப் பெருநாள் வரையிலான காலப்பகுதியில் பள்ளிவாசல்களுக்கு வருகை தரும் அறிமுகமில்லாதவர்கள், புதியவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்கும்படி பள்ளிவாசல் நிர்வாகிகள் பொலிஸாரினால் வேண்டப்பட்டனர். சந்தேகத்துக்கிடமானவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கும் படியும் வேண்டினார்கள். பயணப் பொதிகள், பார்சல்கள் சகிதம் பள்ளிவாசலுக்கு வருபவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் படியும் அறிவுறுத்தினார்கள். சந்தேகத்துக்கிடமான வாகனங்கள் பள்ளிவாசல் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படக்கூடாதெனவும் உத்தரவிட்டனர்.
பொலிஸ் பாதுகாப்பு
இந்நிலையில் கண்டி மாவட்டத்தின் பிரதான பள்ளிவாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அக்குறணை மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் பரிபாலனத்தின் கீழ் இயங்கும் 80 பள்ளிவாசல்கள் மற்றும் 24 ஜும்ஆ பள்ளிவாசல்கள், கம்பளை, கண்டி கட்டுகலை மற்றும் மஹய்யாவை பகுதி பள்ளிவாசல்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அக்குறணை நகரில் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கண்டி மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிவாசல்களின் பாதுகாப்பினை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பலப்படுத்தியிருந்தனர். பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள். என்றாலும் தராவீஹ் போன்ற விசேட தொழுகைகளில் மக்கள் அச்சத்துடனே கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.
கண்டி மாவட்ட பள்ளிவாசல்களில் வழமைபோல சமய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை. 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதன்பின்னரான கொவிட் 19 தொற்று அச்சுறுத்தல், பயணத்தடை காரணமாக முஸ்லிம்களினால் தொழுகைகளை அக்காலப்பகுதியில் தொடர முடியாத நிலைமை இருந்தது. பெருநாள் கொண்டாட்டங்களும் அன்று சோபித்திருந்தன. இந்நிலையில் இவ்வருட நோன்புப்பெருநாள் மக்களால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. குண்டுப்புரளியினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என கண்டி மாவட்ட மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக் தெரிவித்தார்.
சந்தேக நபர் கைது
அக்குறணையிலும் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பகுதிகளிலும் குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளது என்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றதையடுத்து பொலிஸார் உடனடியாக செயலில் இறங்கினர். தகவல் தொடர்பில் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். தகவல்கள் வழங்கியவர்களின் இலக்கங்களைச் சரிபார்த்ததில் இரண்டு இலக்கங்களும் பயன்பாட்டிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி நிறுவனங்கள் தெரிவித்தன.
மேலும் தகவல்கள் வழங்கியவர்களின் விலாசங்கள் சரி பார்த்ததில் குறிப்பிட்ட வீடுகளில் அவ்வாறான எவரும் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. தகவல் அளிக்கப்பட்ட கணினி அமைப்பின் தகவல்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல்கள் ஒரே நபரால் வழங்கப்பட்டுள்ளமை தெரிய வந்தது. அக்குறணை பட்டுகொட பிரதேசத்தில் இருந்து இந்த அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் புலனாய்வு பிரிவினரால் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பட்டுகொட பிரதேசத்தில் கசாவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேக நபர் இருந்த நிலையில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 22 ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டார். அவர் 20 வயதான இஸ்ஸதீன் மொஹமட் சஜித் என்பவராவார். இவர் மெளலவி பட்டம் பெற்ற ஒருவராவார்.
அவரது கைப்பேசியை பரிசோதனை செய்ததில் குறிப்பிட்ட அழைப்புக்கள் அதிலிருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதியானது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சந்தேக நபரிடம் பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின்போது தான் வேறொருவரின் வேண்டுகோளுக்கிணங்கவே இந்த அழைப்புகளை மேற்கொண்டதாக வாக்குமூலமளித்துள்ளார். சந்தேக நபர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவருக்கு உச்ச பட்ச தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
சந்தேக நபர் கொழும்பு புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேக நபர்
இஸ்ஸதீன் மொஹமட் சஜீத்
சந்தேக நபர் தொடர்பான விபரங்களை விடிவெள்ளி பல்வேறு தரப்பினரிடமிருந்து திரட்டியது.
சந்தேக நபர் மொஹமட் சஜீத் (20) அக்குறணை, பட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த கசாவத்தை கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். தெழும்பு கஹவத்தை ரஷீதியா மத்ரஸாவில் பயின்று மெளலவிப் பட்டம் பெற்றவர். இவரது தந்தை மற்றும் மூன்று மூத்த சகோதரர்கள் ஜப்பானில் தொழில் புரிபவர்கள். சகோதரர்கள் மூவரில் ஒருவர் விடுமுறையில் இலங்கை வந்துள்ளார்.தந்தையும் இலங்கைக்கு வந்துள்ளார். சந்தேக நபரும் தொழில் வாய்ப்பு பெற்று ஜப்பானுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளில் இருந்தவர்.
இவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஸம ஸம் பள்ளிவாசலில் நோன்பு விசேட தொழுகையான தராவிஹ் தொழுகையை நடத்திக்கொண்டிருந்தவர்.
‘விடிவெள்ளி’ சந்தேக நபர் தொடர்பில் அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இஸ்திஹார் இமாமுதீனைத் தொடர்பு கொண்டு வினவியது.
சந்தேக நபர் ‘கசாவத்தையை வசிப்பிடாகக் கொண்டவர். அக்குறணையிலிருந்து 2 ½ கிலோ மீற்றர் தூரத்தில் அந்தக் கிராமம் அமைந்துள்ளது. சந்தேக நபர் மிகவும் அமைதியானவர். இவருக்கு எதிராக இதுவரை எந்த முறைப்பாடுகளோ, குற்றச்சாட்டுக்களோ இருந்ததில்லை. இவர் தொழில் நிமித்தம் ஜப்பானுக்கு போக ஆயத்தமாகி இருந்தார். இவர் அவ்வாறான அழைப்பினை 118 க்கு மேற் கொண்டார் என்ற செய்தியறிந்து இவரை அறிந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினார்கள். ஏப்ரல் 21 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்பு இவ்வாறான ஒரு புரளி பரப்பப்பட்டுள்ளமை முஸ்லிம்களுக்கு துரதிஷ்டமான சம்பவமாகும். எது எப்படியிருப்பினும் புலனாய்வுப் பிரிவின் விசாரணையின் பின்பே இவ்வாறான புரளியை கிளப்பியதற்கான காரணம் அதன் பின்னணி என்பவற்றை அறிந்து கொள்ள முடியும் என்றார். இந்தக்குற்றச்சாட்டிலிருந்தும் விடுபடுவது கடினம். சட்டம் இவ்வாறான விடயங்களில் மிகக்கடுமையாகவே இருக்கிறது என்றார்.
அக்குறணை மஸ்ஜிதுகள்
சம்மேளனத்தின் தலைவர்
“ஸலாம் கூறினால் அவர் பதில் ஸலாம் கூறுவது கூட சரியாகக் கேட்காது. அவ்வளவு அமைதியாக பதில் ஸலாம் கூறுவார். இவரா இப்படிச் செய்தார்?என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது” என அக்குறணை மஸ்ஜிதுகள் சம்மேளனத்தின் தலைவரும், அக்குறணை அஸ்னா பள்ளிவாசலின் தலைவருமான சட்டத்தரணி அஸ்மி பாரூக் தெரிவித்தார்.
மேலும் அஸ்மி பாரூக் தெரிவிக்கையில் ‘ சந்தேக நபர் தான் செய்ததை விளங்கித்தான் செய்தாரா? இல்லையேல் விளக்கமில்லாமல் சிறுபிள்ளைத் தனமாக செய்தாரா என்பதை புலனாய்வுப்பிரிவினரின் விசாரணைக்குப் பின்பே அறிந்து கொள்ள முடியும்.
இவ்விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்னுடன் கலந்துரையாடினார். இவர் ஊர் பள்ளிவாசலில் தராவிஹ் தொழுகை தொழுவித்து வந்தவர். விசாரணைகளின் பின்பே சம்பவத்தின் உண்மை நிலைமையை அறிந்து கொள்ளமுடியும் என்றார்.
பின்னணியில் யார்?
குண்டுப்புரளியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட மெளலவி ‘ தான் வேறொருவரின் வேண்டுகோளுக்கிணங்கவே குறிப்பிட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக ஆரம்ப கட்டவிசாரணையில் தெரிவித்துள்ளார். இவர் கூறுவது உண்மையெனில், அவர் யார் என்பதை பாதுகாப்புத் தரப்பினர் உடன் கண்டறிய வேண்டும்.
இதேவேளை அவர் விளையாட்டாக இப் பொயத்தகவலை வழங்கியிருந்தால் இதன் பாரத்தூரத்தன்மையை அவர் அறியாது இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. நாட்டின் தேசிய பாதுகாப்புடன் விளையாடும் இவ்வாறான விடயங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்பதை அனைவரும் கருத்திற் கொள்ள வேண்டும்.
2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது அழியாத கறையை படிய வைத்துவிட்டது. முஸ்லிம்கள் தீவிரவாதிகள், என்று பட்டம் சூட்டப்பட்டு விட்டார்கள். முஸ்லிம் சமூகம் இந்தக்குற்றச்சாட்டுக்களிலிருந்தும் மீட்சி பெறுவதற்கு முயன்று கொண்டிருக்கையில் இளம் மெளலவியொருவர் தெரிந்தோ தெரியாமலோ பாதுகாப்பு தரப்புக்கு குண்டுதாக்குதலொன்று நடத்தப்படவுள்ளது என்று தெரிவித்த தகவல்கள் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், தங்களது சமூகத்தையே இலக்கு வைக்கிறார்கள் என்ற மனோ நிலைமையை ஏனைய சமூகத்தின் மத்தியில் பரவச் செய்துள்ளன.
இந்தத் தகவல்கள் தொடர்பான உண்மைகள் விசாரணைகளின் பின்பு வெளிப்படுத்தப்படும் என்றாலும் மத்ரஸாக்கள், பள்ளிவாசல்கள் பாடசாலைகள் மூலம் இது பற்றிய விழிப்புணர்வுகள் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களை தேசத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களாக அன்றி தேசப்பற்றாளர்களாக, சமூக பற்றாளர்களாக, நல்லிணக்க நற்பண்பு கொண்டவர்களாக உருவாக்க அனைவரும் உறுதி பூண வேண்டும்.- Vidivelli
Post a Comment