Header Ads



"அரசாங்கம் தனது இருப்பை, பாதுகாக்க கையாளும் உபாயம்"

 
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மேயர் வேட்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்களின் சாரம்சம்.


தற்போது விக்கிரமசிங்க ராஜபக்ச அரசாங்கம்,மக்களை ஒடுக்குவது குறித்தும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமை,கருத்து தெரிவிக்கும் உரிமை,சமூக செயற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆர்வலர்கள் சமூக வலைதளங்கள் போன்றவற்றையும் வெகுஜன ஊடகங்களையும் ஒடுக்கும் முகமாக நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலத்தை கொண்டு வர தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.


மறுபுறம்,அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதித்துறைக்கு எதிராக நீதிபதிகளை பாராளுமன்றத்திற்கு வரவழைத்து வரப்பிரசாத பிரச்சினைகளை முன்வைத்து விசாரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றினர். ஜனநாயகத்திற்கு எதிராக சமூகத்தில் எழும் குரலை நசுக்குவதற்கும் அரசாங்கத்திற்கு எதிரான குரலை நசுக்குவதற்கும் அரசாங்கத்தின் சர்வாதிகார அதிகாரத்தைப் பயன்படுத்தி இருப்பதை இதன் மூலம் நாம் காணமுடிகிறது.


இதன் நீட்சியாக,மார்ச் 17 அன்று,பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைக்  கொண்டுவருவதற்கான அடிப்படை வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.அந்தச் சட்டத்தைப் பார்க்கும் போது இந்நாட்டில் 1979 இல் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதச் சட்டம் 44 வருடங்களாக நடைமுறையில் உள்ளதை புரிந்து கொள்ளலாம்.அந்தச் சட்டம் இன்னும் அமுலில் உள்ளது.  சமீபகாலமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இந்த சட்டமூலம் குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.அந்தச் சட்டத்தின் ஊடாக அண்மைக்காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பயங்கரவாதச் சட்டத்தைப் பயன்படுத்தி பல தடவைகள் தமது எதிர்தரப்பினரை கைதுசெய்து தடுத்து வைத்து அவர்களை அடக்கியமை வரலாறு நெடுகிலும் அறியப்படுகிறது.இந்தச் சட்டத்தின் மூலம் குற்றம் சாட்டப்பட்ட பெருமளவானோர் இன்னும் விளக்கமறியலில் உள்ளனர்,அவர்களுக்கு இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டதாக இல்லை.சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள்,ஐக்கிய நாடுகள் சபை,ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல அமைப்புகள் தற்போதுள்ள பயங்கரவாதச் சட்டத்தை மாற்றுமாறு இலங்கை அரசுக்கு தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்துள்ளன.


ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு வழங்கிய ஜி எஸ் பி பிளஸ் வரிச் சலுகையை கூட இந்தச் சட்டத்தினால் இழக்கும் நிலை அண்மையில் உருவாகியது.இதனால்தான் இந்த சட்டத்தை மாற்றி சர்வதேச அளவில் ஏற்புடமை தன்மை வாய்ந்த சட்டமாக மாற்ற 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை அன்றைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.ஆனால் அந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் அந்தச் சட்டத்தில் தேவையான திருத்தங்களோ அல்லது புதிய சட்டமோ கொண்டுவரப்பட்டு அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.


அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் அரசியல் ரீதியாக தனக்கு எதிரான தரப்பினரை ஒடுக்க தற்போதைய சட்டத்தை பயன்படுத்தினார்.இவ்வாறானதொரு சூழ்நிலையில்,தற்போதைய சட்டத்தை மாற்றியமைப்பதாக சர்வதேச மற்றும் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் நாடுகளுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதியாகும்.இதற்கு பதிலாக புதிய சட்டமூலம் முன்வைக்கப்படும் என்று கூறப்பட்டது,அதன்படி தற்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வர அரசாங்கம் முயற்சித்து வருகிறது. 


ஆனால் பிரச்சினை என்னவெனில் தற்போதைய அமுலிலுள்ள பயங்கரவாத சட்டமூலத்திற்கு அப்பாற்பட்ட சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டிருப்பதை காணமுடிகிறது. அதைவிட அபாயகரமான விடயம் என்னவென்றால்,மக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் சட்டமூலத்தையே கொண்டுவர முயல்கிறார்கள்.


அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு ஒன்று உறுதியளித்து,ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இன்னொன்றை வாக்குறுதியளித்து,சர்வதேச அமைப்புகளுக்கு மற்றுமொன்றை உறுதியளித்து,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவிடம் பிரிதொன்றையும் உறுதியளித்து இவை எல்லாவற்றிற்கும் முற்றிலும் மாறுபட்ட ஒன்றையே தற்போது வரைவுக்குட்படுத்தியுள்ளனர்.


இந்தச் சட்டத்தின் மூலம்,தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள்,வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் செயல்பாடுகளை முடக்குவதற்கு அரசாங்கம் பெரும் அதிகாரங்களைப் பெறுகிறது.தற்போதைய சட்டத்தில் ஜனாதிபதியாலையே தடுப்பு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்,ஆனால் முன்மொழியப்பட்ட சட்டத்தில்,பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.


தற்போது, ​நாட்டு மக்கள் முன்னெப்போதையும் விட அரசியல் விழிப்புணர்வை அடைந்துள்ளனர்,ஏதோ ஒரு வகையில் அரசியல் உணர்வு நிலையை அடைந்து விட்டார்கள் என்று கருதலாம். தற்போதுள்ள ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் உள்ள மக்களின் கருத்துக்களைப் பார்க்கும் போது மக்கள் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடியுமாக இருக்கிறது.அவர்கள் சிந்திக்கும் விதம், கருத்துகளை வெளிப்படுத்தும் விதம், இந்தச் சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் அனைத்தையும் பார்க்கும் போது, ​இன்று மக்கள் அரசியல் உணர்வும் பலமும் கொண்டவர்களாக இருப்பதைக் காணலாம்.


மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை அரசாங்கம் விரும்பவில்லை என்பதைத்தான் எம்மால் பார்க்க முடியுமாக இருக்கிறது.


அரசாங்கத்திற்கு பிடிமானம் இல்லாத மாற்றுத் தரப்பினரை ஒடுக்கவே இதனூடாக முற்படுகின்றனர்.நாட்டு மக்களினது அரசியல் செயற்பாடுகள் அதிகரித்து வருவதை ஏற்க முடியாத மனோபாவத்தையே இது காட்டுகிறது.அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு வர்த்தமானி அறிவித்தல் வரைவு இதையே காட்டுகிறது.நமது அரசியலமைப்பில் முற்றிலும் மாறுபட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் சமூகத்தை அடக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் இந்த புதிய சட்டத்தின் மூலம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது.


அரசாங்கம் நினைத்தால்,அரசாங்க  நிறுவனங்களில் பிரச்சினைகள் ஏற்படும் போது, ​​ஊழியர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டும்போது,அதை அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள்,வெகுஜன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் என அனைத்தையும் பயங்கரவாத முத்திரை குத்தி கைது செய்யலாம்.இந்த வரைவு மூலம் தற்போதைய பாதுகாப்புப் படையினருக்கும், பொலிஸாருக்கும் அதிகாரம் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளது. இதனால்தான் தற்போதைய அரசாங்கம் நாட்டை மிகவும் ஆபத்தான இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது என்று கூறினேன்.


இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், நாட்டில் உள்ள சிவில் ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்க ஆர்வலர்கள் மற்றும் சாதாரண மக்களும் கூட அரசாங்கத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும்.இந்தச் சட்டத்தின் மூலம், அரசாங்கத்தின் தற்போதைய சட்டங்களுக்கு மேலான சட்டமாக இது மாறுகிறது. மற்ற அனைத்து சட்டங்களும் இந்த அதிகாரத்திற்கு உட்பட்டது என்று வரம்பற்ற அதிகாரம் கொண்ட சட்டமாக இது காட்டப்பட்டுள்ளது.


இந்த சட்டமூலத்தில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால்,அரசுக்கு எதிராக செயல்படும் செயல்பாட்டாளர்களை ஜனாதிபதி விரும்பியபடி பயங்கரவாதியாகவும், அரசாங்கம் அவற்றை பயங்கரவாத செயல்களாகவும் குறிப்பிடும் அதிகாரத்தைக் கொண்டுள்ளமையாகும்.நாட்டின் அடிப்படை மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட அரசியல் அமைப்பிற்கு சவாலாக மாறக் பல விடயங்கள் வெளிவந்துள்ளன.


அரசாங்கத்தினால் சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் துறையினருக்கு கூடிய அதிகாரத்தை வழங்க அரசாங்கம் முயற்சிக்கிறது.


