தமிழ் – முஸ்லிம் புரிந்துணர்வை ஏற்படுத்துவோம்
- யாழ் அஸீம் -
தலைமுறை தலைமுறையாக வடக்கு மண்ணில் வாழ்ந்த தமிழ்- முஸ்லிம் மக்களிடையே வலுவான பிணைப்புக்களும், உறவுகளும் தொடர்ந்து வந்திருக்கின்றன. மத ரீதியாக மட்டும் இவர்கள் வேறுபட்டாலும் வேற்றுமைக்குள் ஒற்றுமையை காட்டும் பல அம்சங்கள் இரு தரப்பினரிடையேயும் காணப்படுகின்றன. திருமணங்களில் தாலி கட்டுதல், மாலையிடுதல், திருமணப் பந்திமுறை, சீதனம் போன்றன யாழ் முஸ்லிம் மக்களிடம் காணப்பட்ட, தமிழ் மக்களின் கலாச்சாரப் பண்புகளாகும்.
இத்தகைய நெருக்கமான உறவுகளின் காரணமாகவே, தாயக மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட வேளையிலும், தமிழ் மக்கள் மீது எவ்வித கசப்புணர்வையும், பகைமையையும் முஸ்லிம்கள் கொண்டிருக்கவில்லை. மாறாக, தாம் வாழ்ந்த பிரதேசங்களில் தமிழ் மக்களுடன் நல்லுறவை பேணி நடந்தனர். பாரம்பரிய மண்ணிலே தோழமையுடன் வாழ்ந்த நண்பர்கள் நீண்ட நாட்களின் பின் சந்திக்க நேரும் பொழுதெல்லாம் கட்டியணைத்துக் கண்ணீர் சிந்தி தம் இனிய நட்பை மீட்டிக்கொள்வர்.
வாழ்விழந்த இம்மக்கள் மீள்குடியேற்றங்கள் செய்யப்படுவதற்கும் இம்மக்களின் இருப்புக்கள் புனரமைப்புச் செய்யப்படுவதற்கும் ஆவன செய்தல் போல் நீண்ட இடைவெளியின் பின் இணைந்திருக்கும் தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையிலான உறவையும் சமாதானத்தையும் வலுப்படுத்தி ஐக்கியத்துடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு வழிவகுத்தல் சகலரதும் கடமையாகும். மீண்டும் துளிர்க்கும் தமிழ்-முஸ்லிம் உறவுக்கு உரமிட்டு வளர்ப்பது சமாதானத்தை விரும்பும் யாவரதும் எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அண்மையில் சில தமிழ் அரசியல்வாதிகளின் பேச்சுக்களும் அறிக்கைகளும் தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசலையும் கசப்புணர்வையும் ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருப்பது வேதனைக்குரியதாகும்.
தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசலை
ஏற்படுத்துவது யார்?
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப் பள்ளி பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள 100 ஏக்கர் காணியை 400 முஸ்லிம் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்க போவதாக அறிவித்திருந்தார். இச்சந்தர்ப்பத்தில் தமிழர் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அறிக்கையொன்றை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது,
“கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளி செயலகப் பிரதேசத்தில் அமைந்துள்ள 100 ஏக்கர் காணிகளில் முஸ்லிம்களை குடியேற்றுவதற்கான திட்டமொன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செயற்படுத்தப் போவதாக அறிகிறேன்.
தமிழ் – முஸ்லிம் மக்களிடையே பிரச்சினையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே ரணில் விக்கிரமசிங்க இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
நான் முஸ்லிம் சமூகத்திடம் பகிரங்கமாக ஒரு வேண்டுகோளை விடுக்கிறேன். தமிழ் – முஸ்லிம் மக்களிடையே இன்னும் சுமுகமான உறவு நிலை ஏற்படாத சூழல் காணப்படுகிறது. இரு சாராரிடமும் காயங்கள் வேரூன்றிப் போயுள்ளன.
