ராஜபக்ஷேவை விரட்டிய ஓராண்டு நிறைவு: போராட்டக்காரர்கள் என்ன நினைக்கிறார்கள்..?
இலங்கை வரலாறு மாற்றியமைக்கப்பட்ட நிகழ்வின் தொடக்க நாளாக இது கருதப்படுகிறது. சுதந்திர இலங்கை என்றுமே எதிர்கொள்ளாத பாரிய பொருளாதார நெருக்கடியை, 2022ம் ஆண்டு இலங்கை எதிர்கொண்டது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவிழந்தமை, டாலர் கையிருப்பு பாரியளவில் குறைவடைந்தமை உள்ளிட்ட காரணிகளினால் நாட்டில் பொருட்களுக்கான விலை உயர்வு, எரிபொருள், எரிவாயு, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, 10 முதல் 14 மணி நேரத்துக்கும் அதிகமான மின்வெட்டு என பல்வேறு பிரச்னைகளை மக்கள் கடந்த ஆண்டு எதிர்கொண்டார்கள்.
ஈஸ்டர் தாக்குதலால் நாடு பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்த நிலையில், கொரோனா பெருந்தொற்று இலங்கையைத் தாக்கியது.
இதனால் நாடு முழுவதும் முடங்கி, பொருளாதாரம் ஸ்தம்பித்தது.
இலங்கையின் பிரதான வருவாய் ஆதாரமான சுற்றுலாத்துறை பூஜ்ஜியத்தை நோக்கி தள்ளப்பட்டது. ஏற்றுமதி வருமானம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டது.
இதனால், இலங்கையின் பிரதான வருமான வழிகள் மூடப்பட்டு, இலங்கை பொருளாதாரம் நெருக்கடியின் உச்சத்தை தொட்டது.
இந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆட்சி பீடத்தில் இருந்த ராஜபக்ஷ குடும்பமே காரணம் என தெரிவித்து, கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி இரவு போராட்டம் வெடித்தது.
இலங்கை ஜனாதிபதியாக அப்போது இருந்த கோட்டாபய ராஜபக்ஷவின் வீடு அமைந்துள்ள நுகேகொடை - மிரிஹான பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் தன்னிச்சையாக திடீரென ஒன்று கூடி போராட்டத்தை தொடக்கினார்கள்.
2022 மார்ச் 31ம் தேதி மாலை 6 மணியளவில்...
மிரிஹான பகுதியிலுள்ள கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கு செல்லும் வழியை திடீரென நூற்றுக்கணக்கானோர் முடக்கி, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்ப ஆரம்பித்தனர்.
கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக மக்கள் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் செய்தி தீயாக பரவியது.
இந்த செய்தியை கேள்வியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் எதிர்பாராத விதத்தில் கோட்டாபய ராஜபக்ஷ வீட்டிற்கு முன்பாக சுமார் 8 மணியளவில் ஒன்று கூடியிருந்தனர்.
வீடுகளில் இருந்தவர்கள், வேலைகளுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பியவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பெண்கள், வயோதிபர்கள், இளைஞர்கள், யுவதிகள் என அனைவரும் மிரிஹான பகுதியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர்.
எதிர்பாராத விதத்தில் மக்கள் ஒன்று கூடியதை அவதானித்த போலீஸார், மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில், ராணுவம், விசேட அதிரடிப் படை என அனைத்து பாதுகாப்பு பிரிவினரையும் மிரிஹான மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு வரவழைத்திருந்தனர்.
அதேபோன்று, ராஜபக்ஷ குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்குள் நுழைவதற்கு மக்கள் முயற்சித்த தருணத்தில், மக்களை கட்டுப்படுத்த முடியாத போலீஸார் முதலில் நீர்த் தாரை பிரயோகங்களை நடத்தியிருந்தனர்.
நீர்தாரை பிரயோகத்தை எதிர்கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், மீண்டும் கோட்டாபய ராஜபக்ஷ வீட்டிற்குள் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் போலீஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்தியிருந்தனர்.
கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் ஆகியவற்றுக்கும் கட்டுப்படாத ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது, பாதுகாப்பு பிரிவினர் தடியடி பிரயோகம் நடத்த ஆரம்பித்தனர்.
