Header Ads



கல்வி அமைச்சின் றமழான் மாத வழிகாட்டல்களை விரைவாக நடைமுறைப்படுதுமாறு வேண்டுகோள்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -


கல்வி அமைச்சின் றமழான் மாத வழிகாட்டல் நிகழ்வுகளை றமழான் நோன்புகள் முடிவடைவதற்கிடையில் விரைவாக நடைமுறைப்படுத்துமாறு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்புக் கிளை முஸ்லிம் பிரிவின் செயலாளர் றமழான் றிக்கினாஸ் தெரிவித்தார்.


கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி கிளை றமழான் மாதத்தை விளைதிறன் மிக்கதாக்குவதற்கான வழிகாட்டல் அடங்கிய கடிதத்தை சகல முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கும் கிடைக்கக் கூடியவாறு அனுப்பியுள்ளது.


இதனை அடியொற்றி மட்டக்களப்பு மத்தி வலயத்தில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலை அதிபர்களுடனும் கலந்துரையாடல் ஒன்றை  ஏற்படுத்தி அதனூடாக. சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் நிகழ்வுகளை  விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கேட்டுக்கொன்டுள்ளது.


கல்வி அமைச்சு றமழான் மாதத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்காக சகல முஸ்லிம் பாடசாலைகளிலும் உள்ள வசதிக்கேற்ப பொருத்தமான தினமொன்றில் நோன்பு திறக்கும் (இப்தார்) நிகழ்வொன்றை ஏற்பாடு செய்வது பொருந்தமானதாக கூறியுள்ளது.


அத்துடன், அந்த நிகழ்வில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவத் தலைவர்கள். கல்விசாரா உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க மற்றும் பழைய மாணவ உறுப்பினர்களையும் பங்குபற்றச்செய்து இந்நிகழ்வை திறம்பட மேற்கொள்ளுமாறும் வேண்டியுள்ளது.


மேலும், இந்நிகழ்வில் நோன்பின் மகத்துவம். அதன் தாற்பரியங்கள் மற்றும் நோன்பின் மூலம் எதிர்பார்க்கப்படும் ஆன்மீக லௌகிக இலக்குகள் பற்றி இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளை இடம்பெறச் செய்வதோடு, தாய் நாட்டிற்கும் மக்களுக்கும் சுபீட்சம் மற்றும் சௌபாக்கியத்தை வேண்டி பிரார்த்தனை நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறும் வேண்டியுள்ளது.



No comments

Powered by Blogger.