தொடர்ந்தும் பொறுமை காக்க முடியாது - பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சீற்றம்
தமது உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படும் அளவிற்கு பிரச்சினை தீவிரமடைந்துள்ளதாக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
அநீதியான வரிக்கொள்கை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம், மார்ச் 9 ஆம் திகதியில் இருந்து பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.
இதனையொட்டி உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் இருந்தும் அவர்கள் விலகினர்.
பிரச்சினைகளுக்கு எவ்விதத் தீர்வும் கிடைக்காத பின்புலத்தில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் விசேட பிரதிநிதிகள் மாநாடு நேற்றிரவு நடைபெற்றது.
இந்த மாநாட்டை அடுத்து அறிக்கையொன்றை விடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மீண்டும் பல்கலைக்கழக விரிவுரைகள் உள்ளிட்ட கற்பித்தல் செயற்பாடுகளில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
எனினும், உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் இருந்து தொடர்ந்தும் விலகியிருப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண, கல்வி அமைச்சர் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு பாராட்டுதலுக்குரியது என்ற போதிலும் அரசாங்கத்தின் ஏனைய அதிகாரிகளினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படும் அளவிற்கு பிரச்சினை வலுவடைந்துள்ளதாகவும் அதனை வன்மையாகக் கண்டிப்பதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
அனைத்து இலங்கையர்களுக்கும் அச்சமின்றி கருத்து தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் இருக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாம் முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் கவனத்திற்கொள்ளாதிருப்பதன் மூலம் கல்வித்துறைக்கு பாரிய அழுத்தம் ஏற்படுவதாகவும் அரசாங்கம் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் மற்றும் தொழில்சார் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் கூறியுள்ளது.
இதேவேளை, பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் கடந்த ஒன்றரை மாத காலத்திற்குள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி சில பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் விரிவுரைகளை மீள ஆரம்பிப்பதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் பாராட்டியுள்ள கல்வி அமைச்சு, உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளையும் விரைந்து ஆரம்பிக்குமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Post a Comment