முஸ்லிம்கள் தம்மை விடுதலைப்புலிகள் அனுப்பினார்கள் என்று ஒரு செய்தியை சொல்லிக்கொண்டாலும் அதே நேரம் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் 2004ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமை மாநாட்டில் கோஷம் எழுப்பிய நாட்களும் உண்டு. அதேபோல் ஹிஸ்புல்லா, தமிழ் மக்களுடைய காணிகளை பறித்தேன். ஆயுதக்குழுக்களை உருவாக்கினேன் என்று கூறிய விடயங்களும் உண்டு. அதேநேரம் கல்முனை பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதில் முஸ்லிம் காங்கிரஸும் சில முஸ்லிம் சகோதரர்களும் தடையாக இருக்கின்றார்கள். ஏப்ரல் 21 மனித வெடிகுண்டு தாக்குதலால் தேவாலயங்களில் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள்தான். குண்டு வெடித்தவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள்தான். அந்த ஆறாத காயங்கள் இன்னும் உண்டு. எனவே முஸ்லிம்களிடம் பகிரங்கமாக வேண்டிக்கொள்கின்றேன். தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க முயல்கின்ற இத்திட்டத்திற்கு துணை போகவேண்டாம்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 33 வருடங்களாகியும் இன்னும் முழுமையான மீள்குடியேற்றம் நடைபெறாமல் துயரப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் 400 குடும்பங்களுக்காவது மீள்குடியேற்றம் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தையும் தடுக்க முயல்கிறாரா? என்றுதான் இங்கு சிந்திக்கவேண்டியும் உள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ்- முஸ்லிம்களிடையே விரிசலை ஏற்படுத்தும் நோக்கமாகக்கொண்டே இத்திட்டத்தை கொண்டு வருகின்றார் என கூறும் அவர் இச்சந்தர்ப்பத்தில் தமிழ் -முஸ்லிம்களிடையே விரிசலை ஏற்படுத்தாத வகையில் வடமாகாண முஸ்லிம் அகதிகளின், வடமாகாண முஸ்லிம் அகதிகளின் அவலநிலையை தமிழ் மக்களுக்கு விளக்கும் வகையாக, தமிழ் – முஸ்லிம் விரிசல் ஏற்படாதவாறு அறிக்கை விடுவதுதான் தமிழ் -முஸ்லிம் உறவை விரும்பும் ஒருவருடைய செயற்பாடாக இருக்கும். ஆனால், அவரது அறிக்கையின் படி தமிழ் – முஸ்லிம்களிடையே இன்றும் சுமுகமான உறவுநிலை இல்லை. ஆறாத காயங்கள் வேரூன்றிப் போயுள்ளன என்று கூறுவதுடன் முஸ்லிம்கள் மீது தமிழ் மக்களின் பகைமையை அதிகரிக்கும் வண்ணம் கிழக்கு மாகாண அரசியல் பற்றி விமர்சிப்பது தமிழ் முஸ்லிம்களிடையே விரிசலை ஏற்படுத்துமா? புரிந்துணர்வை ஏற்படுத்துமா? என்பதை சிறீதரன் எம்.பி புரிந்துகொள்ளவேண்டும். அத்துடன் ஏப்ரல்-21 தாக்குதலில் குண்டு வெடித்தவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் கொல்லப்பட்டவர்கள் தமிழர்கள்தான் எனக் கூறுவதன் மூலம் விரிசலை ஏற்படுத்த முனைகிறாரா? சஹ்ரானை பயன்படுத்தி குண்டுத்தாக்குதல்களை நடாத்திய சூத்திரதாரிகள் யார் என்பது இப்போது பகிரங்கமாகியுள்ள வேளையிலும் அதனையும் முஸ்லிம்கள் தலையில் இட்டு தமிழ் முஸ்லிம் விரிசலை ஏற்படுத்திட பச்சிலைப்பள்ளியில் 400 முஸ்லிம் குடும்பங்களின் குடியேற்றத்தை தடுக்க முயல்கிறாரா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் சிறீதர் இவ்வாறான தமிழ் முஸ்லிம் விரிசலை தோற்றுவிக்கும் கருத்துக்களை தவிர்த்து முஸ்லிம்களுக்கு காணிகள் வழங்குவது போல் தமிழ் மக்களுக்கும் காணிகள் வழங்கும் படி கோருவதுதான் நியாயம். அதனை விடுத்து இவ்வாறான கருத்துக்களை தமிழ் மக்களுக்கு கூறுவதன் மூலம் முஸ்லிம்கள் பற்றி தவறான அபிப்பிராயத்தை உருவாக்குவதுடன் மூன்று தசாப்த கால அகதி வாழ்வை அனுபவிக்கும் வடபுல முஸ்லிம்களுக்கு கிடைக்கவிருக்கும் காணிகளை கிடைக்காமல் தடுப்பதே அவரது அறிக்கையின் உள்நோக்கம் ஆகும்.
