Header Ads



புத்தகங்களில் முஸ்லிம் மன்னர்கள் பாடம் நீக்கம்: வரலாற்றை ஒழிக்க முயற்சி, அடுத்த தலைமுறை அழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு


- தில்நவாஸ் பாஷா -


தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அதன் 12 ஆம் வகுப்பு வரலாற்று புத்தகங்களில் இருந்து முகலாய பேரரசு பற்றிய பாடத்தை நீக்கியுள்ளது. இது தவிர சர்ச்சைக்குரிய மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புக்கான வரலாற்றுப் புத்தகத்தை 'Themes of Indian history’ (இந்திய வரலாற்றின் கருப்பொருட்கள்) என்ற தலைப்பில் மூன்று பகுதிகளாக வெளியிட்டுள்ளது. அதன் இரண்டாம் பகுதியில்.“மன்னர்கள் மற்றும் வரலாறு, முகல் தர்பார்” என்ற 9வது அத்தியாயம் இப்போது புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.


NCERT இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும் புதிய வரலாற்றுப் புத்தகங்களில் முகலாய ஆட்சியாளர்கள் பற்றிய இந்த 28 பக்க அத்தியாயம் இல்லை.


இந்தியாவின் முன்னாள் முஸ்லிம் ஆட்சியாளர்களை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும் என்சிஇஆர்டியின் இந்த நடவடிக்கை, இந்திய வரலாற்றில் இருந்து முகலாயர்களை அகற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.அதே நேரம், மாணவர்கள் மீதான பாடத்திட்டத்தின் சுமையை குறைக்கவே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக என்சிஇஆர்டி வாதிடுகிறது.


வரலாற்றுப் புத்தகத்தில் முகலாயர்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படும் சில அத்தியாயங்கள் இன்னும் உள்ளன. ஐந்தாவது அத்தியாயத்தில் ’பயணிகளின் பார்வையில்’ இந்தியா காட்டப்பட்டுள்ளது. இதில் பத்தாவது முதல் பதினேழாம் நூற்றாண்டு வரையிலான இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அத்தியாயம் ஆறு, பக்தி மற்றும் சூஃபி மரபுகள் மீது கவனம் செலுத்துகிறது. முகலாயர் காலத்தின் குறிப்பு இதில் உள்ளது. எட்டாவது அத்தியாயத்தின் தலைப்பு ’விவசாயி, நிலப்பிரபுகள் மற்றும் நிர்வாகம், விவசாய சமூகம் மற்றும் முகலாய பேரரசு’ என்பதாகும். இதில் முகலாயர் காலத்தைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.


வரலாற்றுப் புத்தகத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை ஆதரித்து ஊடகங்களிடம் பேசிய NCERT தலைவர் தினேஷ் சக்லானி, "முகலாயர்களின் வரலாறு அகற்றப்படவில்லை. ஆனால் மாணவர்களின் சுமையை குறைப்பதற்காக பாடத்திட்டத்தில் இருந்து சில பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன" என்றார்.


"இது பாடத்திட்டத்தின் சீராக்கல் அல்ல, இது பாடப்புத்தகத்தின் சீராக்கல். கடந்த ஆண்டு கோவிட் தொற்றுநோயால், மாணவர்களுக்கு அதிக இழப்பும் அழுத்தமும் ஏற்பட்டது. மாணவர்களின் பாடத்திட்டத்தின் சுமையை ஓரளவு குறைக்க வேண்டும் என்று உணரப்பட்டது. நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார்.


புத்தகங்களை மாற்றும் இந்த செயல்பாட்டில், முகலாயர்கள் தொடர்பான அத்தியாயம் மட்டுமே வரலாற்று புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று சொல்லமுடியாது. மகாத்மா காந்தியின் இந்துத்துவவாதிகள் மீதான வெறுப்பு மற்றும் அவரது படுகொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் மீதான தடை ஆகியவற்றைக் குறிப்பிடும் வாக்கியங்களும் அரசியல் அறிவியல் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.


மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயை பற்றி எழுதப்பட்ட 'புனே பிராமணர்' என்ற வாக்கியமும் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


அதே நேரத்தில், 2002 குஜராத் கலவரம் தொடர்பான மூன்றாவது மற்றும் இறுதி குறிப்பு, 11 ஆம் வகுப்பு சமூகவியல் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.


NCERT புத்தகங்களில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டுள்ளன.


ராஜஸ்தான், கேரளா மற்றும் மேற்கு வங்கத்தின் கல்வி அமைச்சர்கள் இந்த மாற்றங்களை கடுமையாக எதிர்த்துள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. அதே நேரத்தில் மாநிலத்தில் இந்த மாற்றங்களை அமல்படுத்துவதற்கு முன் முழுமையான ஆய்வு செய்யப்படும் என்று ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் கல்வி அமைச்சர்கள் கூறியுள்ளனர்.


ஆனால் உத்தரபிரதேச அரசு இந்த மாற்றங்களை ஆதரித்துள்ளது.


"புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது, என்சிஇஆர்டியின் பாடத்திட்டம் அப்படியே இருக்கும். எங்கள் தரப்பில் இருந்து எந்த மாற்றமும் இல்லை" என்று உத்திர பிரதேசத்தின் கல்வி அமைச்சர் குலாப் தேவி குறிப்பிட்டார்.


என்சிஇஆர்டி புத்தகத்தின் எட்டாவது அத்தியாயம் செப்டம்பர் மாதத்தில் உத்தரபிரதேச அரசு பள்ளிகளில் கற்பிக்கப்படும். இந்த அத்தியாயத்தில், முகலாயப் பேரரசின் போது இந்தியாவின் விவசாய சமூகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் முகலாயர்களைப் பற்றிய அத்தியாயம் 9, மாதாந்திர கால அட்டவணையில் இல்லை. அதாவது இந்த கல்வியாண்டில் புதிய புத்தகத்தில் இருந்தே பாடம் கற்பிக்கப்படும்.


வகுப்புவாத அடிப்படையில் வரலாறு எழுதுவது தீவிரமடைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். மறுபுறம், சிபிஐ கட்சித்தலைவர் டி ராஜா, NCERT ஐ தேசிய பகுத்தறிவு , உண்மை ஒழிப்பு கவுன்சில் என்று அழைத்தார்.


"வரலாற்றை சிதைத்து வரலாற்றை மாற்ற ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட மற்றொரு முயற்சி இது. சர்தார் படேல் காந்தியின் படுகொலைக்குப் பிறகு வெறுப்பு மற்றும் வன்முறை சக்திகளை வேரறுக்க ஆர்எஸ்எஸ்ஸை தடை செய்தார்" என்றார். எத்தனை பொய்களாலும் இந்த உண்மையை மறைக்க முடியாது,"என்று டி ராஜா கூறினார்.


புதிய NCERT புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்படும் போது, ​​பல குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து பரிந்துரைகள் வருகின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டி புதிய ஆலோசனைகளை இவர்கள் வழங்குகிறார்கள். பொதுவாக இவற்றைக் கருத்தில் கொண்டு, பாடப்புத்தகங்களில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.


அறிவியல் பாடங்கள் குறித்த புத்தகங்கள், புதிய தகவல்கள் வரும்போது காலத்துக்கு ஏற்ப மாறுகிறது. பல சமயங்களில் புத்தகங்களில் கிடைக்கும் தகவல்கள் காலாவதியாகிவிடுகின்றன. இந்த துறைகளில் புதிய வளர்ச்சிகள் ஏற்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் இந்த மாற்றங்கள் இயற்கையானது.


கடந்த காலங்களிலும் வரலாற்றுப் புத்தகங்கள் அல்லது பிற பாடங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களுக்காக என்சிஇஆர்டி வல்லுநர்கள் விவாதித்து மாற்றங்கள் குறித்து புத்தகங்களின் ஆசிரியர்களிடம் பரிந்துரைக்கின்றனர்.


"என்சிஇஆர்டி நிபுணர்களைக் கொண்ட பெரிய அமைப்பு. என்சிஇஆர்டி எந்த மாற்றங்களைச் செய்தாலும் அது பொதுவாக கல்வி அடிப்படையில் மட்டுமே செய்யப்படுகின்றன. வரலாற்றில் யாரேனும் தனது சொந்த சித்தாந்தத்தை வைத்தால் அது அகற்றப்பட வேண்டும். ஆனால் முகலாய வரலாறு உலகளாவிய வரலாறு, அதை முழுமையாக அகற்ற முடியாது. அது சீராக்கல் செய்யப்பட்டிருக்கக்கூடும்,” என்று பாஜகவுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் முன்னாள் என்சிஇஆர்டி தலைவர் ஜே.எஸ்.ராஜ்புத் கூறினார்.


"வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில பகுதிகள் விட்டுப்போய்விட்டனவா என்று ஆராயப்படுகிறது. முகலாயர் கால வரலாறு அதிகம் கற்பிக்கப்பட்டது என்று நானும் நினைக்கிறேன். ​​​​முகலாயர் காலத்தில் மட்டுமே இந்தியா இருந்தது, அதைத் தவிர வேறெப்போதும் இருந்ததில்லை என்று அதை படிக்கும்போது தோன்றும். இப்போது புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தயாரிக்கப்படும் புத்தகங்களில் இவை அனைத்தும் கவனிக்கப்படுகின்றன,’என்றார் அவர்.


முகலாயர்கள் இந்திய வரலாற்றின் ஒரு முக்கிய அங்கம், அவர்களை புத்தகங்களில் இருந்து நீக்க முடியாது. ஆனால் கண்டிப்பாக குறைக்க முடியும் என்று ஜே.எஸ்.ராஜ்புத் கருதுகிறார்.


"1970 க்குப் பிறகு, இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர்கள் அமைப்புகளில் செல்வாக்கு பெற்றனர். இந்த செல்வாக்கைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” என்று 1999 மற்றும் 2004 க்கு இடையில் NCERT தலைவராக இருந்த ஜேஎஸ் ராஜ்புத் குறிப்பிட்டார்.


