Header Ads



ஆளுநர்கள் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது - நஸீர் அஹமட்


 - ஏ.எச்.ஏ. ஹுஸைன் -


கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத்தின் உத்தரவின் பேரில் “எல்மிஸ் வல்கம” வீதி என சிங்களப் பெயராக மாற்றுவதற்காக அகற்றப்பட்ட  புன்னைக்குடா வீதி எனும் பெயர்ப்பலகை அதே “புன்னைக்குடா வீதி” என்ற பழைய நாமத்தோடு அமைச்சர் நஸீர் அஹமட்டினால் மீள நடப்பட்டது.


இந்நிகழ்வு கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் ஏறாவூர் நகர புன்னைக்குடா வீதி சந்தியில் திங்கள்கிழமை 10.04.2023  இடம்பெற்றது.


அங்கு உரையாற்றிய அமைச்சர் நஸீர் அஹமட், ஆளுநர்கள் இங்கு மட்டுமல்ல இலங்கையில் எப்பாகத்திலுமே தமது அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்துமீறல் செய்து இனவாதத்தை ஏற்படுத்தக் கூடாது. கிழக்கு மாகாண ஆளுநர் தன்னிச்சையாகத் தீர்மானம் எடுத்து இனமுரண்பாடுகளை உருவாக்கும் போக்கு நிறுத்தப்பட வேண்டும்” என்றார்.


தொன்று தொட்டு “ஏறாவூர் புன்னைக்குடா வீதி” என புழக்கத்திலிருந்து வந்த பெயரை தென் மாகாணம் காலி நகரைச் சேர்ந்த சிங்கள சமூகத்தவரான “எல்மிஸ் வல்கம” வீதி என மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கடந்த மாத இறுதியில் உத்தரவிட்டிருந்ததும் அந்த விவகாரம் பிரதேசத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருந்ததும் தெரிந்ததே.


ஆளுநரின் உத்தரவு வெளியானதை அடுத்து ஏற்கெனவே ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும்  அறிவித்தலாக அமைக்கப்பட்டிருந்த புன்னைக்குடா வீதி என்ற பெயர்ப் பலகை உடனடியாக அகற்றப்பட்டிருந்தது.


இந்த அறிவித்தல் வெளியாகி ஏறாவூரில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான நஸீர் அஹமட், பாரம்பரியமாக புன்னைக்குடா வீதி என இருந்து வரும் பெயரை எக்காரணம் கொண்டும் எவரையும் மாற்ற அனுமதிக்கப்போவதில்லை என சூளுரைத்திருந்தார்.


அத்தோடு, ஆளுநர் தனது அதிகார எல்லையை மீறுவதைக் கண்டிப்பதாகவும் வெர் தெரிவித்திருந்தார்.


கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரிலிருந்து சுமார் 5.23 கிலோமீற்றர் தூரத்தில் புன்னைக்குடாக் கடல் அமைந்திருக்கிறது. இது வங்காளக் கடல் பகுதியாகும். ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பிருந்தே பூர்வீகமாக இந்த வீதி புன்னைக்குடா வீதி என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. புன்னை மரங்கள் அங்கு அதிகமிருந்ததால் இது காரணப் பெயராகியுள்ளது.


ஏறாவூர் நகர பிரதேசம் நூறு சத வீதம் முஸ்லிம் சமூகத்தைக் கொண்டமைந்திருந்தபோதும் கூட அந்த வீதிக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவரினதும் பெயரைச் சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், திடீரென தென்பகுதி காலிப் பிரதேச  சிங்கள சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் ஆளுநருக்கு ஒரு கடிதத்தை எழுதி அதில் ஏறாவூர் புன்னைக்குடா வீதிக்கு “எல்மிஸ் வல்கம” என பெயரை மாற்றுமாறு கோரியிருந்தனர்.


அந்த வேண்டுகோளை உடனடியாக அமுல்படுத்தும் வகையில் ஆளுநர் அதரிகாரிகளுக்கு  உத்தரவைப்  பிறப்பித்திருந்தார்.


ஆளுநர் ஏற்கெனவே ஏறாவூர் பொதுச் சந்தையை “ஏறாவூர் சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு ஏறாவூர் நகர சபைக்கு கடிதம் அனுப்பியிருந்ததும் அது ஆளுநரது உத்தியோக பூர்வ வலைத் தளத்தில் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியவுடன் ஆளுநர் அந்த வார்த்தைப் பிரயோகத்தை மாற்றிக் கொண்டதும் இங்கு குறிப்பிடத் தக்கது.


மேலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபை நிருவாகத்தைத் தனது பொறுப்பில் வைத்துள்ள ஆளுநர் உள்ளுராட்சி மன்ற நிருவாகம் கலைக்கப்பட்டிருக்கும் தற்போதைய தறுவாயில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முற்றுமுழுவதுமாக சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை  அமல்படுத்துவதாக  அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.