Header Ads



இது இல்லையெனில் இன்றுமுதல் நகை வாங்க முடியாது - ஹால்மார்க் விதியென்றால் என்ன..?


உங்களிடம் தங்க நகைகள் உள்ளனவா? அல்லது தங்கம் வாங்க நினைக்கிறீர்களா? அப்படியென்றால் இந்தக் கட்டுரையை கவனமாகப் படியுங்கள். ஏனென்றால், இன்று முதல் அதற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


தங்கம் மற்றும் தங்க நகைகளுக்கான ஹால்மார்க் விதிகளில் பெரிய மாற்றம் இன்று (ஏப்ரல் 1) முதல் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நீங்கள் தங்கம் வாங்குவது மற்றும் விற்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.


இந்தப் புதிய விதிகளின்படி, ஏப்ரல் 1, 2023 முதல் தங்கம் விற்கும் நகைக்கடை உரிமையாளர்கள் புதிய ஆறு இலக்க ஹால்மார்க் எண் இல்லாமல் நகைகளை விற்பனை செய்ய முடியாது.


அது சரி, ஹால்மார்க் எண் என்றால் என்ன? தங்க நகை விஷயத்தில் இதன் முக்கியத்துவம் என்ன? ஹால்மார்க் எண் வழங்கப்படுவதில் என்ன மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது?


ஏப்ரல் 1, 2023 முதல் நகைக்கடை உரிமையாளர்கள் ஆறு இலக்க ஹால்மார்க் எண் பதிக்கப்பட்ட தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய முடியும். நகைக்கடை உரிமையாளர்கள் இந்த ஹால்மார்க் அடையாளம் இல்லாத நகைகளை விற்க முடியாது.


ஹால்மார்க் முத்திரையில் 4 இலக்கம், 6 இலக்கம் என இரண்டு வகையான முத்திரைகள் உள்ளன. ஆனால், இனிமேல் 6 இலக்க எண் கொண்ட ஹால்மார்க் முத்திரை பெற்ற தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்யலாம். நான்கு இலக்க எண் கொண்ட நகைகளை நகைக்கடை உரிமையாளர்கள் விற்பனை செய்யமுடியாது.


ஆகையால், ஹால்மார்க் பற்றிய தகவல்களை நாமும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

ஹால்மார்க் செய்யப்பட்ட நகை என்றால் என்ன?

தங்க நகைகளை வாங்கும்போது, அதில் சில எண்களும் எழுத்துகளும் மிக நுண்ணிய அளவில் ஏதாவது ஓரிடத்தில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். அதுதான் ஹால்மார்க் முத்திரை.


இந்த நகைகளுக்கு ஒரு தனித்துவமான அடையாள எண் உள்ளது. அது யுஐடி எண் அல்லது ஹெச்யுஐடி எண் என்றழைக்கப்படும்.


தங்கத்தை உருக்கி தேவையான வடிவத்தில் அதை வடிவமைத்து நகையாகச் செய்யலாம். ஆனால், தங்கம் மிகவும் மெல்லியது என்பதால், அது வளைந்துபோகவோ உடைந்துவிடவோ வாய்ப்புள்ளது.


ஆகையால், அதிலிருந்து நகைகளைச் செய்யும்போது, உறுதிப்பாட்டிற்காக சிறிது செம்பு கலக்கப்படும். ஆனால், செம்பு அதிகமாகச் சேர்க்கப்பட்டால், தங்கத்தின் காரட் அளவு குறைவாக இருக்கும்.


ஆகவே தங்க நகைகளில் கலக்க வேண்டிய செம்பு அளவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலும் அதன்படி பின்பற்றப்படுவதில்லை. எனவே நகைகளில் உள்ள தங்கத்தின் அளவைச் சரிபார்க்க வேண்டியது அவசியம். அதற்கு ஹால்மார்க் முத்திரை உதவுகிறது.


ஹால்மார்க் நகைகள் என்று ஒரு தங்க நகையை யாரேனும் கூறினால், அந்தக் குறிப்பிட்ட நகையில் ஹால்மார்க் தனித்துவ அடையாள எண்ணான, ஹால்மார்க் யுஐடி அல்லது ஹெச்யுஐடி எனப்படும் குறியீடு எண் உள்ளதாக அர்த்தம்.


ஹால்மார்க் என்பது ஒரு வகையான தரச் சான்றிதழ். இந்த எண், தங்கம் எவ்வளவு தூய்மையானது என்பதற்கான சான்றாகவும் அந்தச் சான்றிதழை யார் வழங்கியுள்ளார்கள் என்பதையும் குறிக்கிறது.


தங்க நகைகளை வாங்கும் நுகர்வோர் ஏமாற்றமடையாமல் இருப்பதையும் அவர்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப தூய்மையான, தரமான தங்கத்தைப் பெறுவதையும் ஹால்மார்க் உறுதி செய்கிறது.


இந்தியாவில், இந்திய தரநிலைகள் பணியகம், அதாவது பிஐஎஸ், தங்க நகைகளுக்கான ஹால்மார்க்கிங் திட்டத்தை 2000ஆம் ஆண்டில் தொடங்கியது. பிஐஎஸ் என்பது இந்தியாவின் தேசிய தர நிர்ணய நிறுவனம்.


