Header Ads



பத்ருப் போரை கனவில் கண்ட சாஹில், சுவனத்தை பற்றிய அல்குர்ஆன் வசனங்களை கேட்கையில் தியாகியானார்


- இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன் -


உஸ்தாத் ஹஸன் பரீத் பின்னூரி அவர்களது மகன் ஸஹல் அவர்களது விபத்து மரணம் தொடர்பான செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக பார்க்க முடிந்தது.


அவர் பற்றி அவரது தந்தை சொன்ன விடயங்கள் எல்லா இளைஞர்களுக்கும் சிறந்த படிப்பினைகளாகும்.


அவர் ஜாமியாஹ் இஸ்லாமிய்யாஹ் ஆங்கில மொழிமூல இஸ்லாமிய கலாபீடத்தின் இரண்டாம் வருட மாணவன், தந்தையைப் போல் ஒரு ஆலிமாக தஃவாப் பணியாளராக ஆக ஆர்வம் கொண்டவர்.


தந்தையோடு மஸ்ஜிதுக்கு செல்பவர், அவரது தஃவாப் பணிகளில் துணையாக இருப்பவர், மஷுராக்களில் கலந்து கொள்பவர், அவரது பாதணிகளை கூட எடுத்து வைத்து சேவகம் செய்பவர்.


வீட்டில் தாய்க்கு உதவி ஒத்தாசை புரிபவர், வீட்டுக்கு தேவையான பொருட்களை பண்டங்களை கொள்வனவு செய்பவர், வீட்டை வீட்டு முன்றலை சுத்தம் செய்து விட்டு தானும் தயாராகி கலையகம் செல்பவர்.


நாற்பது நாள் ஜமாஅத் பணியில் செல்லவிருந்தாலும், தந்தையும் தஃவாப் பணியில் ஈடுபடுவதால் தாய்க்கு உதவி ஒத்தாசை செய்ய வேண்டுமென இருபது நாட்களில் வீடு வந்து ஓரிரு நாட்களே.


தாய்க்கு உதவி ஒத்தாசைகள் புரியும் போது நாளை பத்ரு யுத்தம் நிகழ்ந்த நாள் என்றும் ஒரு அறப்போர் நடப்பதை கனவில் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.


நோன்பு துறந்த பின் தந்தை பயான் நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்வதற்காக, அவரது பைக்கிற்கு பெற்றல் அடித்து வர தம்பியுடன் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.


இனம் மதம் பாராது அண்டை அயலவர்களுடன் நல்லுறவு பேணுபவர், பாதையில் நடந்து செல்பவரை தனது பைக்கில் ஏற்றிச் சென்று விடுபவர்.


ஜமாஅத் பணியில் இருக்கும் பொழுது அனைவருக்கும் சேவகம் செய்வதில் ஆர்வம் காட்டியதாகவும், ஒரு வயதானவர் ஆடைகளைக் கூட தனது கரங்களால் கழுவிக் கொடுத்ததாகவும்  ஜமாத்தின் அமீர் தெரிவித்துள்ளார்.


சகோதரனும் தான் வீட்டில் தராவீஹ் தொழுவிப்பதற்கு ஓதும் ஒரு  ஸூராவை ஓதிய வண்ணம் அவருடன் பின் ஆசனத்தில் அமர்ந்து சென்றிருக்கிறார், சுவர்க்கம் நரகம் பற்றிய ஒரு வசனம் வந்த போது பைக்கை நிறுத்தி அதனை மீண்டும் ஓதக் கேட்டிருக்கிறார், சுவனத்தை பற்றி ஓதும் பொழுது விபத்து இடம் பெற்றிருக்கிறது, ஸ்தலத்திலேயே வபாஃத் ஆகி விட்டார்.


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..!


யா அல்லாஹ், அவர் நல்ல பிள்ளை என தாயும் தந்தையும் சாட்சி கூறுகிறோம், அண்டை அயலவர்கள் அறிந்தவர்கள் கூறுகிறார்கள், அவரை உன்னிடம் ஒப்படைத்து விட்டோம், அவரை நல்ல பிள்ளையாக அங்கீகரித்துக் கொள்வாயாக!


அவரது குற்றம் குறைகளை மன்னித்து அவரது நல்லமல்களை அங்கீகரித்து இந்த புனிதமான மாதத்தில் அவருக்கு உயரிய சுவன வாழ்வை வழங்குவாயாக!


அவர் முழுமையாக வாழ்ந்து தீனுக்காக உம்மத்துக்காக எதையெல்லாம் செய்ய வேண்டும் என நாம் கனவு கண்டோமோ அதை விடவும் அவரது இந்த மரணத்தின் மூலம் நல்ல விளைவுகளை படிப்பினைகளை நீ ஏற்படுத்துவாயாக, ஏனைய இளைஞர்கள் பிள்ளைகளையும் விளிப்புணர்வு பெறச் செய்து ஸாலிஹான நன்மக்களாக வாழச் செய்வாயாக!


இது அவரது தந்தையின் உருக்கமான கண்ணீருடன் கூடிய உரையில் இருந்து பெறப்பட்ட நஸீஹாக்கள்.


அந்த ஆத்மார்த்தமான துஆக்களை எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரித்துக் கொள்வானாக, உஸ்தாத் ஹஸன் பரீத் அவரது துணைவி பிள்ளைகளுக்கு கழா கத்ரை பொருந்தி பொறுமைகாக்கும் சகிப்புத் தன்மையையும் அல்லாஹ்வின் அரவணைப்பில் மன நிம்மதியையும் ஆறுதலையும் எல்லாம் வல்ல அல்லாஹ் தருவானாக!