கிளிநொச்சி முஸ்லிம் குடும்பங்களுக்கு வீடு வழங்க ஜனாதிபதி எடுத்துச்செல்லும் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் கருத்தை வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அறிக்கை பற்றி பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் செயலாளர் நைசர் வெளியிட்ட கருத்துக்களும் கவனிக்கத்தக்கவையாகும். இந்நிகழ்வில் அவர் கூறியது
“தமிழ் மக்கள் தமது உரிமைக்காக போராடி வருகின்றார்கள். அவர்களின் போராட்டங்களை நாம் ஒருபோதும் கொச்சைப்படுத்தியது கிடையாது. அதனை அவர்களின் உரிமை சார்ந்த விடயமாகவே பார்க்கின்றோம். இரண்டு வருடங்கள் முகாம்களில் வாழ்ந்த அவர்களுக்கு துரித கதியில் மீள்குடியேற்றமும் அவர்களுக்கு தேவையான அத்தனை அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், 32 வருடங்கள் தமது தாயக மண்ணில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் விடயத்தில் யாரும் அக்கறை கொள்ளவில்லை. அவர்களின் மீள்குடியேற்ற விடயத்தில் எந்த அரசாங்கமும் கவனம் செலுத்தவில்லை. இந்த அரசாங்கத்தில் இப்படியானதொரு மீள்குடியேற்றம் நடைபெறக்கூடிய சாத்தியம் இருக்கும் வேளையில் இதனை தடுக்க முயல்வது வேதனையளிக்கிறது.
யாழ் – கிளிநொச்சி சம்மேளனத்தின் செயலாளர் அனீஸ் இதுபற்றி கருத்து தெரிவிக்கையில் “1990ஆம் ஆண்டு வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டபோது வடக்கு முஸ்லிம் மக்கள் ஒரு இலட்சமாக இருந்தவர்கள் இன்று 32 வருடங்களின் பின் மூன்று இலட்சமாக அதிகரித்துள்ளனர். யாழ் மாவட்டத்தில் 2600 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு விண்ணப்பித்த போதிலும் 250 குடும்பங்களே தெரிவு செய்யப்பட்டன. இந்திய வீடமைப்புத்திட்டத்தில் 317 பேர் விண்ணப்பித்தாலும் 51 குடும்பங்களே தெரிவு செய்யப்பட்டனர். இத்தனை வருடங்களாக மீள்குடியேற்றம் செய்யப்படாது அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் இம்மக்களுக்கு பச்சிலைப்பள்ளியில் 400 குடும்பங்களுக்கு மட்டும் மீள்குடியேற்றம் செய்யப்போவதாக ஜனாதிபதி அறிவித்ததற்கு இம் மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் முஸ்லிம் – தமிழ் விரிசலை உருவாக்க கூடிய வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பேசியிருப்பது நியாயமற்றதும் வேதனையளிக்க கூடியதும் என குறிப்பிட்டுள்ளார்.
மேற்கூறப்பட்ட அறிக்கைகளும் செயற்பாடுகளும் சீரடைந்து வரும் தமிழ் – முஸ்லிம் உறவை சிதைக்குமே தவிர சீர்படுத்த உதவாது என்பதை தமிழ் -முஸ்லிம் மக்களும் அரசியல்வாதிகளும் சிந்தித்து செயற்பட வேண்டும்.
உண்மை வரலாற்றை உரைப்போம்
அண்மையில் டான் தமிழ் ஒளி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஸ்பொட் லைட்” நிகழ்ச்சியில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே. சம்பந்தன் “நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் இஸ்லாமிய பாபா ஒருவரின் சமாதி இருக்கின்றது. இதனால் அங்கு விளக்கு எரிக்கப்படுகின்றது” என தெரிவித்திருந்தார்.
