பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்தை நீக்குமாறு, சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழு கோரிக்கை
உத்தேச சட்டமூலத்தின் 4(1)(அ) பிரிவின் பிரகாரம், பயங்கரவாதத்திற்கு எதிராக மரண தண்டனை விதிப்பதாகக் கூறப்பட்டுள்ள சரத்து குறித்து மிகவும் கவலையடைவதாகவும் சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகள் அல்லது வேறு காரணங்களால் தேசிய பாதுகாப்பிற்கு ஏற்படும் அச்சுறுத்தலுக்கு எதிராக மரண தண்டனையை பயன்படுத்தி நியாயப்படுத்தக் கூடாது என சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் லிவியா ஸில்லி (Livio Zilli) தெரிவித்துள்ளார்.
புதிய சட்டமூலத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தேச சட்டமூலத்தில் சாதகமான விடயங்களை விடவும், பிரச்சினைக்குரிய காரணிகளே அதிகமாகக் காணப்படுவதாக சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, சட்டமூலத்தின் 3 ஆம் சரத்தில் உள்ள பரந்துபட்ட மற்றும் தௌிவற்ற அர்த்தங்கள், அமைதியான போராட்டத்தினை பயங்கரவாத செயற்பாடாகக் கருதும் வகையில் உள்ளதாக சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த சட்டமூலமானது இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் இடையில் காணப்படும் சட்ட பிணைப்பு மற்றும் நாட்டின் அரசியல் அமைப்பினை மீறுவதாக சர்வதேச சட்டத்தரணிகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் லிவியோ ஸில்லி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment