Header Ads



பலூஜா இனப்படுகொலைகளும், அழிவுகளும்


- லத்தீப் பாரூக் -


அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் 2004 நவம்பர் 2ல் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டபோது முழு உலகத்துக்கும் அது ஒரு சோகமான விடயம் என்று வர்ணித்த சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக பிரேரிக்கப்பட்ட அறிஞரான டொக்டர். ஹெலன் கார்டிகொட் இந்த மனிதகுலம் இன்னும் நான்கு வருடங்களுக்கு நிலைத்திருக்குமா என தான் அஞ்சுவதாக அச்சமும் தெரிவித்தார்.


அவரது அச்சத்தை நியாயப்படுத்தும் வகையில் மீண்டும் பதவியேற்ற ஐந்து தினங்களில் ஈராக்கின் பலூஜா நகரம் மீது குண்டு வீசி தாக்கியதோடு அந்த நகரை தீயில் மூழ்கடித்தார் புஷ். 2004 நவம்பரில் இந்த அநியாயம் இடம்பெற்ற போது பலூஜாவின் சனத்தொகை சுமார் மூன்று இலட்சமாகும். புனித றமழான் மாதத்தில் நோன்புடன் இருந்த மக்கள் மீது தான் இந்த மூர்க்கத்தனமான தாக்குதல் இடம்பெற்றது. மிக நவீன நேபாம் குண்டுகள், விஷ வாயு, தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் என்பன நோன்புடன் புனித ஈதுல் பித்ர் பெருநாளை எதிர்ப்பார்த்திருந்த மக்கள் மீது தாராளமாகப் பாவிக்கப்பட்டன. 


இத்தனைக்கும் அந்த மக்கள் செய்த ஒரே குற்றம் ஈராக் மீது அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தமைதான்.


அமெரிக்க படைகள் கொத்தணி குண்டுகளை பொழிந்தன. பொஸ்பரஸ் ஆயுதங்களும் பாவிக்க்பட்டன. இதனால் மோசமான தீ பரவி மக்களுக்கு மிக மோசமான எரிகாயங்களை ஏற்படுத்தியது. வியட்நாம் போருக்குப் பின் ஏற்பட்ட நகர மட்டத்திலான மிக மோசமான தாக்குதலாக இது அமைந்தது. பத்து தினங்களுக்குள் பலூஜா உருக்குலைந்து போனது. இந்தப் பூமியில் ஒரு நரகமாக அது காட்சி தந்தது. வீதிகள் தோறும் சிதைவடைந்த மனித உடல்களும் உடல் பாகங்களும் காணப்பட்டன. கட்டிடங்கள் பலவும் நாசமாக்கப்பட்டன. வரலாற்றில் பாரோ மன்னன், ஹிட்லர், முசலோனி ஆகியோர் மனித குலத்துக்கு இழைத்த குற்றங்களை விடவும் அவர்களால் நடத்தப்பட்ட இனப் படுகொலைகளை விடவும் இது கொடூரமானது என்று துருக்கி பாராளுமன்ற மனித உரிமை குழு அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


மிகவும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த இன படுகொலைகளும் அழிவுகளும் உலகுக்கு தெரியக் கூடாது என்பதில் புஷ்ஷும் அவரது சகாக்களும் மிகவும் அவதானமாக இருந்தனர். இந்த இன சம்ஹாரத்தை தொடங்குவதற்கு சில தினங்கள் முன்பதாக ஆஸ்பத்திரிகள் மீது குண்டுகளை வீசி வைத்தியர்களையும,; தாதிமாரையும், ஏனைய ஊழியர்களையும் கொன்று குவித்து ஆஸ்பத்திரிகளையும் தரைமட்டமாக்கினர். கொல்லப்படுபவர்கள் பற்றிய எண்ணிக்கையோ அல்லது பாவிக்கப்பட்ட ஆயுதங்கள் பற்றிய விவரமோ அல்லது ஏனைய விவரங்களோ வெளிவராமல் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். இந்தத் தாக்குதலுக்கு முன் 2003 ஏப்பிரலில் பலூஜா முஸ்லிம்கள் மீத நடத்தப்பட்ட இதே மாதிரியான ஒரு தாக்குதல் பற்றிய விவரங்கள் வெளிவந்திருந்ததன. 


அவை வைத்தியர்கள் தாதியர் மற்றும் சுகாதாரப் பிரிவினர் மூலம் தான் வெளிவந்திருந்தன. எனவே இந்தத் தாக்குதல் பற்றிய விவரங்கள் வெளிவரக் கூடாது என்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். ஊடகவியலாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த இன ஒழிப்பு தாக்குதலின் போது சமயத் தலைவர்களைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.


பாதுகாப்புக்காக பலூஜாவை விட்டு வெளியேறிய குடும்பங்கள் அமெரிக்கப் படைகளால் தடுக்கப்பட்டன. அவர்களை மீண்டும் தமது வீடுகளுக்கு அனுப்பி தாக்குதல்களுக்கு பலியாகும்படி செய்யப்பட்டது. இவர்களுள் பெரும்பாலானவர்கள் பின்னர் கொல்லப்பட்டனர். எப்படியோ காயங்களோடு உயிர் தப்பியவர்களுக்கு நீர், மின்சாரம், உணவு. மருத்துவ வசதி என்பன மறுக்கப்பட்டு அவர்கள் மரணத்தை தழுவச் செய்தனர். வீடு வீடாக சோதனை நடத்திய அமெரிக்க படையினர் வீடுகளின் கதவுகளை உடைத்து திறந்து ஆண்களை இழுத்துச் சென்றனர். பீதியால் நடுங்கிக் கொண்டும் பட்டினியால் வாடிக் கொண்டும் இருந்த பெண்களும் சிறுவர்களும் அதை எதிர்த்து குரல் எழுப்பவோ கூச்சலிடவோ கூட திராணி அற்ற அளவுக்கு நலிவுற்றிருந்தனர். இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவர்கள் எங்கே கொண்டு செல்லப்பட்டனர் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எவருக்கும் எதுவும் தெரியாது.


தொடர் பீரங்கித் தாக்குதல்கள், சுமார் இரண்டாயிரம் இறாத்தல் கொண்ட விமானக் குண்டுகள், விhனத்தில் இருந்து தரையைத் தாக்கும் ஏவுகணைகள், பாரிய அளவிலான யுத்த தாங்கிகளின் தாக்குதல்கள் என எல்லா விதமான தாக்குதல்களும் இங்கு இடம்பெற்றதாக நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.

 

2004 நவம்பரில் அமெரிக்கப் படைகளால் கற்பழிக்கப்பட்ட ஈராக்கின் பலூ10ஜா நகரின் அலங்கோலமான காட்சிகள்.


வீடுகள், வீட்டு மனை தொகுதிகள் உட்பட நகரில் இருந்த 120க்கும் அதிகமான பள்ளிவாசல்களில் அரைவாசிக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் ஒன்றில் பாரிய சேதமடைந்தன அல்லது முற்றாகத் தரை மட்டம் ஆக்கப்பட்டன. வீதிகளில் சிதறிக் கிடந்த மனித சடலங்கள் நாறி நாற்றம் எடுத்தன. அவற்றுள் பல பட்டினியால் பாதிக்கப்பட்ட தெரு நாய்களுக்கு இரையாகின. காயமடைந்த சிறுவர்கள் தாய்மாரின் கண்ணெதிரேலேயே மரணத்தை தழுவினர். தாய்மார் அந்தக் காட்சிகளை பலவந்தமாக காண வைக்கப்பட்டனர். அதன் பிறகு அவர்களே அவற்றை அடக்கமும் செய்தனர். பெண்களையும் வயதான ஆண்களையும் கூட நடு வீதிகளுக்கு இழுத்து வந்து சுட்டுக் கொன்றனர். அவர்களது உடல்களை பொறுப்பேற்க வந்தவர்களைக் கூட அமெரிக்கப் படையினர் விட்டு வைக்கவில்லை. அங்கு புஷ்ஷின் படையினரால் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை எவரும் ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது.


இந்த சம்பவங்களில் இருந்து உயிர் தப்பி அமெரிக்க கொடுமைகளை நினைவு கூறும் ஒரு ஈராக்கியர் காயமடைந்த மக்களை அமெரிக்க படையினர் வரிசையாகக் கிடத்தி அவர்கள் மீது யுத்த தாங்கிகளை பல தடவைகள் ஓட்டிச் சென்றதை தான் கண்ணால் கண்டதாகத் தெரிவித்துள்ளார். இவ்வாறு கொல்லப்பட்டவர்களை கூட்டமாக அள்ளி வந்து நகரின் உதைபந்தாட்ட மைதானத்தில் புதைத்துள்ளனர். தெருவில் காணப்படும் உடல்களை யாரும் அடையாளம் காணக் கூட அருகில் செல்ல முடியாது. அவ்வாறு செல்பவர்கள் அமெரிக்க குறிபார்த்து சுடும் பிரிவினரால் தூரத்தில் இருந்து இலக்கு வைக்கப்படட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் பல சடலங்கள் யூப்பிரடீஸ் நதியிலும் வீசப்பட்டன. யூப்பிரடீஸ் நதியை நீந்திக் கடந்து தப்ப முயன்றவர்களும் அமெரிக்கப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 


தாங்கள் போராளிகள் அல்ல என்பதைக் காட்ட வெள்ளை துணிகளை அசைத்துக் கொண்டு உயிர் தப்பலாம் என்ற நம்பிக்கையோடு வந்த வயோதிபப் பெண்களை கூட அமெரிக்க படையினர் விட்டு வைக்கவில்லை. நதியை நீந்திக் கடக்க முயன்ற அனைவரும் கரையோரத்தில் நின்ற அமெரிக்கப் படை வீரர்களால் பதம் பார்க்கப்பட்டனர். குடும்பம் குடும்பமாக கொத்து கொத்தாக மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். ஒரு சம்பவத்தில் மோதல்களில் இருந்து தப்பி நதியை நீந்தி கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டனர். தப்பிக்க முயன்ற காயம் அடைந்தவர்களையும் அவர்கள் தமது துப்பாக்கிக்கு இரையாக்கினர். 


பலூஜாவின் பள்ளிவாசல்கள் அனைத்துமே இரத்தக்கரை படிந்தததாகவும் துப்பாக்கி ரவைகள் பதம் பார்த்த அடையாளங்களைக் கொண்டதாகவுமே காணப்பட்டன. அந்தப் பள்ளிவாசல்களில் நிராயுதபாணிகளாக தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் கொல்லப்பட்டமையை உறுதி செய்வதாக இது அமைந்திருந்தது.


ஜோர்ஜ் புஷ்ஷின் இந்த கொடுமையான சாகசங்களை ஒரு மேலைத்தேய செய்தியாளர் இப்படி குறிப்பிட்டுள்ளார். 'சில மாவட்டங்களில் காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அது வீதிகள் தோரும் காணப்பட்டது. பக்தாத்துக்கு மேற்கே நாற்பது மைல் தூரத்தில் இருந்து இந்த துர்நாற்றத்தை உணர முடிந்தது. ஒருவார கால தரைமார்க்க சண்டைக்கு யுத்த தாங்கிகளும் ஹெலிகொப்டர்களும் பக்க பலமாக இருந்தன. 


இரண்டு மைல்களுக்கும் சற்று குறைவான அகலத்தையும் இரண்டு மைல்களுக்கு சற்று அதிகமான நீளத்தையும் கொண்டிருந்த நகரில் செறிந்து காணப்பட்ட மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்களின் வீடுகளும் வர்த்தக நிலையங்களும் அழிந்து போய்விட்டன. தெருக்கள் முழுவதும் உடைந்து போன கண்ணாடித் துண்டுகளும், செங்கற்களும் மனித எச்சங்களும், முறிந்து வீழ்ந்த மின்சாரக் கம்பிகளும், துப்பாக்கி ரவைகளின் எச்சங்களும் தான் காணப்பட்டன. எஞ்சியிருந்த சுவர்களை துப்பாக்கி ரவைகள் ஏற்படுத்திய சல்லடைகள் அலங்கரித்தன. வீடுகளினதும் கடைகளினதும் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. சடலங்கள் பல திறந்த வெளியில் கொட்டப்பட்டிருந்தன'


சில அறிக்கைகளின் படி வட கரோலினாவை தளமாகக் கொண்டு செயற்படும் பிளக்வோட்டர் என்ற கூலிப்படைக் கும்பல் பலூஜா படுகொலைகளுக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.


