அவுஸ்திரேலியாவில் அல்பானிய பள்ளிவாசலில், தராவீஹ் தொழுகை நடத்திய இலங்கையரும், தந்தையின் ஆசையும்...!
அல்ஹம்துலில்லாஹ்,
இன்றைய நாளில் 06/04/2023 என் தராவீஹ் தொழுகை மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தப் பாக்கியத்தை அருளிய இறைவனுக்கு எவ்வாறு நன்றி செலுத்துவது என்றே தெரியவில்லை.
1992ம் ஆண்டு வெளிநாட்டு மாணவனாக, நானறியாத நாடாகிய அவுஸ்திரேலியாவில் இறங்கிய காலத்தில் அதிகமான மஸ்ஜித்கள் இங்கு இருக்கவில்லை. தொழுகைக்காக ஏறக்குறைய 50 கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய நிலையிருந்தது. இங்கு 1992ன் நடுங்கும் குளிர் காலத்தில் மெல்பேர்ண் நகரில் முதன் முதலாக அல்பானிய முஸ்லிம்களால் கட்டப்பட்ட மஸ்ஜித் கால்டன் மஸ்ஜிதில்தான் முதன் முதலாய் நான் தராவீஹ் தொழுதேன்.
இன்று என் 4வது பிள்ளை லுக்மான், இதே மஸ்ஜிதில் இஷா, தராவீஹ் தொழுகைகளை பல நூறு வணக்கவாளிகளுக்கு, கெளரவ இமாமாய் இருந்து தொழுவிக்குமாறு அழைக்கப்பட்டிருந்தார். நானும் மஃமூனாக கலந்து கொண்டேன்.
தன் அமைதியான, அழகிய குரலில் தான் மனனம் செய்த குர்ஆனிய இறைவசனங்களை ஓதி, தொழுகையினை நடாத்திய போது, என் கண்கள் பனித்தன.
என் குழந்தை மொனாஷ் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு கற்கின்றான் என்பதனை விடவும், அல்லாஹ்வின் ‘கலாமை’ மனனம் செய்து, 22 வயதில் பல நூறு நல்லடியார்களுக்கு இமாமத் செய்கின்றான் என்பது என் ராத்திரி மழைகள். பரம்பரை பரம்பரையாக என் குழந்தைகள் சம்பளத்திற்கல்லாமல், இலவசமாக இப்பணியினைப் புரிய வேண்டும் என்பது என் கனவாகும், பிரார்த்தனையாகும்.
ஷெய்குல் பலாஹ் மர்ஹூம் அப்துல்லாஹ் ஹஸரத்தின் மகன், மர்ஹூம் பரகதுல்லாஹ் அவர்கள் தான் இறையடி சேர்வதற்கு முன்னரான 3 வருட காலப்பிரிவில் இந்தியாவில் இருந்து கொண்டு zoom மூலம், இறைமறையினை எனது மகன் லுக்மான் மனனம் (ஹிப்ள்) செய்வதற்கு உஸ்தாதாக இருந்தார்கள். மரணிப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் கூட தான் நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்தும் அல்குர்ஆன் மனனத்தினை மீட்டிக் கொள்ளுமாறும் நஸீஹத் சொல்லி தன் ஒலிப்பதிவை அனுப்பியிருந்தார்கள். பின்னர், ஓரிரு நாட்களில் அன்னார் இறையடி சேர்ந்து விட்டார்கள். அல்லாஹு த ஆலா அவர்களைப் பொருந்திக் கொள்வானாக! என் மகன் லுக்மான் அன்னாரின் திடீர் மரணத்தினால் பல இரவுகளை தூக்கமின்றி கண்ணீருடன் கழித்தான்.
அல்குர்ஆனோடு வாழும் உலகம் இன்பம் நிறைந்தது. அதனை ஓதி, புரிந்து, வாழ்வில் நடைமுறைப் படுத்தி வாழும் வாழ்வு மிகவும் பாக்கியமானது. அந்த வாழ்வு எமக்கும் எம் பரம்பரைக்கும் கிடைக்க வேண்டும், அதற்காக நாம் உழைக்க வேண்டும். இதன் மூலமே மானுட சமூகத்திற்கு ஆக்க பூர்வமான பணி செய்பவர்களாய் எம்மை மாற்றிக் கொள்ளலாம்.
இந்தப் புனித ரமளானின் நடுப்பகுதியில் என் வாழ்விற்கு மெருகூட்டிய அருமைத் தந்தை, தாய், கரீம் மாமா, வாப்பும்மா, உம்மும்மா உட்பட எண்ணிறைந்த நல்லுள்ளங்களை நினைத்து அவர்களுக்காகப் பிரார்த்திக்கின்றேன். ஆமீன்!
கலாநிதி அலவி ஷரீப்தீன்
Post a Comment