அதாவது, நாட்டிலுள்ள பொருட்கள், சேவைகளின் தரத்தை உறுதி செய்வது, அவற்றுடைய தரத்தின் துல்லியத்தைச் சரிபார்ப்பது ஆகிய பணிகளை இந்த அமைப்பு செய்கிறது.


ஹால்மார்க்கிங் திட்டத்தின்படி, தங்கம் விற்கும் கடைக்காரர்கள் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்ட நகைகளை விற்பனை செய்யவேண்டும்.


நகைக்கடை உரிமையாளர்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஹால்மார்க்கிங் மையத்தில் நகைகளுக்கான ஹால்மார்க் முத்திரைகளைப் பெறுவார்கள்.


ஹால்மார்க் முத்திரை நுகர்வோர் மோசடிக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. மோசடி செய்யப்பட்டால் அந்த வழக்குகளில் தீர்வு கிடைப்பதை எளிதாக்குகிறது.


ஆறு இலக்க ஹால்மார்க் எண் என்றால் என்ன?

முன்னதாக இந்தியாவில் நான்கு இலக்க அடையாள எண் பயன்படுத்தப்பட்டது. இதில் பிஐஎஸ் லோகோ, நகைகளின் தூய்மை (அதாவது காரட்), தூய்மை சோதனை மையத்தின் லோகோ, பொற்கொல்லரின் சொந்தச் இன்னம் ஆகியவை அடங்கும்.


ஆனால் ஜூலை 2021 முதல், பிஐஎஸ் புதிய ஆறு இலக்க ஹால்மார்க் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த விதியை உடனடியாக அமல்படுத்த முடியவில்லை. அதற்காக நகைக்கடை உரிமையாளர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது.


ஆனால், சில விற்பனையாளர்கள் நான்கு இலக்க அடையாளங்களைக் கொண்ட நகைகளை விற்பனை செய்தது. நுகர்வோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் ஏப்ரல் 1, 2023 முதல் புதிய ஹால்மார்க் விதிகளைக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


எந்த நகைக்கடை உரிமையாளரும் இனி ஆறு இலக்க ஹால்மார்க் எண் இல்லாத நகைகளை விற்பனை செய்ய முடியாது. இதில் நான்கு இலக்க ஹால்மார்க் எண் கொண்ட நகைகளும் அடக்கம். அவற்றையும் விற்பனை செய்ய முடியாது.


ஹெச்யுஐடி எனப்படும் புதிய ஹால்மார்க் முத்திரை, பிஐஎஸ் லோகோ, நகைகளின் நம்பகத்தன்மை பற்றிய தகவல் மற்றும் ஒவ்வொரு நகைக்கும் ஒரு தனிப்பட்ட ஆறு இலக்க குறியீரு ஆகியவையும் அடங்கும்.


பிஐஎஸ் கேர் பயன்பாட்டில் இந்த ஹெச்யுஐடி-ஐ நீங்கள் சரிபார்க்கலாம். சுருக்கமாகச் சொன்னால், இனிமேல் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு தங்க நகைகள் மற்றும் பொருட்களையும் சரிபார்க்க முடியும்.


ஹால்மார்க் அடையாளம் இல்லாத பழைய தங்கத்தை வைத்திருந்தால் என்ன செய்வது?

உங்களிடம் அத்தகைய ஹால்மார்க் முத்திரையே இல்லாத நகைகளோ அல்லது நான்கு இலக்க ஹால்மார்க் எண் கொண்ட நகைகளோ இருந்தால் கவலைப்பட வேண்டாம்.


நான்கு இலக்க அடையாள எண் இருக்கும் நகைகளின் தூய்மையும் கருத்தில் கொள்லப்படும் என்று பிஐஎஸ் அறிவித்துள்ளது. ஹால்மார்க் முத்திரை இல்லாத நகைகளைப் பொறுத்தவரை உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன.


நகைகளில் ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்கு பிஐஎஸ் பதிவு செய்யப்பட்ட பொற்கொல்லரிடம் செல்வதன் மூலம் அல்லது பிஐஎஸ் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க்கிங் மையத்திற்குச் சென்று நகைகளைச் சரிபார்ப்பதன் மூலம், நகையைச் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்த மையங்களின் பட்டியல் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக பிஐஎஸ் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் ஒரேநேரத்தில் ஹால்மார்க் முத்திரை பதிப்பதற்காக 10 ஆபரணங்கள் வரை எடுத்துச் செல்லலாம். இது வாடிக்கையாளர் முன்னிலையிலேயே எடை போடப்பட்டு அடையாள எண் கொடுக்கப்படுகிறது.


தங்கத்தின் தூய்மையைச் சோதிக்க இரண்டு முறைகள் உள்ளன. XRF முறை, தங்கம் உருக்கும் மதிப்பீட்டு முறை. XRF முறையில், தங்கம் எக்ஸ்-ரே ஃப்ளோரசன்ஸ் இயந்திர மூலம் பரிசோதிக்கப்படுகிறது. BBC

No comments

Powered by Blogger.