குருவிகளுக்காக தம்மை தியாகம் செய்த ஜமால் - பல ஆயிரம் சிட்டுக்குருவிகள் வாழும் அதிசய வீடு
மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளின் சத்தத்தால், பிஜ்னூர் ஷேக் ஜமாலின் மாளிகையின் உள்ளே வித்தியாசமான சூழல் காணப்படுகிறது.
சில நேரங்களில் பறவைகளின் கூட்டம் கூரையில் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு பறப்பதைக் காண முடிகிறது. மற்ற சில நேரங்களில் சிட்டுக்குருவிகள் கூட்டம் கூட்டமாக கூரை மீது அமர்ந்திருக்கின்றன.
மாலை மங்க மங்க முற்றத்தில் உள்ள மரம், செடி கொடிகளில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அடுத்த சில நேரங்களில் அவை உறங்கிவிடுகின்றன. பின் அந்த மாளிகையில் ஆழ்ந்த அமைதி நிலவத் தொடங்குகிறது.
உத்தர பிரதேச மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள சியோஹாராவில் மொஹல்லா ஷேகான் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள ஒரு குறுகிய பாதையில் நவாப் ஷேக் ஜமாலுக்கும் அவரது சகோதரர்களுக்கும் சொந்தமான ஒரு மாளிகை உள்ளது.
ஹவேலியின் உள்ளே நுழைந்தவுடன் முற்றத்தில் சில மரங்கள் தென்படுகின்றன. இங்குள்ள பறவைகளுக்கெல்லாம் வசிப்பிடமாக இந்த மரங்கள் இருக்கின்றன.
சில அடிகள் முன்னோக்கி நடந்த பிறகு நாம் முற்றத்தை அடைகிறோம். கூடுகள் போன்ற வடிவம் கொடுக்கப்பட்ட சில பூச்சட்டிகள் சுவரில் தொங்குகின்றன. முற்றத்தில் பல வகையான செடி கொடிகள், மா, கொய்யா மரங்கள் உள்ளன.
சிட்டுக்குருவிகள் இந்த மரங்களைத் தங்கள் முக்கிய வசிப்பிடமாக மாற்றிக் கொண்டுள்ளன. மாளிகையின் மறுமுனையில் ஷேக் ஜமாலின் குடும்பத்திற்கு ஐந்து அறைகளும் ஒரு சமையலறையும் உள்ளது.
"என் தாத்தா காலத்தில் இருந்து சிட்டுக்குருவிகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன. முன்பு எங்கள் வீட்டின் கூரைகளில் இணைப்புகள் இருந்தன.
குருவிகள் இந்த இணைப்புகளுக்குள் கூடு கட்டும். பின்னர் கட்டடத்தின் சில பகுதிகளுக்கு மேற்கூரை போடப்பட்டது. எனவே அங்கிருந்த பறவைகளின் கூடுகளை அகற்ற வேண்டிய நிலை வந்தது. ஆனால் அதன் பிறகு மரங்களிலும் மற்ற இடங்களிலும் கூடுகளைக் கட்டினோம்,” என்று ஷேக் ஜமால் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
கட்டடத்தை இடித்துக் கட்டினால் குருவிகள் இங்கிருந்து வெளியேறிவிடுமோ என்ற அச்சம் உள்ளதால் வீட்டின் பெரும்பகுதி பழைய முறையிலேயே பராமரிக்கப்பட்டு வருவதாக ஷேக் ஜமால் கூறுகிறார்.
"கடந்த 40 ஆண்டுகளாக சிட்டுக்குருவிகளைப் பராமரித்து வருகிறோம். அவற்றுக்கு மூன்று வேளையும் உணவு, தண்ணீருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருமணங்களுக்குக்கூட வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து செல்வதில்லை. யாராவது ஒருவர் வீட்டில் தங்கி குருவிகளை கவனித்துக் கொள்வோம்,” என்று ஷேக் ஜமால் கூறினார்.
"அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பூங்காக்களில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கான பொறுப்பை பறவை ஆர்வலர்களிடம் வழங்க வேண்டும்," என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஷேக் ஜமாலின் வீட்டில் மாலை வேளையில் வெளிச்சம் குறைவாகவே இருக்கிறது. பறவைகள் உறங்கும் நேரம் அது. வெளிச்சம் இருந்தால் குருவிகளுக்குத் தொந்தரவு ஏற்படும் என்று ஷேக் ஜமால் குறிப்பிடுகிறார்.
"மாலை நேரங்களில் எங்கள் வீட்டின் முற்றங்களில் விளக்குகள் ஏற்றப்படுவதில்லை. வீட்டில் மின்விசிறிகள் உள்ளன, ஆனால் அவற்றைப் பயன்புத்துவதில்லை. ஒருமுறை பறவை ஒன்று அதில் அடிபட்டு விழுந்துவிட்டது. அதன் பிறகு நாங்கள் மின்விசிறிகளைப் போடுவதில்லை,” என்று கூறுகிறார் அவரது இளைய மகன் ஷேக் ஃபராஸ்.
