அதிகாலையில் பெரும் படையுடன் சஹ்ரானின் மச்சான், கர்ப்பிணி மனைவி வீடு சுற்றிவளைக்கப்பட்டது ஏன்..?
(எம்.எப்.அய்னா)
சஹ்ரான் ஹாஷிமின் மைத்துனர், அதாவது மனைவியின் சகோதரர் திடீரென பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதிகாலையில் பெரும் படையுடன் ஒரு வீட்டை சுற்றிவளைத்து, சஹ்ரானின் மைத்துனரையும் அவரது கர்ப்பிணி மனைவியையும் பொலிஸார் இவ்வாறு கைது செய்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கொச்சிக்கடை பொலிஸார் விடிவெள்ளிக்கு தெரிவித்தனர்.
கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் அதாவது 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் சஹ்ரான் ஹாஷீம் தலைமையிலான குழு, கத்தோலிக்க, கிறிஸ்தவ தேவாலயங்கள் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்களை நடாத்தியிருந்தனர்.
இவ்வாறான பின்னணியிலேயே, இம்முறை உயிர்த்த ஞாயிறு தின கொண்டாட்டங்களுக்காக தேவாலயங்களை மையப்படுத்தி விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அவ்வாறு இருக்கும் போது ஞாயிறன்று அதிகாலை 1.00 மணியளவில் இராணுவத்தினர், விமானப்படையினர், அதிரடிப் படையினர், பொலிசார் என அனைவரும் இணைந்து நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வீடொன்றினை சுற்றிவளைத்திருந்தார்கள். அந்த வீட்டில் சஹ்ரானின் மைத்துனர், அவர் மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் இருந்த நிலையில், பொலிஸார் சஹ்ரானின் மைத்துனரையும் அவரது மனைவியையும் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இந்த வீடு சஹ்ரானின் மைத்துனரின் மனைவியின் வீடாகும். சஹ்ரானின் மைத்துனர் குருணாகல் – கட்டுபொத்த பொலிஸ் பிரிவின் கெக்குனுகொல்ல எனும் ஊரைச் சேர்ந்தவர். அவர் நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியிலேயே திருமணம் முடித்துள்ளார். தற்போது அவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவரை தாய் வீட்டுக்கு சஹ்ரானின் மைத்துநர் அழைத்து வந்துள்ளார். அழைத்து வருவதற்கு முன்னர், அவர் தனது வதிவிட பொலிஸ் பிரிவான கட்டுபொத்தயில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கும் தான் மனைவியின் வீட்டுக்கு செல்வதாக அறிவித்திருக்கின்றார்.
இவ்வாறு அறிவித்துவிட்டு சென்று, கொச்சிக்கடை பகுதியில் தங்கியிருந்த போதே இந்த திடீர் கைது சம்பவம் நடந்துள்ளது.
குறித்த சஹ்ரானின் மைத்துனர் 2019 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் அவரது மனைவிக்கு எதிராக எந்தவித குற்றச்சாட்டுக்களும் இல்லை.
இவ்வாறான நிலையில், இம்முறை உயிர்த்த ஞாயிறு தின கொண்டாட்டங்களுக்கு தயாரான போது, பொலிசாருக்கு யாரோ ஒருவர் அழைப்பெடுத்து, சஹ்ரானின் மைத்துனர் கொச்சிக்கடையில் தங்கியிருப்பதாகவும் அது சந்தேகத்துக்கு உரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலை வைத்துக்கொண்டே அதிரடியாக படையினரின் சுற்றிவளைப்புடன் சஹ்ரானின் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இருவரும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிசார் அவ்விருவரையும் கைது செய்து, நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர். இதன்போது பதில் நீதிவானே அங்கு கடமையில் இருந்த நிலையில், கொச்சிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி இருவர் தொடர்பில் சி.ஐ.டி.யின் அறிக்கைகளைப் பெற எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்த விடயங்களை ஆராய்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்
அவர்கள் கொச்சிக்கடையில் தங்கியிருக்க தெளிவான காரணம் இருக்கையில், அதுவும் பொலிசாரிடம் தாம் இருக்கும் இடம் தொடர்பில் தகவல் அளித்துள்ள நிலையிலும் இந்த கைதுக்கு எதிராக சஹ்ரானின் மைத்துனரின் சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்ப்பதாக அறிய முடிகின்றது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் நேற்று கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடளிக்க சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli
Post a Comment