நாட்டில் குரங்குகள் குறைந்தால், ஏற்படப்போகும் பாரிய ஆபத்து
- யூ.எல். மப்றூக் -
அந்தச் சிறிய காடு இப்போது அங்கு இல்லை. 'கண்ணாக் காடு' என்று அதற்குப் பெயர். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இலங்கையின் அம்பாறை மாவட்டம் - அட்டாளைச்சேனை பகுதியில் அந்தக் காடு - குரங்குகளின் வாழ்விடமாக இருந்தது.
ஆற்றங்கரையோரத்தை அண்டி, கண்ணா மரங்கள் வளர்ந்திருந்த அந்தக் காட்டுப் பகுதி, இப்போது மக்கள் குடியிருப்பாக மாறியுள்ளது.
அந்தக் காட்டில் வாழ்ந்த குரங்குகள் இப்போது நிரந்தர வாழ்விடமின்றி அலைந்து திரிகின்றன. அவை தமக்கான உணவுகளைத் தேடி, மனிதர்களின் குடியிருப்புப் பகுதிகளுக்குள் அடிக்கடி வந்து செல்லும்.
இதனால் வீடுகளின் கூரைகள் - குரங்குகளால் சேதமடைவதாகவும் தமது வளவுகளில் வளர்ந்து நிற்கும் பலன் தரும் மரங்களை குரங்குகள் நாசம் செய்வதாகவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தனது பாடசாலைக் காலத்தில் கண்ணாக் காட்டுக்குள் நண்பர்களுடன் அடிக்கடி சென்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஜலால், அங்கு 'குரங்கு வெற்றிலை'யை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்ட கதையைக் கூறுகின்றார்.
”அங்கிருந்த மரம் ஒன்றின் இலைக்கு - குரங்கு வெற்றிலை' என்று பெயர். ஓரிரு அடிகள் உயரத்துக்கு அந்த மரம் வளரும், அதன் இலைகள் 'பொட்டு'கள் போன்று வட்டமாக இருக்கும்.
அந்த இலைகளையும் குரும்பட்டியையும் (தேங்காயின் பிஞ்சு) சேர்த்து குரங்குகள் உண்ணும். அதன்போது வெற்றிலை சாப்பிட்டால், வாய் சிவப்பதைப் போல், குரங்குகளின் வாய் சிவக்கும். அதைப் பார்த்து நாங்களும் குரும்பட்டியுடன் 'குரங்கு வெற்றிலை'யை சாப்பிட்டுப் பார்ப்போம், வாய் முழுக்கச் சிவந்து விடும்" என்கிறார் ஜலால்.
”அப்போதெல்லாம் குரங்குகளைக் காண வேண்டுமென்றால், அவற்றின் வாழ்விடங்களுக்குத்தான் செல்ல வேண்டும். எங்கள் சிறுவயதில் ஊருக்குள் குரங்குகளை நாங்கள் கண்டதே இல்லை. ஆனால், இப்போது எங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் குரங்குகள் அடிக்கடி வருகின்றன" என்கிறார் அவர்.
ஒரு காலத்தில் எப்போதாவது மட்டுமே ஊருக்குள் காண முடிந்த குரங்குகள், இப்போது மக்கள் குடியிருப்புகளுக்குள் அடிக்கடி நுழைந்து அச்சுறுத்துகின்றன, பயிர்களை நாசம் செய்கின்றன.
அதனால் விவசாயத்துக்கு அழிவையும் ஏற்படுத்தும் விலங்குளில் ஒன்றாக குரங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இலங்கையில் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் இருந்து குரங்கினங்கள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொல்வதுகூட இப்போது சட்டப்படி குற்றமில்லை.
இலங்கையில் 30 லட்சம் வரையிலான குரங்குகள் உள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, இலங்கையில் தோராயமாக எட்டு மனிதர்களுக்கு ஒரு குரங்கு எனும் கணக்கில் உள்ளது.
இந்தப் பின்னணியில்தான் இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஒரு லட்சம் குரங்குகளை வழங்குவதற்கான பேச்சுவார்த்தையொன்று அரசாங்க மட்டத்தில் நடந்துள்ளது. சீனாவிலுள்ள மிருகக் காட்சிசாலைகளில் இந்தக் குரங்குகள் வைக்கப்படுமெனக் கூறப்படுகிறது.
ஆயினும், இறைச்சிக்காகவே இலங்கையிலிருந்து குரங்குகள் சீனாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாக, சமூக ஊடகங்களில் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால், இதை அமைச்சர் மஹிந்த அமரவீர மறுத்துள்ளார்.
இந்த நிலையில் குரங்கு இறைச்சியை உண்ணும் - சீனர்களின் பழக்கம் குறித்து, ஆச்சரியத்தோடும் அருவருப்போடும் சமூக ஊடகங்களில் கணிசமானோர் பதிவுகளை இடுகின்றனர்.
ஆனால், குரங்கு இறைச்சி உண்பவர்கள் இலங்கையிலும் உள்ளனர் என்கிறார் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீட உயிரியல் பிரிவு தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எம். றியாஸ் அஹமட்.
'சில நோய்களுக்கு நிவாரணியாக இருக்கும்' என்கிற நம்பிக்கையில் குரங்கு இறைச்சியை புசிப்பவர்களும் உள்ளனர்.
'தொங்கு மான்' எனும் பெயரில் - இவர்கள் குரங்கு இறைச்சியை சாப்பிடுவதாக றியாஸ் அஹமட் கூறுகின்றார்.
"குரங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாடி, அதன் இறைச்சியை ஆடு மற்றும் மாடு போன்றவற்றின் இறைச்சிகளுடன் கலந்து, மோசடியாக சிலர் விற்பனை செய்வதும் உண்டு," என்று வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகப் பொறுப்பாளர் ஏ.ஏ. ஹலீம் பிபிசி தமிழிடம் கூறினார்.
"குரங்குகளைப் பிடித்தல், அடைத்து வைத்தல், கொல்லுதல் போன்ற செயற்பாடுகள் வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றமாக இருந்தது.
ஆனால் இப்போது பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் இருந்து குரங்கினங்கள் நீக்கப்பட்டுள்ளமையால், குரங்கு வதைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது சாத்தியமில்லை" என ஹலீம் குறிப்பிடுகின்றார்.
ஆயினும் காட்டுயிர் சரணாலயங்களுக்குள் நுழைந்து அங்கிருக்கும் குரங்கு உள்ளிட்ட எந்தவோர் உயிரினம் அல்லது பறவைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்பட முடியாது எனவும் அவர் விவரித்தார்.
இலங்கையில் குரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்தமை பிரச்னையா அல்லது குரங்குகள் விவசாயத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றமை பிரச்னையா என்பது தொடர்பில் தெளிவு பெற வேண்டியுள்ளது என்கிறார் சிரேஷ்ட விரிவுரையாளர் றியாஸ் அஹமட்.
குரங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டமையினாலேயே, அவை மனித குடியிருப்புகளுக்குள் வருவதாகவும் விவசாயத்துக்கு நாசம் ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்திற்குப் பின்னர் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டு, குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்றமை காரணமாக, ஏராளமான விலங்குகள் தமது வாழ்விடங்களை இழந்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சீனாவுக்கு வழங்கும் பொருட்டு பெருந்தொகையான குரங்குகளை இலங்கையிலிருந்து அப்புறப்படுத்தும்போது, இங்குள்ள சூழல் சமநிலையில் குழப்பம் ஏற்படும் என்றும் அவர் கூறுகின்றார்.
"காடுகள் உருவாவதற்கு குரங்குகள் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன. குரங்குகள் உண்ணும் பழங்களின் விதைகள், அவற்றின் மலம் மூலம் பரவி முளைத்து மரங்களாக வளர்கின்றன. காடுகள் அதிகரிக்கும் போதுதான் மழை வீழ்ச்சியும் தாராளமாகக் கிடைக்கும்” என்று கூறுகிறார் விரிவுரையாளர் றியாஸ் அஹமட்.
மேலும், "பெரும் எண்ணிக்கையில் குரங்குகள் அப்புறப்படுத்தப்படும் போது, காடுகளின் உருவாக்கம் குறைந்து, மழை வீழ்ச்சியில் பாதிப்பு ஏற்படும். குரங்குளின் மலம் மற்றும் எச்சங்கள் இல்லாமல் போகும்போது மண் வளமும் குறையும்,” என்கிறார்.
அதுமட்டுமின்றி மகரந்தச் சேர்க்கை ஏற்படுவதற்கும், குரங்குகளின் நடமாட்டம் பெருமளவில் பங்களிப்பை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
"குரங்குகளை வேட்டையாடும் விலங்குகள் சூழலில் குறைவடைந்தமை, குரங்குகளின் பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது" என, அவர் குறிப்பிட்டார்.
"நரி, ஓநாய், சிறிய சிறுத்தை போன்றவை குரங்குகளை வேட்டையாடும். ஆனால், அவற்றின் எண்ணிக்கைகளும் குரங்குகள் வாழும் சூழலியல் பகுதிகளில் குறைந்து விட்டன. இதுவும் குரங்குகளின் பெருக்கத்துக்கு ஒரு வகையில் காரணமாக அமைந்து விட்டது,” என அவர் விவரித்தார்.
”ஓர் உயிரினத்தை, அது வாழும் சூழலில் இருந்து, பெரும் எண்ணிக்கையில் அப்புறப்படுத்துவதற்கு முன்னர், அதனால் என்ன வகையான பாதிப்புகளெல்லாம் ஏற்படும் என்பதை விஞ்ஞானபூர்வமாக ஆராய வேண்டும். அதன் பின்னரே தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
ஆனால், நமது அமைச்சர்கள் இவை தொடர்பான அறிவுடையவர்களாக இருக்கின்றனரா என்கிற கேள்விகள் உள்ளன,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
"குரங்குகளால் விவசாயத்துக்குப் பாதிப்பு ஏற்படுமாயின், அதைத் தடுக்கும் நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டும். பிரதானமாக, குரங்குகளின் வாழ்விடங்களான காடுகளை மீளுருவாக்கம் செய்ய வேண்டும்,” என்று, அவர் ஆலோசனை வழங்கினார்.
”குரங்குகளுக்கு கருத்தடை செய்வதன் மூலம், அவற்றின் அதிகரித்த இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும்" என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், 'உலகில் குரங்குகள் அழியும்போது, மரங்களும் அழிந்துபோகும்' என்கிற விஞ்ஞானிகளின் கூற்றை, விரிவுரையாளர் றியாஸ் அஹமட் பிபிசி தமிழிடம் நினைவுபடுத்தினார்.
,பிபிசி தமிழ்
Post a Comment