முஸ்லிம் பிரதேசங்களை ஊடறுத்து, பேரினவாதத்தை அமுல்படுத்தும் ஆளுநர்
ஆளுநரின் உத்தரவு வெளியானதை அடுத்து ஏற்கெனவே ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் அறிவித்தலாக அமைக்கப்பட்டிருந்த புன்னைக்குடா வீதி என்ற பெயர்ப் பலகை அகற்றப்பட்டிருக்கிறது.
இந்த அறிவித்தல் வெளியாகி ஏறாவூரில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான நஸீர் அஹமட் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் ‘‘பாரம்பரியமாக புன்னைக்குடா வீதி என இருந்து வரும் பெயர் மாற்றம்பெறாது. பெயர் மாற்ற செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திடீர் பெயர்மாற்ற செயற்பாடானது கண்டிக்கத்தக்கதோடு ஆளுநரின் அதிகார எல்லையை மீறும் செயற்பாடாகும். இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை ஆளுநர் உடனடியாக நிறுத்த வேண்டும்.” என்று தெரிவித்திருந்தார்.
கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரிலிருந்து சுமார் 5.23 கிலோமீற்றர் தூரத்தில் புன்னைக்குடாக் கடல் அமைந்திருக்கிறது. இது வங்காளக் கடல் பகுதியாகும். ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பிருந்தே பூர்வீகமாக இந்த வீதி புன்னைக்குடா வீதி என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. புன்னை மரங்கள் அங்கு அதிகமிருந்ததால் இது காரணப் பெயராகியுள்ளது. புன்னைக்குடா வீதி ஏறாவூர் நகர், ஐயங்கேணி, அப்துல் மஜீத் மாவத்தை, அத்துப்பிட்டி, தளவாய் ஆகிய முஸ்லிம் தமிழ்க் கிராமங்களை ஊடறுத்துச் செல்கின்றது.
ஏறாவூர் நகர பிரதேசம் நூறு சத வீதம் முஸ்லிம் சமூகத்தைக் கொண்டமைந்திருந்தபோதும் கூட அந்த வீதிக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவரினதும் பெயரைச் சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், திடீரென தென்பகுதி காலிப் பிரதேச சிங்கள சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் ஆளுநருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர். அதில் ஏறாவூர் புன்னைக்குடா வீதிக்கு “எல்விஸ் வல்கம வீதி” என பெயரை மாற்றுமாறு கோரியுள்ளனர்.
அந்த வேண்டுகோளை உடனடியாக அமுல்படுத்தும் நடவடிக்கையில் ஆளுநர் இறங்கி உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
காலியைச் சேர்ந்த சிங்கள சமூகத்தவர் அந்த 9 பேரும் விடுத்துள்ள வேண்டுகோளில் “காலி தல்பே கிராமத்தில் பிறந்து தனது 12வது வயதில் ஏறாவூருக்குப் போய்ச் சேர்ந்து அங்கே வர்த்தகம் செய்து நிலபுலன்களையும் வாங்கியதுடன் இன்னும் பல சேவைகளைச் செய்த “எல்விஸ் வல்கம” அவர் காலியின் பெருமைக்குரிய புதல்வனாவார். எனவே அவரது பெயரை ஏறாவூர் புன்னைக்குடா வீதிக்குச் சூட்ட உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று எழுதப்பட்டுள்ளது.
