Header Ads



அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு வர, பலர் காத்திருக்கிறார்கள் - சஜித் தெரிவிப்பு


ஏலத்திற்கு விலைபோகும் உறுப்பினர்கள் எம்மிடம் இல்லை. எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, அரசாங்கத்திலிருந்து எதிர்க்கட்சிக்கு வருவதற்கே பலர் காத்திருப்பதாகவும், கட்சி தாவல் செய்தி கேட்டு முன்னைய எதிர்க்கட்சித் தலைவர்கள் தமது உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ள சிங்கபூருக்கு அனுப்பியது போன்று தமக்கு அத்தகைய தேவைப்பாடு இல்லை எனவும்,ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏலத்திற்கு விலைபோக மாட்டார்கள் என தான் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.


தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக போலிச் செய்திகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டு,கோயபல்ஸின் தத்துவத்திற்கு அமைய போலிச் செய்திகளை மக்கள் மனதில் உண்மையென நிலைநிறுத்தும் சதியில் கூடிய ஈடுபாட்டுடன்  செயற்பட்டு வருவதாகவும்,இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெருமளவிலான உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைவார்கள் என்று வரும்  பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


ஆனால் சந்திம விரக்கொடி மற்றும் ஜயந்த ஹேரத் போன்ற மொட்டுவைச் சேர்ந்த குழுவினர் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளனர் என்பதே பாராளுமன்றத்தில் உண்மையான நிலைப்பாடாகும் எனவும்,இன்னும் அதிகமானோர் எதிர்க்கட்சியில் அமரவுள்ளனர் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இந்த உண்மை நிலையை மறைத்து அரசாங்கம் பொய்களை புனைந்து கொண்டு,நாட்டிற்கு ஒரே பதிலாகவும் மாற்று அணியாகவும் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


செய்திகளை தாமாகவே கட்டமைத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் இந்த முயற்சியை தோற்கடிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை தவிர்த்து எதிர்க்கட்சிக்கு வந்தாலும்,அவ்வாறு வரும் சகலரையும் இணைத்துக்கொள்ள எதிர்க்கட்சி தயாராக இல்லை எனவும்,அவ்வாறு வருபவர்கள் ராஜபக்சர்களின் அடிமைகளாக இருக்கக் கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.


மக்களுக்கு நிவாரணம் வழங்க பணமில்லாத அரசாங்கத்திடம் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் அளவுக்கு பணம் இருப்பதாகவும்,இவ்வாறான சீர்கெட்ட அரசியல் கலாசாரத்தைக் கொண்ட இந்த அரசாங்கத்திடம் தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.


மக்களின் தேவைகளுக்கு பணமில்லாத அரசாங்கத்திடம் உறுப்பினர்களை பேரம் பேசுவதற்கு பணமுள்ளதாகவும்,இந்நாடு உண்மையிலையே வங்குரோத்தடைய ஊழல் மிக்க குடும்பமொன்றின் சீர்கெட்ட ஆட்சி நிர்வாகமே காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் தலா 2000 இலட்சம் இரைத்து உறுப்பினர்களை கட்சி தாவ செய்ய முடியும் என அரசாங்கம் நம்பினாலும்,ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பணத்திற்காக தங்கள் சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள் எனவும்,பண்டோரா பத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தை பயன்படுத்தி உறுப்பினர்களை இரையாக்கிக் கொள்ள முடியாது எனவும்,கடந்த ஆண்டு நடந்த பொதுமக்கள் போராட்டத்தை மறந்திட  வேண்டாம் எனவும்,மக்களின் எதிர்பார்ப்புகளை சிதைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடமளிக்க மாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


பணத்திற்கு அடிபணியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை எனவும்,எமது உறுப்பினர்கள் மக்கள் ஆணைக்கு மாத்திரமே அடிபணிவர் எனவும்,எமது பாராளுமன்ற உறுப்பினர்களை முடிந்தால் பணம் கொடுத்து வாங்குங்கள் என சவால் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை பிரயோகித்து மக்களின் மனித உரிமைகளை மீறி மக்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகவும்,தற்போது புதிதாக தொழிற்சங்கத்தினரையும்,மாணவ போராட்டக்காரர்களையும் பங்கரவாதிகளாக அடையாளப்படுத்துவதாகவும்,கோட்டாபய ராஜபக்சவை விரட்ட வீதிக்கு இறங்கிய இலட்சக்கணக்கான மக்களையும் பயங்கரவாதிகளாக முத்திரை குத்தி இதனூடாக மாதக்கணக்காக சிறையிலடைக்க முற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று மாலை (1) கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.