நாடு முன்நோக்கி நகர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது - பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்.
(எஸ்.அஷ்ரப்கான்)
பொருளியல் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என்ற அடிப்படையிலே நடைமுறை பிரச்சினைகளுக்கு ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வுகள் ஊடாக நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொருளியலாளர்கள் மன்றத்தின் 45 ஆவது கூட்டம் தொழில்நுட்ப பீடத்தில் (28) முற்பகல் 8:30 மணிக்கு பல்கலைக்கழக பொருளியலாளர்கள் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ஏ.எம்.எம் முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இதில் உரையாற்றும் போதே உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,
இலங்கையில் தற்காலத்தில் நிலவுகின்ற பொருளாதாரப் பிரச்சினை காரணமாக நமது நாடு பல்வேறுபட்ட பிரச்சினைகளை அனுபவித்து வருகிறது.
விசேடமாக பெற்றோலிய இறக்குமதி தடை காரணமாக மின்வெட்டு, இதனூடாக பொதுமக்களுக்கான சேவைகள், கைத்தொழில்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் 2.4 மில்லியன் மக்கள் உதவிகளை எதிர்பார்த்த வண்ணம் வாழ்ந்து வருகின்றனர். அதிலும் 1.7 மில்லியன் மக்கள் மிகவும் கஷ்டத்தில் வாழ்கின்றார்கள். அதில் குழந்தைகள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் காணப்படுகின்றனர்.
இதன் காரணமாக நாடு பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகிறது. இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து தீர்வு காண்பதற்காக இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) நிதியை பெற்றுக்கொள்வதற்கு உடன்படிக்கை செய்து வெற்றி அடைத்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறுவதுடன் நாடு முன்நோக்கி நகர்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றது.
இலங்கையில் பொருளாதார பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கு வெளிநாட்டு நாணய நிதியத்தின் உதவியானது பெரும் பங்கை வகிக்கின்றது என்றார்.
இதில் கலை கலாசார பீடத்தின் பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையினால் “ஆய்வுச் சுருக்கத் தொகுப்பு – தொகுதி 02, 2022” வெளியிடப்பட்டது. மேலும் கலை கலாசார பீடத்தின் “கலம் ஆய்விதழ் தொகுதி - 15” வெயிளிடப்பட்டது. “வணிகப் பொருளியல் ஆய்விதழ்” முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் முகாமைத்துவ துறையினால் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் நெதர்லாந்து சமூக கற்கைகள் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் கலாநிதி ஹாவாட் நிக்கலஸ் முதன்மைப் பேச்சாளராக நிகழ்நிலை தொழிநுட்பத்தினூடாக கலந்து கொண்டார். இந்நிகழ்வின் வரவேற்யுரையை கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏம்.எம்.பாஸில் நிகழ்த்தினார், நன்றியுரையினை பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஏ.எம் நுபைல் வழங்கினார்.
இந்நிகழ்வில் இலங்கைப் பல்கலைக்கழக பொருளியலாளர்கள் மன்றத்தின் ஸ்தாபகர் பேராசிரியர் குணரூபன், இலங்கை பல்கலைகழகங்களின் பெருளியல் துறை நிபுணர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், நுலகர், துறைத்தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், சிரேஷ்ட உதவிப் பதிவாளர், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், போதனைசாரா ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனா்.
Post a Comment