சஹ்ரானின் மைத்துனரும், அவரது மனைவியும் கைது - கொச்சிக்கடையில் சம்பவம்
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களின் முக்கியஸ்தர்களில் ஒருவராக கருதப்பட்டவரும் அவ்வியக்கத்தின் தலைவர் எனக்கூறப்பட்டவருமான சஹ்ரான் ஹாசிமின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்ட 3 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன்பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அவர், குளியாப்பிட்டிய கட்டுபொத்த பிரதேசத்தில் இருந்து நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் உள்ள அவரது மனைவின் பெற்றோரின் வீட்டுக்கு வருகைதந்து கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இந்த நபர், சஹ்ரான் ஹாசிமின் மனைவியான பாத்திமா என்பவருடைய சகோதரர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வு தகவல்களின் பிரகாரம், சந்தேகத்தின் பேரில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்த சகோதரர் 2019ஆம் ஆண்டில் இருந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 2022 செப்டெம்பர் 23ஆம் திகதி மேல்நீதிமன்றத்தின் ஊடாக பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்றும் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
Post a Comment