இச்சந்தர்ப்பத்தில் இதற்கு பதிலளிக்கும் விதமாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவருமான சீ.வீ.கே சிவஞானம், “நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் இஸ்லாமிய பாபா ஒருவரின் சமாதி இருக்கின்றது என்று கூறப்படும் கருத்து முழுமையாக தவறானது” என்று தெரிவித்திருந்தார். இச்செய்தி கடந்த 17.03.2023 ஈழநாடு பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
அவர் மேலும் குறிப்பிடும்போது “நல்லூர் ஆலயத்தின் உள்ளே பாபாவின் சமாதி இருப்பதாக கூறப்படுவது தவறான கருத்தாகும். நல்லூரின் அருகே மேற்குப்பகுதியில் முன்னைய காலத்தில் ஒரு சில குடும்பங்கள் இருந்தன. பின்னர் அவர்கள் இடம்பெயர்ந்து சோனக தெருவில் குடியேறினர்.
நல்லூரின் மேற்குத்திசையில் இஸ்லாமியர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர். ஆனால், அங்கு பாபாவின் சமாதி உள்ளது. அதற்காகவே விளக்கு எரிக்கப்படுகின்றது என்று கூறுவது முற்றிலும் தவறானது.
முன்னர் முஸ்லிம் குடும்பம் ஒன்று கற்பூரம் விற்கும் உரிமையை கொண்டிருந்தது. அதற்கு ஆலயம் அனுமதி வழங்கி இருந்தது. இப்போது அந்த குடும்பம் இல்லை. 1950களில் நல்லூரின் மேற்குப்பகுதியில் முஸ்லிம்கள் தொழுகையை நடாத்தினர். இதனை நான் நேரில் கண்டிருக்கின்றேன். மற்றும்படி அங்கு சமாதி இருக்கின்றது. விளக்கு எரிக்கப்படுகின்றது என்பதல்லாம் தவறானவை என குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு சமூகம் தன் வரலாற்றைப் பற்றி அறியவில்லையோ அந்த சமூகம் திட்டமிடப்படாத எதிர்காலத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது எனலாம். கடந்த கால அனுபவங்களில் இருந்தும் வரலாற்றிலிருந்தும் நிகழ்காலத்தையும் நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்தையும் திட்டமிடப்படுவதற்கு வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களே உதவுகின்றன.
“மக்கள் தமது வரலாற்றை முதுகில் சுமந்த வண்ணமே முன்னோக்கிச் செல்கின்றனர். “The people more forword with their history on their back” என்றார் புரட்சிக்கவிஞர் அல்லாமா இக்பால்.
எனவே எமது நிகழ்காலம் பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களையும் தவறுகளையும் நுணுக்கமாக ஆராய்ந்து அவற்றை திருத்தியவர்களாக பயணிக்கவேண்டும். அந்த வகையில் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானமின் கூற்றிலுள்ள தவறினை சுட்டிக்காட்டவேண்டியது அவசியமாகும். “நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் இஸ்லாமிய பாபா ஒருவரின் சமாதி இருக்கின்றது. இதன் காரணமாகவே விளக்கு எரிக்கப்படுகின்றது என்பது தவறானது” என்ற அவரது கூற்றின்படி நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடத்தில் பாபா ஒருவரின் சமாதி இல்லை என வலிறுத்துகின்றது.
சீ.வீ.கே சிவஞானம் யாழ்ப்பாண முஸ்லிம்களுடன் நெருக்கமான உறவு கொண்டவர். இவ்வாறான தவறான கருத்துக்களாக நாம் சுட்டிக்காட்டுவதன் மூலம் எமது உறவு மேலும் வலுப்பெற வேண்டும் என்ற நம்பிக்கையில் பணிவுடன் பின்வரும் வரலாற்று ஆதாரங்களை சுட்டிக்காட்ட விளைகிறேன்.