"அறைகளுக்குள்ளே உள்ள மின்விசிறிகள், கதவுகள் மூடப்பட்ட பிறகே சுவிட்ச் ஆன் செய்யப்படுகின்றன. மொட்டை மாடிக்குக்கூட யாரும் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் பறவைகள் அங்கு அமர்ந்திருக்கும்."
"சிட்டுக்குருவிகளைத் தவிர மற்ற பறவைகளும் வீட்டின் கூரையில் இருக்கும் தானியங்களைக் கொத்திச் செல்கின்றன,” என்று ஷேக் ஃபராஸ் கூறுகிறார்.
விருந்தினர்கள் தனது வீட்டில் தங்க முடிவதில்லை என்று ஷேக் ஜமால் கூறுகிறார்.
"எங்கள் வீட்டில் அதிகாலை 4 மணியில் இருந்தே பறவைகளின் சத்தம் கேட்கத் தொடங்கும். ஆட்கள் தூங்க முடியாத அளவுக்கு அந்தச் சத்தத்தின் அளவு அதிகமாக இருக்கும். அதனால்தான் விருந்தினர்கள் எங்கள் வீட்டில் தங்குவதில்லை, ஆனால் எங்களுக்கு அது பழகிவிட்டது," என்று அவர் கூறுகிறார்.
ஷேக் ஜமாலின் வீட்டில் வளரும் குருவிகள் குறித்து அப்பகுதி மக்களிடம் பிபிசி பேசியது.
"ஷேக் ஜமாலின் தந்தை ஷேக் அக்பர் காலத்தில் இருந்தே இந்த சிட்டுக்குருவிகளை நாங்கள் பார்த்து வருகிறோம். அவற்றின் ஒலியைக் கேட்க மாலை நேரங்களில் அடிக்கடி இங்கு வருவேன்,” என்று கூறுகிறார் இங்கு வசிக்கும் நசீம் அகமது.
ஷேக் ஜமாலின் நண்பர் ரயீஸ் அகமது என்பவரும் இப்பகுதியில் வசித்து வருகிறார். "ஊரில் வேறு எங்காவது குருவிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக இங்கு இருக்கும். பறவைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க கோடைக்காலத்தில் மின்விசிறி இல்லாமல்தான் இங்கே உட்கார வேண்டும்," என்று அவர் குறிப்பிடுகிறார்.
"நகரில் ஷேக் ஜமாலை யாருக்குத்தான் தெரியாது. அவர் ஒரு உன்னதமான பணியை மேற்கொண்டு வருகிறார். நாமும் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று அப்பகுதியைச் சேர்ந்த அங்கூர் ஜெயின் கூறுகிறார்.
பறவைகளுக்காக தானியங்களைச் சேமித்து வைப்பது மட்டுமின்றி, பிஸ்கட் பொடி, தினை, நெல், கோதுமை போன்றவற்றையும் சேமித்து வைப்பதாக ஷேக் ஜமால் கூறுகிறார். இதனுடன் வீட்டில் மிச்சமாகும் உணவு, ரொட்டி, அரிசி மற்றும் பருப்புகளும் பறவைகளுக்கு உணவாக அளிக்கப்படுகின்றன. பறவைகள் தண்ணீர் குடிக்க பல இடங்களில் மண் பானைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஷேக் ஜமாலின் மகன் ஷேக் ஃபராஸ், தனது படிப்பை முடித்த பிறகு, தனது தந்தையுடன் விவசாயம் செய்து வருகிறார். குருவிகளையும் கவனித்து வருகிறார்.
இவருக்கு ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. "திருமணத்திற்கு முன்பிருந்தே, சிட்டுக்குருவிகளின் வீடியோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்புவார். எனக்கும் அவற்றை வளர்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தற்போது என் தாய் வீடு மற்றும் அக்கம் பக்கத்திலும் குருவிகளை வளர்க்கத் துவங்கி விட்டேன்,” என்று ஷேக் ஃபராஸின் மனைவி வனியா சித்திக்கி கூறினார்.
உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு ஷேக் ஜமாலின் வீட்டிற்குச் சென்றதாகக் கூறுகிறார், ரெய்னி வனப் பகுதியின் ரேஞ்சர் கோவிந்த் ராம்.
"ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அங்கு பார்த்தேன். பல இனங்களைச் சேர்ந்த பறவைகளும் அங்கு வாழ்கின்றன. அழிந்து வரும் உயிரினங்களில் சேர்க்கப்பட்டுள்ள இந்த சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அனைவரும் உதவ வேண்டும் என நானும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்,” என்று அவர் தெரிவிக்கிறார்.
Post a Comment