இந்தப் புனிதமிகு ரமழான் மாதத்தில் எமக்கும், எமது உம்மா வாப்பா உடன்பிறப்புகள், மனைவிமக்கள், உற்றார் உறவினர், அன்பிற்குரியவர்கள் ஆசான்கள் அனைவரது ஈருலக ஈடேற்றத்திற்கும் அல்லாஹ்வின் அருளையும்  உங்கள்  துஆக்களையும் ஆசித்தவனாக!


இளவயது மரணங்கள் விட்டுச் செல்லும் படிப்பினைகள்! (1)


சில தினங்களுக்கு முன் சுற்றுலா சென்று நீரில் மூழ்கி வபாஃத் ஆகிய ஒரு சகோதரனின் செய்தி இவ்வாறு பதிவாகியிருந்தது:


அவர் பலாஹ் மஸ்ஜிதை நோக்கி நடக்கும் பொழுது அதானுக்குரிய நேரமாகிவிட்டதை நாம் அறிந்து கொள்வோம்!


பர்ழான தொழுகைக்குப் பின் நபிலான தொழுகையை திக்ரு அவ்ராத் துஆக்களை முடித்து விட்டு அவர் வெளியே வர சுமார் 15 நிமிடங்கள் ஆகின்றன!


21 வயதேயான அவரது வயதில் 60 வயதுடைய ஒருவரது நெற்றியில் இருக்க வேண்டிய ஸுஜூதுடைய அடையாளம் இருக்கும்!


எப்பொழுதும் வஞ்சகமில்லா புன்னகையுடன் ஸலாம் சொல்லி மலர்ந்த முகத்துடன் கதைக்கும் பண்புடையவராக இருந்தார்!


எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து நல்லமல்களை அங்கீகரித்து பர்ஸக் வாழ்வை சுவனத்தின் நந்தவனமாக ஆக்கி வைப்பானாக!


ஒவ்வொருவரது முடிவையும் அல்லாஹ் ஒருவனே அறிவான், யார் எங்கு எப்போது எப்படி எந்த நிலையில் மரணிப்பார் என்பதையும் அவர்கள் பற்றிய இறுதித் தீர்ப்பையும் எம்மால் கூற முடியாது ..!


என்றாலும் நாளை மஹ்ஷரில் அர்ஷின் நிழல் பெறும் ஏழு பேரில் மஸ்ஜிதுகளோடு உள்ளங்கள் பிணைக்கப்பட்ட இளைஞர் பற்றி கூறப்பட்டுள்ளது.


சுவனவாசிகளின் நெற்றியில் ஸஜூது செய்ததன் அடையாளங்கள் பிரகாசிப்பது பற்றி கூறப்பட்டுள்ளது.


மரணித்துவிட்ட ஒருவர் பற்றி மக்கள் சொல்லும் அழகிய சாட்சியங்கள் அவர்கள் சுவனவாசிகள் என்பதற்கான அடையாளங்கள் என்பதனை அறிவோம்.


பர்ழான கடமைகளுக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் நபிலான வணக்கங்கள், திக்ரு அவ்ராதுகள் தரும் இம்மை மறுமை ஈடேற்றங்கள் பற்றியெல்லாம் நாம் அறிவோம்!


நற்பண்புகள் உள்ளோர் நாளை கியாமத் நாளில்  இறைதூதர் (ஸல்) அவர்களது அருகாமை பெறுவதாக கூறப்பட்டுள்ளது.


இவ்வாறான பண்புகளையுடைய ஒரு உண்மை விசுவாசியாக  இளம்வயதில்  வளர்வதும் வாழ்வதும் எத்தகைய பேறு என்பதனை நாம் அறிவோம்.


அதுவும் அனைத்துவிதமான அநாச்சாரங்களும் இன்டர்நெட் சமூக ஊடகங்கள் என கையடக்கத்தில் ஆகிவிட்ட ஒரு யுகத்தில் ஷைத்தானுடன் தன் மனோ இச்சைகளுடன் போராடி  மார்க்கப் பற்றுடன் வளர்வதும் வாழ்வதும் எத்தகைய சவால்மிக்க காரியமாகும் என்பதையும் நாம் அறிவோம்.


இளம் மரணங்கள் எமக்கு ஆயிரமாயிரம் பாடங்களை கற்றுத் தருகின்றன, அதிலும் இவ்வாறான மரணங்கள் ஆழமான பல படிப்பினைகளை விட்டுச் செல்கின்றன.


இந்தப் புனிதமான ரமழான் மாதத்தில் எம்மை சுயவிசாரணைக்கு உட்படுத்தி எமது ஆன்மீக பண்பாட்டு பயிற்சிகளில் அதிக கரிசனை செலுத்தவும் எமது வழமையான வாழ்வில் மாற்றங்களை கொண்டுவரவும் நாம் முயற்சிக்க வேண்டும்.


யா அல்லாஹ் எம்மை விட்டு பிரிந்து செல்லும் உனது நல்லடியார்களுக்கு நீ வழங்குகின்ற நற்கூலிகளை  எமக்கும் தந்தருள்வாயாக, அவர்களுக்குப் பின் எம்மை சோதனைகளுக்கு ஆளாக்கி விடாதே!


யா அல்லாஹ், ஹுஸ்னுல் காதிமா எனும் சிறந்த வாழ்நாள் முடிவை எம்மனைவருக்கும் நீ தருவாயாக!


யா அல்லாஹ், எமது பெற்றார்கள் உடன் பிறப்புக்கள், மனைவி மக்கள், உற்றார் உறவினர், ஆசான்கள், அறப்பணி புரிபவர்கள் அன்பிற்குரியவர்கள் அனைவருக்கும் இந்த ரமழான் சுமந்து வரும் அனைத்து இம்மை மறுமை பேறுகளையும் நிறைவாகத் தருவாயாக!




No comments

Powered by Blogger.