பிரபல எழுத்தாளரும் நாவலாசிரியருமான செங்கை ஆழியான் என்ற புனைப்பெயர் கொண்ட கந்தையா குணராசாவுடைய “நல்லூர் கந்தசுவாமி வரலாறு” என்ற வரலாற்று ஆய்வு நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
“கி.பி 1591இல் 3ஆவது தடவையாக போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்தபோது தமிழர் படையும் பறங்கியர் படையும் தற்போதையை ஆலயம் அமைந்துள்ள குருக்கள் வளவில் ஒன்றையொன்று எதிர்கொண்டன. அப்போதைய காலகட்டத்தில் முஸ்லிம்கள் குருக்கள் வளவில் குடியேறி நின்றனர். பறங்கிய படைக்கும் தமிழர்க்கும் நிகழ்ந்த சண்டையில் சிக்கந்தர் என பெயர் கொண்ட சைவர்களாலும் முஸ்லிம்களாலும் மதிக்கப்பெற்ற அச்சர்வ மத யோகியும் உயிரிழக்க நேர்ந்தது. யோகியாருக்கான சமாதி ஒன்றும் முஸ்லிம்களால் குருக்கள் வளவில் கட்டப்பட்டது. அக்காலகட்டத்தில் இன்றைய நல்லூர் கந்தசுவாமி கோயில் அமைந்துள்ள குருக்கள் வளவில் முஸ்லிம்கள் குடியேறி இருந்தனர் என அறியப்படுகினது. (நல்லூர் கந்தசுவாமி கோயில் – க.குணராசா பக்:20)
மேற்படி செங்கை ஆழியானின் நூலில் நல்லூர் ஆலயம் அமைந்துள்ள குருக்கள் வளவில் உயிரிழந்த யோகியாருக்கான சமாதி ஒன்று முஸ்லிம்களால் கட்டப்பட்டது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நூலில் பக்கம் 31,32இல் இடம்பெற்றுள்ள பந்தியில் “ஆகவே குருக்கள் வளவிலிருந்து வாழ்ந்த முஸ்லிம்கள் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னரே அவ்விடத்தில் கந்தசுவாமி கோயிலை நிறுவ முடிந்துள்ளது. பின்னர் அவ்விடத்தை பெருப்பித்து கட்டும்போது, அங்கிருந்து இறந்து அடக்கம் செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் பெரியாருடைய சமாதி அக்கோயிலின் உள்வீதிக்குள் அகப்பட்டபடியால், அதையிட்டு முஸ்லிம்கள் கலகம் செய்தனர். பின்பு கோயில் மேற்கு வீதியில் வாயில் வைத்து சமாதியை அணுகி அவர்கள் வணங்கிவர இடம் கொடுத்தததால் கலகம் ஒருவாறு தணிந்தது. அதற்கு சாட்சியாக அவ்வாயிற் கதவு இன்னும் இருப்பதும் அதனருகே வெளிப்புறம் பந்தர்க்குள் சிலகாலத்தின் முன்வரை தொழுகை நடத்தி வந்ததும் இதனை வலியுறுத்தும். (இராசநாயகம் – செ-1933)
நல்லூர் கந்தசுவாமி கோயில் க.குணராசா (பக்-32)
மேற்படி வரலாற்றுக் குறிப்புக்களின் படி நல்லூர் கந்தசுவாமி கோயில் அமைந்துள்ள இடத்தில் ஒரு முஸ்லிம் பெரியாருடைய சமாதி இருந்தது என்பதும் அதன் வாயிற் கதவு இன்றும் இருப்பதுவும் நிரூபணமாகின்றது. தமிழ்-முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற வகையில் மிக அவதானமாக நாம் செயற்பட வேண்டும் என்பது முக்கியம். எனினும் வரலாற்றில் ஒரு தவறான கூற்று முன்வைக்கப்படும்போது அதனைத் தொடராமல் ஆதாரத்துடன் எடுத்துக்காட்ட வேண்டியது நம் ஒவ்வொருடைய சமூகப்பொறுப்பாகும்.
தமிழ் -முஸ்லிம் மக்களிடையே யாழ்ப்பாணத்தில் நிலவிய நீண்ட கால நட்புறவு என்றும் தொடர வேண்டும் என்பதே யாவரினதும் எதிர்பார்ப்பும் விருப்பமுமாகும்.
யாழ் முஸ்லிம்கள் தமிழ் மக்களின் இன்பத்திலும் துயரத்திலும் அவர்களது உரிமைப்போராட்டத்திலும் கூட இணைந்திருந்தனர். 1961 இல் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது முஸ்லிம்களின் நோன்பு காலமாக இருந்தது. எனினும் முஸ்லிம்களும் நோன்புடன் பேரார்வத்துடன் சத்தியாக்கிரகத்தில் இணைந்துகொண்டனர். இந்நிகழ்வானது அச்சந்தர்ப்பத்தில் செல்வநாயகம் போன்ற தலைவர்களால் கௌரவிக்கப்பட்டது.
