Header Ads



ஜயசூரிய தனது பணிகளை ஆரம்பித்து கூறிய விடயங்கள், உலகக் கிண்ணத்தை நாட்டுக்குக் கொண்டுவருவதே திட்டமென்கிறார் அமைச்சர்


இலங்கை கிரிக்கெட் சபைக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் புதிதாக நியமிக்கப்பட்ட சனத் ஜயசூரிய தலைமையிலான உறுப்பினர்களுக்கு விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு அமைச்சில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றது.


இந்த ஐவர் கொண்ட தொழில்நுட்பக் குழு இலங்கை கிரிக்கெட்டுக்கு தொழில்நுட்ப விடயங்கள் குறித்து ஆலோசனை வழங்குவது மற்றும் அண்மைக் காலத்தில் வீரர்கள் தேர்வுகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் என்று இந்த நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ரணசிங்க தெரிவித்தார்.


“அண்மைக் காலத்தில் ஒரு கிரிக்கெட் நாடாக இலங்கை பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதை பார்க்கிறோம். என்ன தவறு நிகழ்ந்தது என்பதை நாம் ஆராய வேண்டி இருப்பதோடு அடுத்த உலகக் கிண்ணத்தை நாட்டுக்குக் கொண்டுவர திட்டங்களை வகுக்க வேண்டும். புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய குழுவுடன் பணியாற்றுவதற்கும் எமது இலக்குகளை வெற்றிகரமாக அடையவும் நாம் உறுதியாக உள்ளோம்” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


இந்த நிகழ்வில் பேசிய சனத் ஜயசூரிய, எதிர்வரும் உலகக் கிண்ணத்தில் தனது இடத்தை உறுதி செய்ய தகுதிகாண் போட்டியில் ஆடவேண்டியதை இட்டு தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். தோல்விக்கான காரணத்தை ஆராய்வதும் இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் தமது திறமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதும் முக்கியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.


“அண்மைக் காலத்தில் தேசிய அணி வீழ்ச்சிப் பாதையில் செல்வது குறித்து தேர்வுக் குழுவினர், பயிற்சியாளர்கள் மற்றும் இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம். அந்த பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் வலுப்படுத்துவதற்கு தேவைப்படும் நடவடிக்கைகளை நாம் எடுப்போம். எதிர்வரும் உலகக் கிண்ணத்திற்கு வலுவான அணி ஒன்றை தயார்படுத்துவதே எமது பிரதான இலக்காகும்” என்று ஜயசூரிய குறிப்பிட்டார்.


நியமிக்கப்பட்டிருக்கும் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பர்வீஸ் மஹ்ரூப், அசந்த டி மேல், கபில விஜேகுணவர்தன மற்றும் சரித் சேனநாயக்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.