"எனது பதவிக்காலத்திலும் புத்தகங்களை சீராக்கும் முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால் அந்த நேரத்தில் இறுதி முடிவை புத்தகத்தின் எழுத்தாளர்களிடம் விட்டுவிட்டோம். அவர்கள் மாற்றத்திற்கு தயாராக இல்லை. பின்னர் புதிய எழுத்தாளர்களைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது." என்றார் அவர்.


புத்தகங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த சர்ச்சைக்குப் பிறகு என்சிஇஆர்டியின் நன்மதிப்பு குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை ஊக்குவிப்பதற்காக என்சிஇஆர்டி இத்தகைய மாற்றங்களைச் செய்வதாக குற்றம் சாட்டப்படுகிறது.


"இதுபோன்ற சர்ச்சைகளால் பாதிக்கப்படாத அளவிற்கு என்சிஇஆர்டியின் நன்மதிப்பு மிகவும் அதிகம். என்சிஇஆர்டி என்ன செய்தாலும், அதை சிந்தித்தே செய்கிறது. இந்தியாவில் இடதுசாரி சித்தாந்தத்தின் தாக்கம் அமைப்புகள் மீது உள்ளது என்பதை மக்கள் அறிவார்கள். அது குறைக்கப்பட்டால் அந்த முயற்சிகளுக்கும் ஆதரவு கிடைக்கும். பலர் இந்த மாற்றங்களை வரவேற்கிறார்கள்,"என்று ராஜ்புத் கூறுகிறார்.


‘அடுத்த தலைமுறை அழிக்கப்படுகிறது’

ஆனால் புத்தகங்களில் செய்யப்படும் இந்த மாற்றங்களை, முகலாய வரலாற்றை இந்தியாவில் இருந்து அழிக்கும் முயற்சியாக பலர் பார்க்கிறார்கள்.


"வரலாறு மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு கற்பிப்பதை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது என்று சில காலத்திற்குப் பிறகு உணரப்படுகிறது. மாற்றங்களை செய்வது பெரிய விஷயமல்ல. அவை தொடர்ந்து நடக்கின்றன. ஆனால் இந்த மாற்றங்கள் எப்போதும் உண்மைகளின் அடிப்படையில் நடக்கின்றன. புதிய தகவல்களின் அடிப்படையில் நிகழ்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடந்த பல ஆண்டுகளாக நம் வரலாற்றை நம் விருப்பப்படி எழுத முயற்சி நடக்கிறது. ஒரு வகையில் வரலாறு படிப்படியாக அழிக்கப்பட்டு கட்டுக்கதைகள் அதன் இடத்தை ஆக்கிரமிக்கின்றன,” என்று இந்திய வரலாற்று காங்கிரஸின் செயலாளரும், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியருமான சையத் அலி நதீம் ரெசாவி குறிப்பிட்டார்.


"2014 க்கு பிறகு, வரலாற்றுக்கு வித்தியாசமான கண்ணோட்டத்தை அளிக்க மீண்டும் மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சியில், வரலாற்று புத்தகங்களை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அந்த மாற்றங்கள் உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் செய்யப்பட்டது. இப்போது ஒரு கற்பனை வரலாற்றை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது," என்றார் அவர்.


முகலாயர்களின் வரலாறு, புத்தகத்தில் இருந்து நீக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் தொடர்பான விஷயங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற என்சிஇஆர்டியின் வாதத்தை பேராசிரியர் ரெசாவி நிராகரிக்கிறார்.


"வரலாற்றில் இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்தை நீக்க முடியாது. இப்படி செய்தால், குழந்தைகளுக்கு தவறான வரலாற்றை கற்பித்து, தவறான தகவல்களை வழங்குகிறீர்கள் என்று பொருள். இது நடந்தால் சமூகத்திலும் இது ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும்" என்று அவர் குறிப்பிட்டார்.


புத்தகத்தில் இருக்கும் முகலாயர்கள் தொடர்பான பகுதி ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.


"அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளை வைத்திருக்கிறார்கள். முகலாயர்கள் இந்துக்களுடன் சண்டையிட்டதை வைத்திருக்கிறார்கள்,ஆனால் முகலாயர்கள் இந்த சமூகத்தையும் நாட்டையும் கட்டியெழுப்ப பணியாற்றினார்கள் என்று காட்டும் பகுதிகள் அகற்றப்பட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.


"மஹாராணா பிரதாப்பை ஹீரோவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அவரை மட்டுமே வைத்து அவரை ஹீரோவாக்க முடியாது. அக்பரின் இருப்பு அங்கு அவசியம். எனவே அங்கு அக்பர் இருக்கிறார். ஆனால் அக்பர் பின்னாளில் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு, சகிப்புத்தன்மை கொண்ட சமூகத்தை உருவாக்கினார் என்ற பகுதி நீக்கப்பட்டுள்ளது,” என்று பேராசிரியர் அலி நதீம் ரெசாவி சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.