ஜப்பானில் இலங்கைப் பெண்ணின் மரணம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சை - குடும்படுத்தினர் விடுத்துள்ள கோரிக்கை
இந்த காட்சிகளை அவரது குடும்பத்தினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வெளியிட்டுள்ளனர்.
மார்ச் 2021இல், நகோயா பிராந்திய குடிவரவு சேவை பணியகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 33 வயதான பெண் விஷ்மா சந்தாமரி உயிரிழந்தார்.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பான சுமார் 7 நிமிட பாதுகாப்பு கமெரா காட்சிகள், டோக்கியோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
குறித்த பெண், இறப்பதற்கு இரண்டு வாரங்களுக்குள் பதிவான காட்சிகளில், அந்த பெண் படுக்கையில் படுத்திருப்பதைக் காட்டுகிறது. “தன்னால் நகரவோ சாப்பிடவோ முடியாது“ என்று கூறிய பின், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்படி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
video
வலியால் புலம்பிய இலங்கைப் பெண்ணை அதிகாரியும் தாதியும் எவ்வாறு கவனித்துக் கொள்கிறார்கள் என்பதும் அந்த காணொளியில் அடங்கியுள்ளது.
விஷ்மா இறக்கும் போது, அவரை கண்கானித்த அதிகாரியொருவர் இண்டர்காம் மூலம் அவரது விரல் நுனியில் குளிர்ச்சியாக இருந்ததை தெரிவித்திருந்தார்.
உதவிக்கு யாரும் இல்லாத சூழலில் தனது சகோதரி எப்படி கஷ்டப்பட்டு இறக்க நேரிட்டது என்பதை ஜப்பானிய மக்களும் அறிய வேண்டும் என இன்றைய செய்தியாளர் சந்திப்பில் உயிரிழந்த பெண்ணின் தங்கை தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய அரசாங்கம் ஒரு வழக்கில் ஆதாரமாக சமர்ப்பித்த காணொளிகளை குடும்பத்தினரும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட முறையில் பார்க்க முடிந்தது. அவற்றில் சில காணொளி காட்சிகள் முதல் முறையாக பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டன.
விஷ்மா, 2017இல் ஜப்பானுக்கு மாணவியாக வந்திருந்தார். மேலும், விசா காலத்தை மீறி தங்கியதற்காக 2020 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு அந்நாட்டு குடிவரவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
சுமார் ஒரு மாதமாக வாந்தி மற்றும் வயிற்றுவலி உட்பட தனது நோயைப் பற்றி முறைப்பாடு செய்த அவர், மார்ச் 6, 2021 அன்று உயிரிழந்தார்.
இவரின் மரணம் மற்றும் அவரது சிகிச்சை ஜப்பானிய மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பல மாதங்களுக்குப் பிறகு, புகலிடக் கோரிக்கையாளர்கள் உட்பட நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்ளும் வெளிநாட்டவர்கள் மீதான சட்டங்களைத் திருத்தும் சட்டத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
“இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் நீண்ட கால காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் பிரச்சினையை தீர்க்கவும் முன்கூட்டி நடவடிக்கை அவசியம்“ என்று தலைமை அமைச்சரவை செயலாளர் ஹிரோகாசு மாட்சுனோ இன்று செய்தியாளர் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
இதேவேளை, சட்டவிரோத தடுப்பு காவலில் வைக்கப்பட்டு, தேவையான மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்ததாக கூறி, விஷ்மாவின் குடும்பத்தினர், ஜப்பான் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment