A/L பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீட்டுக்கு என்ன நடந்தது..?
உயர் தர பரீட்சை மதிப்பீட்டுப் பணிகளில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்புபட்டால், துரித திட்டம் மூலம் விடைத்தாள் மதிபீட்டை மேற்கொள்ளத் தயார் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர் தர பரீட்சை மதிப்பீட்டு பணிகளுக்கு, பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சேவை அத்தியாவசியம் எனவும், அதற்கான மாற்றுத்திட்டம் இல்லையெனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தொடர்பில், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சார்பில் சாதகமான பதில் கிடைக்கவில்லையெனவும் அவர் கூறினார்.
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் சுமார் 60 நாட்கள் வரை தாமதமடைந்துள்ளன.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடாமை , அதிகளவிலான ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்காமை போன்ற காரணங்களினால் மதிப்பீட்டுப் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்வதுடன், அதன் மேற்பார்வைப் பணியினை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மேற்கொள்கின்றனர்.
இது தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையளர்கள் சங்க சம்மேளனத்திடம் வினவியபோது, தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என கூறினர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி பல்கலைக்கழகங்களில் விரிவுரை செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற போதிலும் உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளிலிருந்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விலகியிருப்பதாக சங்கம் கூறியது.
தமது கோரிக்கைகள் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்படும் தீர்மானத்திற்கமைய, குறித்த செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்தார்.
Post a Comment