Header Ads



ஆபத்து இருந்து கொண்டிருக்கிறது - ரவூப் ஹக்கீம்

 


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின்  "விழுமியம்" புதிய காலாண்டு சஞ்சிகையின் வெளியீட்டு நிகழ்வு ,கொழும்பு 9 "தாருல் ஈமான்" கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது , அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை.


எதையும் பேசுவதற்கும்,எழுதுவதற்கும் தயங்குகிற ஒரு சூழலில்,எதையும் சொல்லுகிற போது அதனால் வேறு விபரீதங்கள் நிகழ்ந்துவிடுமோ என்று  ஓர் அச்ச உணர்வை ஊட்டுகின்ற ஒரு சூழலில் வாழ்ந்தோம். கடந்த வருடம் நிகழ்ந்த மாபெரும் மக்கள் புரட்சியில் இருந்து  அந்த சூழலிலிருந்து நாங்கள் மீண்டுவிட்டோம் என்று எண்ணிக் கொண்டிருந்தாலும்,  இன்று நடைபெறுகிற விடயங்களைப் பார்க்கின்றபோது அப்படியான ஒரு மீட்சி இன்னும் எங்களுக்கு கிட்டவில்லை .அண்மித்த காலத்தில் அவ்வாறு கிட்டும் என்ற எதிர்பார்ப்பும் இல்லாமல் போகின்ற. ஓர் ஆபத்து இருந்து கொண்டிருக்கிறது.


இந்தப் பின்னணியில் இவை பேசப்படாமல் இருக்கமுடியாது. ஒரு துணிவு இல்லாமல் எங்களுக்கு மீட்சி கிடையாது, அஷ் ஷெய்க் ஹஸனுல் பன்னா காலம் தொடக்கம் இன்றைய காலம் வரை  இவ்வாறான புரட்சிகரமான கருத்துக்களை  விதைத்த மௌலானா செய்யித் அபுல் அஃலா மௌதூதி போன்ற சிந்தனையாளர்கள், ஏன் அண்மைக்காலத்தில் எங்களை விட்டுப் பிரிந்த கலாநிதி யூசுப் அல் கர்ளாவி போன்ற மேதைகளுடைய பெயர்களை பேசுவதும், அவர்களோடு சம்பந்தப்பட்ட விடயங்களைப் பற்றி பகுப்பாய்வு செய்வதும் கூட  பயங்கரவாதத்தோடு தொடர்புபட்ட விடயமாக சொல்லப்படுகின்ற ஒர் அபாயகரமான சூழல்  அண்மைய காலங்களில் உருவாக்கப்பட்டது. வேண்டுமென்றே ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருவதற்கு  அப்படியானதோர்  அச்ச சூழலை உருவாக்குவதற்கான முயற்சி நடந்த  பின்னணியில்தான் இன்று எங்களுக்கு மத்தியில் ஒர் அசாத்தியமான துணிச்சலை வேண்டுமென்றே வரவழைத்துக் கொள்ளவேண்டிய அவசியத்தில் நாங்கள் வாழ்கிறோம்.


இந்த விதமான கூட்டத்தில்,அதுவும் இந்த இயக்கம் ஏற்பாடு செய்திருக்கின்ற கூட்டத்தில் இதை பேசக்கூடாது என்பது எனது நோக்கமல்ல,  ஏனென்றால், கடந்த வருடம் நிகழ்ந்த அந்த புரட்சியின் உண்மையான அடிப்படையே இந்த புரட்டுகளை இல்லாமல் செய்யவேண்டும், ஒரு புதிய சமூதாயத்தை நாங்கள் வடிவமைக்கவேண்டும் என்ற நோக்கம்தான்.ஆனால், அந்த நோக்கத்திற்கு முரணாக அதற்கு வெவ்வேறான வியாக்கியானங்களை இன்று தேவைப்பட்டவர்கள்  வேறுவிதமாகக் கொடுத்து வருகிறார்கள். 


இப்போது சட்ட மூலங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன. அவற்றிற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினர் கூட கடுமையான விமர்சனத்தை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


1979 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை ,6 மாதங்களுக்கு எனக் கொண்டுவந்த ஒரு தற்காலிகமான பயங்கரவாத தடைச்சட்டத்தை 40 வருடங்களுக்கு மேல் இன்னும்  அரசாங்கம் தக்கவைத்துக் கொண்டிருப்பது ,தேசிய பாதுகாப்பிற்கு அவசியம் என்ற ஒரு போலியான காரணத்தைச் சொல்லித்தான் என்பதை இன்று பகிரங்கமாக பொதுவெளியில் எல்லோரும் கதைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். தேசியப் பாதுகாப்பிற்கு என்று கொண்டுவருகின்ற சட்டம் இன்று சாதாரண பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு சட்டமாக உருவாகியிருக்கிறது என்பதுதான் உண்மை.


