சுலைமாலெப்பையின் முயற்சிக்கு பலன் கிட்டியது
(சுலைமான் றாபி)
நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் பிரதித்தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வையின் முயற்சியின் கீழ், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் இயங்காமல் காணப்படும் நிந்தவூர் பலநோக்கக்கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று (12) முதல் டீசல் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், நிந்தவூர் பலநோக்கக்கூட்டுறவுச் சங்கம் மற்றும் அதன் இயக்குனர் சபையின் பொது முகாமையாளர் ஆகியோரின் முயற்சியுடன், முன்னாள் பிரதித்தவிசாளரிடம் விடுத்த வேண்டுகோளினையேற்று, இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனத்தின் Ceypetco Diesel எதிர்வரும் (17) திங்கட்கிழமை முதல், விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், இவ்விடயம் சம்பந்தமாக கடந்த இரு மாதங்களுக்கு முன்பு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பெற்றோலியக்கூட்டுத்தாபன தவிசாளர் மற்றும் கூட்டுத்தாபனத்தின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் ஆகியோரின் மூலமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் பிரகாரம், இன்று 6,500 லீற்றர் டீசல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் எதிர்வரும் மாதம் சிறுபோக வேளாண்மை விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரச, தனியார் அலுவலகங்கள் தங்களது வாகனங்களுக்குத் தேவையான டீசலினை எவ்வித சிரமமும் இல்லாமல் நிந்தவூர் பல்நோக்கக்கூட்டுறவுச் சங்கத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என சங்கத்தின் தலைவர் ஏ.சஹீட் அஹமட் தெரிவித்தார்.
அத்துடன், சுமார் 12 வருடங்களாக இயங்கா நிலையிலிருந்த பலநோக்கக் கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தினை மீள இயங்க நடவடிக்கை எடுத்தமைக்காக, நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் பிரதித்தவிசாளர் வை.எல். சுலைமாலெவ்வைக்கு தங்கள் சங்கத்தின் இயக்குனர் சபை, பொது முகாமையாளர் உள்ளிட்ட சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment