Header Ads



மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு பாய்ந்ததால், பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்


யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவன் பிரதேசத்தில் நேற்று முன்தினம் (25) இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார்.


இந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் மோட்டார் சைக்கிளொன்றில் பருத்தித்துறையிலிருந்து கொடிகாமம் நோக்கிப் பயணித்துள்ளனர். இதன்போது, இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.


இதில் படுகாயமடைந்த இருவரும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.


இதன் பின்னர், சாவகச்சேரி, சங்கத்தானை பிரதேசத்தைச் சேர்ந்தவரும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவருமான 25 வயதுடைய கோ.கஜீவன் என்பவர் உயிரிழந்துள்ளார்.


இதேவேளை, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவரான மற்றைய பொலிஸ் உத்தியோகத்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.


இந்த விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.