இதில் மிகவும் கொடுமையானது என்னவென்றால் இந்தப் பிராந்தியத்தில் மையம் கொண்டுள்ள கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் கைகோர்த்து அப்பாவி பலூஜா மக்கள் ஈவு இரக்கமற்ற அமெரிக்க யுத்த இயந்திரத்துக்கு பலியாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

பலூஜா நகரில் இடம்பெற்ற தாக்குதல்கள் ஐரோப்பா கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் நாசி படையெடுப்பு, 1939ல் வோர்ஸோ நகர் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதல்கள், 1940ல் ரொட்டர்டாம் நகர் மீது நடத்தப்பட்ட பயங்கர குண்டுத் தாக்குதல் என்பனவற்றை விட மிகவும் மோசமானது. அந்த சம்பவங்களின் போது கூட பலூஜாவில் இடம்பெற்றது போன்ற கொடுமைகள் இடம்பெறவில்லை.


ஈராக்கில் துல்லியமாக இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் பற்றிய எல்லா சம்பவங்களும் உலக மக்களின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டன.


இவ்வாறான ஒரு கொலைவெறித் தனமான தாக்குதல் நடத்தப்படும் அளவுக்கு பலூஜாவிலும் ஈராக்கின் ஏனைய பகுதிகளிலும் வாழும் மக்கள் செய்த குற்றங்கள் தான் என்ன? என்ற கேள்வி ஒரு அறிக்கையில் எழுப்பப்பட்டது. ஈராக்கிய மக்கள் தமது சொந்த நாட்டில் வாழும் ஒரே குற்றத்துக்காக அவர்கள் மீது இவ்வாறான தாக்குதல் நடத்திய அமெரிக்க இராணுவத்தின் செயற்பாட்டை எந்த வகையிலாவது நியாயப்படுத்த முடியுமா? மக்கள் மின்னல் வேகத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்றைய யுகத்தில் நடந்தது என்ன என்பதை அறிந்திருந்தும் கூட உலகம் அமைதி காத்ததை நம்ப முடியாமல் இருக்கின்றது. பலூஜா பற்றி செய்திகள் ஒரு சில வாரங்களில் செய்தித் தலைப்புக்களில் இருந்து மறைந்து போய் விட்டன.


ஆனால் என்றாவது ஒருநாள் ஈராக்கியர்களால் இந்த வரலாறு எழுதப்படுமானால் இன்னொரு கார்னிகாவை நாம் காணக் கூடியதாக இருக்கும். ஜோர்ஜ் புஷ் இன்னமும் சுதந்திரமாக வாழுகின்றார். சர்வதேச நீதி எங்கே???


குறிப்பு :  புரநசniஉய. என்பது ஸ்பெயினின் பாஸ்க் பிராந்தியத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகர் மீது ஜெர்மன் நடத்திய கொடூரமான குண்டுத் தாக்குதலை சித்தரிக்கும் வகையில் 1937ம் ஆண்டு பிரபல ஓவியர் பெப்லோ பிகாஸோ வரைந்த கறுப்பு வெள்ளையிலான ஓவியம் (ழுடை pயiவெiபெ) தான் கார்னிகா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. இது பிக்காஸோ வரைந்த மிகச் சிறந்த ஓவியமாகவும், மிகச் சிறந்த யுத்த எதிர்ப்பு ஓவியமாகவும் கருதப்படுகின்றது. இன்று வரை இது ஸ்பெய்னின் மட்ரிட் நகரில் உள்ள ஒரு நூதனசாலையில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.



No comments

Powered by Blogger.