ஏனெனில், இந்த பின்னணியில்தான் இவ்வாறான விடயங்களுக்கு எதிரான ஒரு மக்கள் எழுச்சி,மக்கள் திரட்சி உருவாகியது காலத்தின் தேவையாகும்.


இந்த உள்நாட்டுப் பிரச்சினையை வெளிநாடுகளிலேயும் போய் அல்லது வெளிநாட்டுதத் தூதுவர்களிடம் சொல்வதும் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விரோதமானது என்று கற்பிக்கின்ற நிலைமை தோன்றியிருக்கின்றது.ஏனென்றால், இப்போது பக்கத்து நாடுகளிலும் இது நடக்கிறது,வெளிநாடுகளில் போய் எதாவது உள்நாட்டுப் பிரச்சினையை கதைத்தால் பாராளுமன்ற உறுப்புரிமையும் பறிபோகின்ற நிலைவரம் ஏற்படுகிற ஓர் அச்சமான சூழலை உருவாக்கி வருகிறார்கள்.


 இந்தப் பின்னணியில் நாங்கள் துணிச்சலோடு செயற்பட வேண்டும்.ஏனென்றால், சிவில் சமூகத்தின் விழிப்புணர்ச்சி என்பது சாமாண்யமானதல்ல. இன்று அரசியல்வாதிகளுக்கு மத்தியில் விழிப்புணர்ச்சியை எதிர்பார்ப்பது என்பது கடினம்,   அவர்கள் எல்லோரும்  சிவில் சமூகத்திற்கு இன்று பயந்துபோயிருக்கிறார்கள். சிவில் சமூகத்தைக் ககொண்டுதான்  சில விடயங்களை சாதித்துக்கொள்ளவேண்டும் என்று நிலைவரம் உருவாகியிருக்கிறது.


போதாக்குறைக்கு , சர்வதேச நாணய நிதியம் இந்த நாட்டுக்குக் கடன் கொடுத்து,அதனூடாக இந்தப் பொருளாதார சிக்கலிலிருந்து எங்களை மீள விடிவித்துக் கொண்டுவருகின்ற நிலையில், அதைப் பாலடித்துவிடுவோமோ என்பதற்காக இனி வீதிக்கிறங்கிப் போராட அச்சப்படுகிற ஒரு நிலையை  மக்களுக்கு மத்தியில் உருவாகக்குவதற்கு முயற்சிகள் நடக்கின்றன.


இவற்றையெல்லாம் காரணமாக வைத்து ,இன்னுமின்னும் இந்த முழு நாட்டையுமே ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றுகிற ஒரு நிலைமைக்கு புதிய சட்டமூலம் வழிவகுக்கப்போகின்றது என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. 


திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றுவது மட்டுமல்ல,அந்த திறந்தவெளி சிறைச்சாலையின் சாவியை நாட்டு தலைவர் பெற்றுக்கொண்டு, அவர் அந்த சாவியை கடலுக்குள் வீசியெறிந்துவிட்டு ஆட்சியில் நீடிப்பதற்கான ஒரு நிலைவரமாக அது மாறிவிடும். 


எனவேதான், இந்த விவகாரம் சம்பந்தமான ஒரு விழிப்புணர்ச்சி என்பது முக்கியமானது.


உதாரணத்திற்கு ஒரு விடயத்தை சொல்கிறேன். இந்த "நீதி" யின் அநீதியை அனுபவித்தவர்கள் இங்கு இருக்கிறீர்கள், இந்த நாட்டில் யாரையும் பயங்கரவாதி என்று குற்றம்சாட்டிவிட்டு, இந்த சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தின் மேற்பார்வை இல்லாமல் நீண்ட காலத்திற்கு தடுத்துவைப்பது என்ற முயற்சி இந்த  சட்டத்தில் இன்னுமொரு கட்டம் மேலே போயிருக்கிறது. எந்த பிரதி பொலிஸ் மா அதிபர் வேண்டுமென்றாலும் ஒரு தடை உத்தரவில் கையெழுத்திட்டால் ஒரு வருடத்திற்கு தடுப்புக் காவலில் வைக்கலாம், எந்த நீதிமன்றமும் அதில் தலையிட முடியாது, அந்த ஒரு வருடம் முடிந்த பிறகு இன்னுமொரு வருடமும் நீதிமன்றத்தின் கீழாக ஒரு Judicial Custody இல் தடுத்து வைக்கலாம். சும்மா ஒப்பீட்டு ரீதியாக நாம் இப்போது இணையத்தில் செட் ஜீ பீ டி (Chat GPT)என்ற ஒன்றிற்குக் போய் சரியான கேள்வியை சரியாக போட்டால் அது விடையைத் தரும் . அது Artificial Intelligence இல் எங்கள் எல்லோருக்கும்  இருக்கின்ற ஒரு பெரியதொரு  வாய்ப்பாகும்.


மற்ற நாடுகளில் இத்தகைய பயங்கரவாதச் சட்டத்திற்கு கீழ்  நீதிமன்றத்தின் மேற்பார்வை இல்லாமல் தடுப்புக்காவலில் வைப்பதற்கு என்ன ஏற்பாடு இருக்கிறது என்று செட் ஜீ பீ டி யில் ஒரு கேள்வியை போட்டுப் பார்த்தேன்.


அமெரிக்காவில் பெற்றியட் சட்டம் என்று ஒன்றிருக்கிறது.அது பயங்கரவாத தடுப்புக்காக கொண்டுவரப்பட்ட விசேடமான சட்டம்.அதன் கீழ் 6 நாட்களுக்கு மேலே நீதிமன்றத்தின் மேற்பார்வை இல்லாமல் யாரையும் தடுப்புக்காவலில் வைக்க இயலாது.

பிரான்ஸில் அதேமாதிரி 7 நாட்கள் என்று நினைக்கிறேன், அதுவும் ஒரு அவசர கால சட்டத்தின் கீழ் கொண்டுவந்ததை இப்போததுதான் சட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.   

இங்கிலாந்தில், பிரிட்டனில் 28 நாட்கள் என்று போட்டிருக்கிறார்கள், 28 நாட்கள் வைத்திருக்கலாம் ஆனால், தேவைப்பட்டால் இன்னுமொரு 14 நாள் நீதிமன்ற அனுமதியுடன் அதனை நீடிக்கலாம். ஆகக்கூடினால்  ஒரு அல்லது ஒன்றரை மாதங்கள்தான். அதுதான் ஆகக்கூடிய எனக்கு செட் ஜீ பி  டி தந்த விடை.


அடிக்கடி பயங்கரவாத தாக்குதலுக்குள்ளாகின்ற துருக்கியே என்று சொல்லப்படுகிற துருக்கியில் 48 மணித்தியாலங்களுக்கு மேல் தடுப்பில்  வைத்திருக்க இயலாது. அதுதான் சட்டம்.  தேவைப்பட்டால் இன்னுமொரு 24 மணித்தியாலம் நீதிமன்ற அனுமதியோடு வைத்திருப்பதற்கு, ஆதாரங்களை காட்டி பெற்றுக் கொள்ளவேண்டும். இப்படித்தான் இருக்கிறது.


 இந்த நாடுகளிலில்லாத விடயத்தை  எங்கள் நாட்டில் இப்படிக் கொண்டுவந்து போடுவதன் விளைவை  நாங்கள் ஏற்கனவே நிறைய அனுபவித்துவிட்டோம். அதுமட்டுமல்ல, ஐ சீ சீ பிஆர் சட்டத்திலிருக்கின்ற வெறுப்பூட்டத்தக்க பேச்சுக்களை பேசுகின்றவர்களின் விடயத்தில்  உண்மையாகவே வெறுப்பூட்டத்தக்க பேச்சுக்களைப் பேசி இனங்களுக்கிடையில் முறுகல்களை ஏற்படுத்துகிற எத்தனையோ பேரை இது கவனத்தில் எடுக்கவில்லை ஆனால் ,எங்களில் நிறையப் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.


அஹ்னாப் ஜெஸீம் என்ற  இளம் கவிஞர், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஆஸாத் சாலி, றிசாட் பதியுத்தீன்,டாக்டர் ஷாபி சிஹாப்தீன் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.   அவர்களுக்கு இந்த சட்டத்தைத்தான் பயன்படுத்தினார்கள். இப்போது அதனை புதிய பயங்கரவாத சட்டத்திற்குள் கொண்டுவந்து போட்டிருக்கிறார்கள்.மிக மோசமாக துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற ஒரு சட்ட ஏற்பாடாக அது மாறிவிட்டது.  உண்மையான தேவைக்கு  பயன்படுத்துவதற்கு அல்லாது,  அரசாங்கத்திற்கு தேவையானவர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்காகவும்,வேறு காரணங்களுக்காக பழிவாங்கும் நோக்கிலும்  அவ்வாறு செய்யப்படுகிறது. 


நான் இங்கு குறிப்பிட்ட வழக்குகளில்   நீதிமன்றத்தினூடாக  சிலர் பிணையில் இருக்கிறார்கள் ; சிலர் விடுதலையாகியிருக்கிறார்கள்,  அவ்வாறான அநீதிகளை நீதிமன்றங்களே கடுமையாக விமர்சித்திருக்கின்றன.


அண்மையில் இன்னுமொரு முயற்சி நடந்தது .பியூரோ ஓப் ரீஹெபிலிடேஷன் (Beauro of Rehabilitation) என்று இன்னுமொரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.  ஏனென்றால், எங்களுக்கிருக்கிற ஒரே ஒரு அடைக்கலம் எங்களுடைய நீதி மன்றங்கள்தான். நீதி மன்றத்தில் போய் அதை சவாலுக்கு உட்படுத்தியதனால் நீதி மன்றம் அந்த  முழு சட்டமூலத்தையுமே தூக்கி எறிந்தது. , ஆது முழுமையாக மனித உரிமை விழுமியங்களை மீறுகின்ற ஒரு சட்டமூலமாகும்.


 ஏனென்றால், இவர்கள் இவ்வளவு காலமும் தடுப்புக்காவலில் வைத்திருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களை அவ்வாறு செய்ததற்கு  காரணம் சொல்லவழியில்லை .எனவே, அவர்களைஒரு கட்டாயத் தடுப்புக்காவலில் புனர்வாழ்வு  முகாமொன்றுக்குள்ள தள்ளிவிடவேண்டும் என்பதுதான்.


அதை நீதிமன்றம் தூக்கியெறிந்துவிட்டது. ஏனென்றால், முழுமையாக சர்வதேச மனித உரிமை நியதிகளுக்கு முரணானது மாத்திரமல்ல எங்களுடைய அரசியல் அமைப்பின் சட்ட ஏற்பாடுகளுக்கு முரணானது என்று நீதி மன்றம் மிகத் துணிச்சலான ஒரு தீர்ப்பைக் கொடுத்தது.  அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல் தனியாக போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களுக்கு மாத்திரம் அதை மட்டுப்படுத்தி, சட்டமூலத்தைக் கொண்டுவந்து ஒரு மாதிரி நிறைவேற்றினார்கள் 


ஏனென்றால் சட்டமூலத்தை கொண்டுவந்து வேறு வழியில்லாமல் அதற்காவது அதை மட்டுப்படுத்தி வைத்திருக்கக் கூடும்.அதே நிலைமையில் பீரோ ஒப் ரீஹெபிலிடேஷன் என்ற விடயத்தைக் கொண்டுவந்து இன்னும் காரணா,காரியங்களில் சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏதோ சிறிய சிறிய விடயங்களுக்காக ஏதாவது ஒரு வகுப்பில் ஒன்றும் தெரியாமல் போய் உட்கார்ந்து இருந்த இளைஞர்கள் நிறையப் பேரை இந்தப் பின்னணியில்   சட்டமா அதிபர் விரும்பினால் , அவர் தடுப்புக்காவலில் இருப்பவருக்கு ஒரு  தெரிவைக் கொடுக்கலாம்.  தெரிவு ஒன்றுமல்ல .சட்டமா அதிபர் பயமுறுத்துவார்."நீங்கள் இந்த தெரிவை எடுக்காது விட்டால் நாங்கள் வழக்குத் தொடுப்போம்.   வருட கணக்கில் வழக்குப்  பேச நேரும்.உங்களுக்கு பிணையுமில்லாமல் நீடிக்கவரும்" என்று அச்சுறுத்துகின்ற பாணியில் கதைத்தால் , பிறகு வேறு வழியில்லாமல் அதையாவது ஏற்றுக்கொண்டு  2 வருடம் "உள்ளே"  இருந்துவிட்டு வருவோம் என்கின்ற ஒரு அச்ச உணர்வு அப்பாவிகளுக்கு உருவாகலாம்.


  என்னைப் பொறுத்தமட்டில் இந்த நாட்டில் பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தைக் கொண்டுவந்து பயங்கரவாதம் ஒழிந்ததாக ஒன்றும் இல்லை.உண்மையிலேயே நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகின்ற சட்டமூலமாக அது மாறுகின்ற ஒரு நிலைவரம்தான் ஏற்பட்டிருக்கிறது.


 எனவே, இது ஒன்றுமே தேவையில்லை. இருக்கின்ற தண்டனைச் சட்டக்கோவையில் அதற்கான குற்றங்களை ஒழுங்காக வகைப்படுத்தி கொண்டுவந்தால் மாத்திரம் போதும் என்ற நிலைமைக்கு இன்று நாட்டில் இருக்கின்ற பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவார்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.


 இது ஆட்சியாளர்களை பாதுகாப்பதற்கான ஒரு கவசமாக மாத்திரம் , வெறும் "தேசியப் பாதுகாப்பு " என்ற போர்வையில் கொண்டுவரப்படுகின்ற மிக மோசமான காரியம் என்பதால் அதற்கெதிராகப்  பேசப்படவேண்டிய நிலைமையில்,துணிவோடு இதை சொல்லவேண்டிய ஒரு காலகட்டத்தில் நாங்கள் வாழ்கின்றோம்.


(தொகுப்பு:எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி.)

 

No comments

Powered by Blogger.