Header Ads



சஜித் ஜனாதிபதியானால், என்ன செய்யப் போகிறீர்கள்..?


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய அரசியல் செயற்பாடுகளில் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தலையிடுவது பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கடசியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 


குருணாகலில் இன்று -23-  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கைதுசெய்வதற்கான அரசியல் செயற்பாடுகளில் பேராயர் தலையிடுவது பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச என்போர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க மாட்டார்கள் என கூறிய அவர், தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் அந்த பட்டியலில் இணைத்துள்ளார்.


அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்காக செயற்படாமல் உண்மையை கண்டறிவதற்காகவே நாம் செயற்பட வேண்டும். அதனை விடுத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவோ ஜனாதிபதிகளை தெரிவுசெய்ய முயற்சிப்பதோ பொருத்தமற்றது.


தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு தமது ஆட்சியில் தண்டனை வழங்கப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறிக்கொண்டிருக்கின்றார்.


எதிர்பாராத விதமாக அவர் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டு அவராலும் பிரதான சூத்திரதாரிகள் இனங்காணப்படாவிட்டால் பேராயர் அவருக்கு எதிராகவும் செயற்படுவார்.


இவற்றை தவிர்த்து பொலிஸார், இரகசிய பொலிஸார், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் சட்டத்துறை சார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என குறிப்பிட்டுள்ளார்.  


(வீரகேசரி)

No comments

Powered by Blogger.