பள்ளிவாசல் குண்டுத்தாக்குதல் பற்றிய தகவல் இந்திய புலனாய்வு பிரிவினால் வழங்கப்படவில்லை.
(எஸ்.என்.எம்.சுஹைல்)
ரமழான் மாத இறுதியில் அக்குறணையில் குண்டுத் தாக்குதல் நடத்தவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் தொலைபேசி இலக்கமான 118 இற்கு தகவல் வழங்கியவர் குறித்து விசாரணைகள் நடத்துமாறு கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ. ஹலீம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் கோரியுள்ளார்.
நோன்புப் பெருநாள் வியாபாரம் இடம்பெற்றுவரும் நிலையில் மக்களை பீதிக்குள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் மற்றும் பொது மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் இறுக்கமான பாதுகாப்பு கெடுபிடிகளை தவிர்க்குமாறும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அக்குறணை பிரதேசத்திற்கு குண்டுத் தாக்குதல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள விடயம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் மேற்கொண்டன கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் விடிவெள்ளிக்கு மேலும் தெரிவிக்கையில்,
அக்குறணை பிரதேசத்தில் குண்டுத்தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டும் விடயம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்படுவதாக கேள்வி எழுப்பியதுடன், பொதுவாக நோன்புப் பெருநாள் காலங்களில் முஸ்லிம் மக்களின் வியாபாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன.
இலங்கையில் 30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்த பின்னர் முஸ்லிம் மக்கள் இலக்குவைத்து தொடராக துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ரமழான் காலங்களில் அதிகமான நெருக்கடிக்கு உள்ளாகின்றனர். 2018 கண்டி திகன கலவரத்தால் முஸ்லிம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 2019 இல் ஈஸ்டர் தின குண்டுத்தாக்குதலால் முஸ்லிம் மக்கள் மேலும் பீதியடைந்திருந்தனர். 2020, 2021 களில் கொரோனா மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக நோன்பு காலங்களில் நெருக்கடிகளை சந்தித்தனர். 2022 இல் அரகலய காரணமாக ஊரடங்கு அமுலில் இருந்தது. இவ்வருடம் அமைதியான முறையில் பெருநாளை கொண்டாட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. எனினும், கண்டியில் குண்டுத்தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக பீதி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால், கண்டி மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளினாலும் அந்தந்த பிரதேச பள்ளிவாசலுக்குச் சென்று பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கை அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் இம்முறையும் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, இந்த குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த தகவல் இந்திய புலனாய்வு பிரிவு வழங்கியதாக சமூக மட்டத்தில் கதைக்கப்படுவது குறித்தும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் அவர் வினவினார்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கண்டி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளும் அச்சுறுத்தலுக்குரியதாக நாம் கருதவில்லை. எனினும், அக்குறணை பகுதிக்கு குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தல் ஒன்று தொலைபேசி ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பு குறித்தான புலனாய்வு விசாரணைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
மேலும், இந்த தகவல் இந்திய புலனாய்வு பிரிவினால் வழங்கப்படவில்லை. எனினும், ஒரு அச்சுறுத்தல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ள நிலையில் நாங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்றார்.-Vidivelli
Post a Comment