Header Ads



தொழுகையில் இமாமுடன் கொஞ்சிய பூனை - பள்ளிவாசல்களில் சுரக்கவேண்டிய கருணையும் அன்பும்


- Thuckalayhameem Musthafa -


வழிபாடு என்பது  எல்லவற்றையும் விட்டொழித்துவிட்டு இன்னொன்றில் ஒன்றுவதல்ல. எல்லா வற்றுக்குள்ளும் இருந்துகொண்டே இன்னொன்றை நெருங்குவது. 


 அல்ஜீரிய நாட்டுப் பள்ளிவாசலில்  நடைபெற்ற தொழுகை. https://fb.watch/jK6uSSFrvB/ அந்தப் பள்ளிவாசலில் வளர்கின்ற பூனையாகவோ அல்லது அல்லது தொழுகையை நடத்திக் கொண்டு இருக்கிற அந்த இமாமின் வளர்ப்புப் பூனையாகவோ காணொளியில் வரும் பூனை இருக்கக் கூடும். 


 அந்தப் பூனை அவரோடு கொஞ்சுகிறது. அவரின் தோள்மேல் ஏறிப்பாய்கிறது , அவரது கால்களின் இடையில் நடந்து செல்கிறது. அந்த இமாமும் அதனோடு கொஞ்சுகிறார் . தன்னோடு சேர்த்தணைத்துக் கொள்கிறார். 


மனிதம் தொலைத்த , இதயம் தொலைத்த வழிபாடு என்பது இஸ்லாத்தில் இல்லை,   முஹம்மது நபிகளின் வாழ்வில் இல்லை. அதுபோல் பள்ளிவாசல் என்பது இராணுவ முகாமின் பண்புகளைக் கொண்ட ஒன்றுமல்ல. அது இயல்பானது. இறையிடம் அன்பை, கருணையை கேட்டு நிற்கும் மனிதர்கள் தங்களுக்குள் அதனை சுரக்க விடவேண்டும். 


முஹம்மது நபி தொழுது கொண்டிருப்பார்கள். நெற்றியைத் தரையில் வைத்து முதுகை வளைத்து சுஜூத் என்னும் நிலையில் அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது  நபியின்  பேரர்கள் ஹசன், ஹுசைன் இருவரும் அவருடைய முதுகில் ஏறி அமர்ந்து விளையாடுவார்கள். பேரர்கள் இருவரும் தன்னுடைய முதுகிலிருந்து இறங்கும்வரை நபி அவர்கள் தலையை நிமிர்த்த மாட்டார்கள் என்று குறிப்புகள் கூறுகின்றன


 இறைவழிபாட்டில் இந்த நெகிழ்வு முக்கியம். நபிக ளிடம் இருந்து முஸ்லிம்கள் பெறவேண்டிய பாடங் களுள் ஒன்றிது.


‘அலகிலா விளையட்டுடையான்’ என்று இறைவனைக் குறிப்பிடுகின்றன இலக்கியங்கள். அவனின் பிரதிநிதி யாக வாழும் மனிதர்களுக்கும்  அதில் சிறிதாவது பொருந்தும் தானே.

No comments

Powered by Blogger.