ஆளுநர் ஏற்கெனவே ஏறாவூர் பொதுச் சந்தையை “ஏறாவூர் சிங்களச் சந்தை” எனக் குறிப்பிட்டு ஏறாவூர் நகர சபைக்கு கடிதம் அனுப்பியிருந்ததும் அது ஆளுநரது உத்தியோக பூர்வ வலைத் தளத்தில் வெளியாகி பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியவுடன் ஆளுநர் அந்த வார்த்தைப் பிரயோகத்தை மாற்றிக் கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபை நிருவாகக் காலத்திலும் உள்ளூராட்சி மன்ற நிருவாகம் கலைக்கப்பட்டிருக்கும் தறுவாயிலும் சந்தர்ப்பத்தைப் பார்த்து கிழக்கு மாகாண ஆளுநரின் நடவடிக்கைககள் முற்றுமுழுவதுமாக சிங்கள பேரினவாத அமுல்படுத்தலை மையப்படுத்தியதாக இடம்பெற்று வருவதாக அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னர் கிழக்கு மாகாண ஆளுநர்களாக படை அதிகாரிகள் மற்றும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தோரே நியமிக்கப்பட்டிருந்தபோதும் தற்போதைய ஆளுநரைப் போன்று அவர்கள் நேரடியான சிங்கள மயமாக்கலை நோக்கி செயற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது விடயமாக ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் ஏறாவூர் நகர சபைச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஏறாவூர் புன்னக்குடா வீதி “எல்மிஸ் வல்கம” வீதி எனப் பெயர் மாற்றல். வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் சார்பாக ஏறாவூர் புன்னக்குடா வீதியினை “எல்மிஸ் வல்கம” வீதி என பெயர் மாற்றம் செய்தல் தொடர்பாக ஆளுநர் அலுவலகம் மற்றும் ஏனைய திணைக்களங்களின் கடிதப் பிரதிகள் தங்களது மேலதிக நடவடிக்கைகளுக்காக இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரால் வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் ஏறாவூர் நகரப் பிரிவில் “எல்மிஸ் வல்கம” என பெயர் மாற்றம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதில் விநோதம் என்னவென்றால் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சும் வீதி அவிபிருத்தித் திணைக்களமும் உள்ளூராட்சி மாகாண நிருவாகமும் என்று பல பொறுப்புக்கள் ஆளுநரின் கீழேதான் வருகிறது. ராஜாவும் நானே மந்திரியும் நானே என்ற அதிகாரத் தோரணையில் ஆளுநர் தனது இனவாத வரிவாக்கல் திட்டத்தை தக்க தருணம் பார்த்து சாதித்து வருகிறார் என்று சிறுபான்மையினர் அதிருப்தி வெளியிடுகின்றனர்.
நீண்ட நாள் தொட்டே இந்தப் புன்னைக்குடாவைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஒரு கழுகுப் பார்வை பேரினவாதிகளிடம் இருந்து வந்துள்ளதாக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் 80களில் அந்நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கிராம அபிவிருத்தி அமைச்சராகவிருந்த கே. டபிள்யூ தேவநாயகம் புன்னைக்குடா மீனவர் கிராமத்தில் 100 வீடுகளை அமைத்தார். ஆனால் கடைசி நேரத்தில்தான் அந்த வீடுகள் வெளி மாவட்டத்திலிருந்து சிங்களவர்களைக் கொண்டு வந்து குடியமர்த்துவதற்காக அமைக்கப்படுகிறதென்று தெரிந்தது.
இதனை அறிந்ததும் மாவட்ட அபிவிருத்தி சபைக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்றப் பிரதிநிதியாக இருந்த டொக்டர் பரீட் மீராலெப்பை கடுமையாக எதிர்த்துக் குரலெழுப்பினார். கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. பரீட் மீராலெப்பை தனியொரு ஆளாகத் துணிந்து நின்று எதிர்த்தார். பரீட் மீராலெப்பைக்குப் பக்க பலமாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பட்டிருப்புத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பூ. கணேசலிங்கம் இருந்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர் அல்பேர்ட் சீவரெட்டணம் ஆகியோரும் பரீட் மீராலெப்பைக்கு ஆதரவாகக் குரலெழுப்பினார்கள்.
பரீட் மீராலெப்பை முன்மொழிய கணேசலிங்கம் வழிமொழிந்து வெளி மாவட்ட சிங்களவர்களுக்கு தனி வீட்டுத் திட்டம் வழங்கப்படுவதைக் கண்டித்தும் அவ்வாறு வழங்கப்படக் கூடாது என்றும் அந்த வீட்டுத் திட்டம் உள்ளூர் மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த எதிர்ப்பால் வெளி மாவட்டச் சிங்களவர்களுக்கு வீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்த ஐதேக அரசின் அமைச்சரான அமைச்சர் கே.டபிள்யூ. தேவநாயகமும் மற்றொரு அமைச்சரான செல்லையா இராஜதுரையும் மௌனித்தனர்.
“புன்னைக்குடாவில் சிங்களவர்களுக்கு தனி வீட்டுத் திட்டம் ; பரீட் மீராலெப்பை போர்க் கொடி” என பத்திரிகைகளில் பிரதான தலைப்புச் செய்தியாக அது வெளிவந்திருந்தது.