கண்ணீர் புகை பிரயோகம், நீர்தாரை பிரயோகம், தடியடி பிரயோகம் ஆகியவற்றிற்கும் கட்டுப்படாத ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக பாதுகாப்பு பிரிவினர் துப்பாக்கி பிரயோகமும் நடத்தியிருந்தனர்.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் வீதியை மறித்து, பாதுகாப்பு பிரிவின் பேருந்தொன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அந்த பேருந்தை அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்து தீக்கிரையாக்கியதுடன், பாதுகாப்பு பிரிவினருக்கு சொந்தமான வாகனங்களையும் தாக்கி, சேதமாக்கியிருந்தனர்.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு பிரிவினர் கொண்டு வந்த வாகனங்கள் பொதுமக்கள் வாகனங்கள் மீதும் மோதுண்ட நிலையில், பொதுமக்களின் வாகனங்களும் சேதமாகியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில், நுகேகொடை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உடனே அமலுக்குவரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர், ஆர்ப்பாட்டம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், அடுத்த நாளான ஏப்ரல் முதலாம் தேதி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அங்காங்கே போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது, 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி பாரிய தன்னெழுச்சி போராட்டமாக உருவானது.
கொழும்பு காலி முகத்திடலில் ஒன்று கூடிய பல்லாயிரக்கணக்கான மக்கள், கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் மாத்திரமன்றி, அரசாங்கத்தையே பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்தனர்.
ஆட்சி மாற்றத்தை நோக்கமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், சுமார் 100 நாட்களை தாண்டி முன்னெடுக்கப்பட்டு, ஜுலை மாதம் 9ம் தேதி வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகரை முற்றுகையிட்டு, ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ தப்பிச் செல்லும்படி செய்தனர்.
இலங்கையில் ஜனாதிபதி ஒருவரை விரட்டியடிக்கும் அளவுக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆரம்ப நாளாக 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி அமைந்திருந்தது.
இந்த போராட்டத்தில் களமிறங்கியவர்களின் இன்றைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் பிபிசி தமிழ், அவர்களை சந்தித்து கலந்துரையாடியது.
போராட்டத்தின் முதல் நாள் முதல் இறுதி நாள் வரை, தமிழ் மொழியில் பதாகைகளை ஏந்தி, தமிழ் மொழியில் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்ட ரஷிகா அருள்செல்வத்தை, பிபிசி தமிழ் சந்தித்து, அவரது நிலைப்பாட்டை கேட்டது.
''போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் தொடக்கம் நான் அங்கே இருந்தேன். 100 நாட்களும் நான் இருந்தேன். பெரும்பாலும் நாளாந்தம் போராட்டத்திற்கு நான் சென்றேன். நாட்டை நல்லதொரு நாடாக மாற்ற வேண்டும், நல்ல ஆட்சியாளரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் நாம் இந்த போராட்டத்தை ஆரம்பித்தோம். அந்த நேரம் நிறைய பிரச்னைகள் நடைபெற்றன. அந்த பிரச்னைகளை மக்களினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால், நாங்கள் வெளியில் இறங்கி போராட்டத்தை நடத்தியிருந்தோம்" என அவர் பதிலளித்தார்.
இந்த போராட்டத்தின் நோக்கம் தற்போது நிறைவேறியுள்ளதா என நாம் அவரிடம் கேள்வி எழுப்பினோம்.
''நாங்கள் எதற்காக போராடினோம். எமது நோக்கம் நிறைவேறியுள்ளதா என கேட்டால், ஆம் என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும் சொல்ல முடியாது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நாடு சற்று முன்னோக்கி வந்துள்ளதாக நான் எண்ணுகின்றேன். இப்போது நாட்டை ஆட்சி செய்பவர் சரியானவர் அல்லது அவர் சரி வரமாட்டார் என நான் கூறவில்லை. ஆனால், நாடு யாரிடம் இருந்து விலகி சற்றேனும் முன்னேறி வரவேண்டும் என்று நினைத்தோமோ, அவரிடம் இருந்து விடுபட்டு வந்துள்ளது என்றே நினைக்கின்றேன்.
கஷ்டப்படும் மக்களுக்கு தேவையானவற்றை, ஆட்சியாளர்கள் மக்களுடன் இருந்து செய்ய வேண்டும் என்பதே எனது நோக்கம். முதலில் இருந்த பிரச்னைகள் இப்போது கொஞ்சம் குறைந்துள்ளன என நான் நினைக்கின்றேன். அதனால், இப்போது உள்ளவருக்கு ஒரு வாய்ப்பை கொடுத்து பார்ப்போம் என்பதே என்னுடைய நிலைப்பாடு" என ரஷிகா அருள்செல்வம் தெரிவித்தார்.
விமானத்திற்குள் கைதான சமூக செயற்பாட்டாளர் கருத்து என்ன?
போராட்டத்தில் முன்னின்று போராடி, விமானத்திற்குள் வைத்து பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் டானிஸ் அலியையும், பிபிசி தமிழ் தொடர்புக்கொண்டு, அவரது இன்றைய நிலைப்பாட்டை கேட்டறிந்தது.