மேலும் யாழ் நகரினுள் போர்த்துக்கேயர் நுழைந்தவேளையில் தமிழ் மன்னர்கள் அவர்களை எதிர்த்து போராடினர். அவ்வேளையில் போர்த்துக்கேயருக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தில் முஸ்லிம்களும் இணைந்துகொண்டனர். இதனை பேராசிரியர் எஸ். நித்தியானந்தனும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யாழ் மாநகர சபையில் இரு முஸ்லிம் உறுப்பினர்களும் மிகக்கூடுதலான தமிழ் உறுப்பினர்களும் இருந்தும் கூட பேதமற்ற தமிழ் முஸ்லிம் உறவின் காரணமாகவும் தமிழ் மக்களின் நன்மதிப்பை பெற்றதன் காரணமாகவும் 1955ஆண்டு யாழ்நகரின் முதலாவது முஸ்லிம் மேயராக எம். சுல்தான் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ் மீது மிகப்பற்றுள்ளவராகவும் தமிழை அரசகரும மொழியாக்கவேண்டும் என்ற கொள்கையிலும் மிக உறுதியாக இருந்த எம். எம் சுல்தான் 1955இல் மொழிப்பிரச்சினை பற்றி ஆராய்வதற்காக கூட்டப்பட்ட முஸ்லிம் லீக் மாநாட்டில் கலந்துகொண்டு “தமிழே முஸ்லிம்களின் தாய்மொழி என்றும் தமிழ் சிங்கள மொழியுடன் சம அந்தஸ்த்து பெறவேண்டும் எனவும் வலியுறுத்தினார். இதற்கு பெரும்பான்மையினரின் ஆதரவு கிடைக்காததன் காரணமாக சிங்கள மொழியே அரசகரும மொழியாக இருக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே மேயர் சுல்தான் இந்த தீர்மானத்தில் கையெழுத்திடாமல் தமிழுக்காக உரிமைக்குரல் எழுப்பி அம்மகாநாட்டை விட்டு வெளியேறினார். இச்செய்தியானது சகல பத்திரிகைகளிலும் முன்பக்க செய்தியாக பிரசுரமாகியிருந்தது. அத்துடன் வெளிநடப்பு செய்து யாழ்ப்பாணம் திரும்பிய சுல்தான் அவர்களுக்கு யாழ் புகையிரத நிலையத்தில் தமிழ் மக்களாலும் மாநகரசபை உறுப்பினார்களாலும் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இதேபோன்று தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைவர்களும் கூட முஸ்லிம்களுடன் நல்லுறவையும் பேணி வந்துள்ளனர். தமிழ் அரசியல் தலைவர்களான தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம், ஜீ.ஜீ பொன்னம்பலம் ஆகியோர் பல்வேறு சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்து வந்துள்ளனர். புத்தளம் பள்ளிவாசலினுள் நுழைந்த பொலிஸார் முஸ்லிம்களை சுட்டபோது தந்தை செல்வநாயகம் பாராளுமன்றத்தில் துணிச்சலாக கண்டித்து குரல் கொடுத்தார்.
மேலும் மறைந்த, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு. சிவசிதம்பரம் வட மாகாணத்திலிருந்து விடுதலைப்புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வேளையில் “வடமாகாண முஸ்லிம்கள் தமது தாயக மண்ணுக்கு திரும்பும் வரை என் பாதமும் யாழ் மண்ணை மதிக்காது” என கூறினார். அவ்வாறே அவர் உயிர் வாழும் வரை யாழ்ப்பாணம் செல்லவில்லை. அவர் இறந்த பின்னரே அவரது பூதவுடல் யாழ் மண்ணுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இவ்வாறாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே காணப்படும் நீண்டகால நட்புறவு இறுக்கமானது. புனிதமானது. இடையில் துரதிஷ்டவசமாக ஏற்பட்ட இடைவெளியை மறந்து தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மீண்டும் நல்லுறவை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.
எனவே, இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறுகிய நோக்கங்களுக்காக, தமிழ் முஸ்லிம் உறவுகளைச் சிதைக்கும் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து அம்மக்களிடையே காணப்படும் தவறான அபிப்பிராயங்களை நீக்கி, புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டியது தலைவர்களினதும் புத்திஜீவிகளினதும் கடமையாகும்.-VIdivelli
Post a Comment