அரசியல் மயமாக்கப்பட்ட பொலிஸ்துறைக்கே அரசாங்கம் அதிக அதிகாரத்தை வழங்க முற்படுகிறது.இத்துறைகளுக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கி மக்களை அடக்கி வைப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு பாரிய பிரச்சினைகளையும் ஆபத்தான நிலைகளையும் தோற்றுவிக்கும் என்பதை காணக்கூடியதாக உள்ளது.


தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம்,ஆனால் கையொப்பமிடப்பட்ட நிபந்தனைகள் என்னவென்று எங்களுக்குத் தெரியாது,அது இன்னும் வழங்கப்படவில்லை, ஆனால் அரசாங்கம் சில முடிவுகளை எடுக்கும்போது, ​அவை சர்வதேச நாணய நிதியத்தின் தேவைகள் என்பதை நாம் காணலாம்.சர்வதேச நாணய நிதியத்தின் முயற்சியின் பேரில் மின் கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.பொருட்களின் விலையை அதிகரிப்பது IMF விருப்பத்திற்கு உட்பட்டது. மேலும், இந்நாட்டில் தனியார்மயமாக்கல் மற்றும் சீர்திருத்தம் பற்றிய யோசனை ஐ எம் எப் முன்மொழிவாக செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.


இந்நாட்டில் நலன்புரி பொருளாதாரம், மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் நலன்கள் IMF முன்மொழிவுகளுடன் குறைக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.சமூகத்தில் பெரும் விவாதம் நடந்துள்ளது. சிலர் சீர்திருத்தம் தேவையில்லை என்கிறார்கள்,சிலர் செய்ய வேண்டும் என்கிறார்கள்.IMF மற்றும் அரசாங்கத்தில் உள்ள சில தரப்பினர் அரசாங்கத்தின் பங்குகளைப் பெறும் நிறுவனங்களை தனியாருக்கு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்,சில நிறுவனங்கள் இலாபம் ஈட்டுகின்றன.இவை இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் என்றும், தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதில் பணிபுரிபவர்கள் கூறுகின்றனர்.இங்கு நாட்டின் பொருளாதாரப் பார்வை குறித்த விவாதமும் உரையாடலும் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்காலம் பற்றி எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டனர்.

நாடு எப்படி முன்னேறும் என்று மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.ஒவ்வொரு அரசாங்கமும் செய்த மோசடி,ஊழல் பற்றி மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.


நாட்டை வங்குரோத்தாக்கியது ஊழல் மிக்க தற்போதைய ஆட்சியாளர்களே.


இந்த புதிய சூழ்நிலையில், IMF சொல்வதைச் செய்வதுதான் அரசாங்கத்தின் ஒரே நடவடிக்கையாக அமைந்துள்ளது. நிதியமைச்சர் ஐ எம் எப் செல்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.  ஆனால் IMF விடயங்களை சமூக உரையாடல் இல்லாமல் மேற்கொள்ள முற்படும் போது, ​​​​சமூக எதிர்ப்பு எழும்.முதலாவதாக, தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஆணை இல்லை.மக்கள் அபிப்பிராயம் இல்லாத அரசாங்கம் அவர்கள் நினைத்ததைச் செய்யச் செல்லும்போது சமூக எதிர்ப்பு எழுந்து சமூகத்தில் பெரிய மோதல் உருவாகும்.


மக்கள் ஆணையில்லாத அரசாங்கம் தனது இருப்பை பாதுகாத்துக் கொள்ள ஐ எம் எப் என்ற நிபந்தனையிலும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற போர்வையிலும் மக்கள் எதிர்பை சமாளிக்க கையாண்டு வரும் உத்தியாகும்.இது நாட்டின் ஜனநாயகத்திற்கு நல்லதொரு நிலை அல்ல.இந்நிலையில் நீதிமன்றம் மட்டுமின்றி எதிர்கட்சியின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த சட்ட மூலத்தை தோற்கடிக்க வேண்டும்.பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒன்று சேர வேண்டும். ஜனநாயக உரிமை,பேச்சு சுதந்திரம்,கருத்துச் சுதந்திரம்,எழுதும் சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிராக தற்போதைய அரசாங்கத்தின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுவதன் மூலம் வடக்கு, தெற்கில் உள்ள அனைவரும் ஒரே அணியில் ஒன்று சேர முன்வாருங்கள்.

No comments

Powered by Blogger.