''போராட்டத்தில் நாம் எதிர்பார்த்த வெற்றியை நாம் பெற்றுக்கொண்டோம். அடுத்த போராட்டம் ஒரு ரேடிகல் மாற்றம். ஒரு போராட்டத்தில் எல்லா விடயங்களும் ஒரே இரவில் நடந்து விடும் என எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், ஒரு மாற்றத்தை நாங்கள் உருவாக்கினோம்;. மாற்றம் ஒன்றுதான் விடிவு. அந்த மாற்றத்தை நாங்கள் இப்போது கொண்டு வந்துள்ளோம். மற்ற மாற்றங்களுக்கான பயணங்கள் ஆரம்பித்துள்ளன.
இந்த ரேடிகல் மாற்றத்திற்குள் 13, 13 பிளஸ் எல்லாமே இருக்கிறது. இதனை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க எம்முடன் இணைந்துள்ளார். ஒவ்வொருவர் தொடர்பிலும் எமக்கு ஒவ்வொரு விதமான கருத்துக்கள் இருக்கின்றன. கருத்துக்களை ஓரத்தில் வைத்து விட்டு, பிரிவினைகளை ஓரத்தில் வைத்து விட்டு, ஒன்று சேர வேண்டிய இடத்தில் ஒன்று சேர்ந்து, வேலைகளை செய்துகொண்டிருக்கின்றோம்;. மக்கள் ஒன்றிணைந்தே போராட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். போராட்டம் தொடரும். வித்தியாசமான முறையில் போராட்டம் தொடரும்" என டானிஸ் அலி தெரிவிக்கிறார்.
உங்களின் கோரிக்கைகளுக்கு அமைய, என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, என்னென்ன மாற்றங்களை எதிர்பார்க்கிறீர்கள் என நாம் அவரிடம் கேள்வி எழுப்பினோம்.
''கோட்டா, ரணில் போக வேண்டும் என காலிமுகத்திடலில் சொன்னோம். புதிய அரசியலமைப்பொன்று கொண்டு வரவேண்டும். இடைக்கால அரசாங்கமொன்று நடக்க வேண்டும். ஒரு வருடத்திற்கு பின்னர் நாடாளுமன்ற தேர்தல் ஒன்று வேண்டும் என கேட்டோம். அது ஒன்றும் நடக்கவில்லை. கோட்டா மட்டும்தான் போனார். 13க்கு அப்பாற் சென்ற சட்டத்தை பற்றி நாங்கள் பேசுகின்றோம். ஆனால் குறைந்தது 13 சரி வர வேண்டும். நீண்ட நாட்களாக மக்கள் கஷ்டப்பட்டார்கள். ஒவ்வொரு காலப் பகுதியிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை எதிர்கொண்டார்கள். குறைந்தது 13 கிடைத்து, மாற்றத்திற்கான ஆரம்பமாக இருக்க வேண்டும். எனினும், நாங்கள் கேட்பது நாளைக்கே நடக்குமா என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது.
வடக்கு கிழக்கு பகுதிகள் அரசியலமைப்பு ரீதியாக பிரிக்கப் பட்டாவிட்டாலும், அரசியல் ரீதியாகவும் மொழி ரீதியாகவும் பிரிந்துதான் இருக்கின்றோம். பிரிவினையை இன்னும் பிரிவினையாக உருவாக்காமல், அவர்களுக்கு சுயமாக இயங்குவதற்கான அமைப்பொன்றை செய்துகொடுத்தால், பிரச்னை இல்லாமல் சந்தோசமாக ஒன்றாக வாழ முடியும். ரணில் போக வேண்டும் என்பது குறிக்கோளாக இருக்கிறது. ரணில் சரி வராது. கை, காலை பிடித்து, ஐ.எம்.எப் உதவியை பெற்றுக்கொண்டுள்ளார்கள். 13 பிளஸ் தேவை. ஏன்றாலும் இப்போது குறைந்தது 13வது தர வேண்டும் என்பதே எமது கோரிக்கை" என அவர் பதிலளித்தார்.
ரணில் விக்ரமசிங்கவை தமது ஜனாதிபதி என்று ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதும் இல்லை, தமது ஜனாதிபதி என்று கூறப் போவதும் இல்லை என டானிஸ் அலி கூறுகின்றார்.
தலைவர் திருடனாக இருந்தாலும், திருட முடியாத மாற்றத்தை ஏற்படுத்துவதே தமது கொள்கை எனவும் டானிஸ் அலி தெரிவிக்கிறார்.
Post a Comment