பின்னாட்களில் படையினர் முகாம் அமைக்கலாம் என்பதால் ஆயுதப் போராட்ட அமைப்புக்களினால் அந்த வீட்டுத் திட்டம் தரைமட்டமாக்கப்பட்டது.
அந்த வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இப்பொழுது மட்டக்களப்பு சிங்கள மயமாகியிருக்கும் என்று கருதுவோரும் உள்ளனர்.
அவ்வாறு அந்தக் கால கட்டத்தில் நடந்த நிகழ்வை உற்றுக் கவனித்து இந்த வேளையில் டொக்டர் பரீட் மீராலெப்பையை தமிழ் பேசும் மக்கள் நினைவு கூர்கின்றனர்.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபையை வைத்துக் கொண்டும் உள்ளூராட்சி மன்ற நிருவாகங்கள் கலைக்கப்பட்டிருக்கின்ற வேளையிலுமாகப் பார்த்து ஆளுநர் தன்னிச்சையான முடிவுகளைத் திணித்து அமுல்படுத்துவதானது இனவாத அடிப்படையிலாகும் என்று விமர்சிக்கப்படுகின்றது.
ஆளுநரின் நடவடிக்கைகள் அவ்வாறே அமைந்துள்ளதாக அவதானிப்பாளர்கள் கருதுகின்றனர். மட்டக்களப்பு நகரில் சிங்கள மக்கள் வசிக்காத நிலையிலும் சிங்கள மகாவித்தியாலயத்தைத் திறக்க நடவடிக்கை எடுத்து சிங்கள மகா வித்தியாலயத்திற்கு வாருங்கள் எனத் துண்டுப் பிரசுரங்களை ஒட்டி அழைப்பு விடுத்தும் எவரும் அங்கு செல்லவில்லை.
அதேவேளை மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரைப் பிரச்சினையில் தலையிட்டு அது மகாவலி அபிவிருத்திக் காணி என்று அடையாளப்படுத்தி அங்கு சிங்கள மக்களை அழைப்பித்துப் பயிர்ச் செய்கைக்கு காணி வழங்கியமை, மாகாண சபையை நிருவாக மட்டத்தில் சிங்கள மயமாக்குவதில் கரிசனை இவ்வாறு ஆளுநரின் பலப்பல விடயங்களை அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உள்ளூராட்சி மன்ற சட்ட விதிகளின்படி தெருவுக்கு பெயரிடுவதென்றால் அதுபற்றிய விவரம் பொதுமக்களுக்கு பொது இடங்களில் அறிவித்தல் இடப்பட்டு மக்களின் கருத்துக்கள் பெறப்பட வேண்டும். ஆட்சேபனைகள் இருந்தால் குறித்த பெயர் வைத்தலைச் செய்ய முடியாது. ஆனால் இவ்வாறான உள்ளூராட்சி சபையின் சட்ட விதிகளையும் மீறி ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆளுநர் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களுக்கானவராக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருந்தபோதும் ஆளுநரின் நடவடிக்கைகள் தனிச் சிங்கள இனம் சார்ந்ததாக இருப்பதை அவதானிக்க முடிகிறது.
ஜனாதிபதி நல்லிணக்கத்திற்காக எடுக்கும் முயற்சிகளுக்கு ஆளுநரின் நடவடிக்கைகள் குந்தகமாக அமைந்திருக்கின்றன என்பதை நடப்பு நிகழ்வுகள் குறிப்புணர்த்துகின்றன.
காலி மாவட்டத்தைச் சேர்ந்தவரான, தென் பகுதிச் சிங்களவர்கள் கருதும் பெருமகனைக் கௌரவிப்பதற்கு மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் பேசும் சமூகத்தார் ஒருபோதும் எதிர்க்கவில்லை.ஆனால் இனவாத நோக்கில் பேரினவாத பரம்பலை மையப்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்படும் திட்டங்களையே தாம் எதிர்ப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலின் கீழ் இன்னும் எத்தனையோ திட்டங்கள் இருக்கலாம் அதனைக் காலம் உணர்த்தி நிற்கும்.
- Vidivelli - ஏ.எச்.ஏ. ஹுஸைன்
Post a Comment