9,479 மனித மூளைகளை பக்கெட்டில் சேமித்து வைத்த பல்கலைக்கழகம் - வியக்க வைக்கும் காரணம்
உலகிலுள்ள மிகப் பெரிய மனித மூளைகள் சேமிப்பகமாக இந்தப் பல்கலைக்கழகம் திகழ்கிறது. மனித மூளைகள் தொடர்பான ஆராய்ச்சிகள் மருத்துவத்துறையில் பல ஆண்டுகளாகவே நடைபெற்று வருகின்றன.
அந்தக் காலகட்டத்தில் மூளைகளின் செயல்பாடு தொடர்பாக மருத்துவத்துறைக்குப் பெரியளவிலான விவரங்கள் தெரியவில்லை. இதனால், மூளைகளைச் சேமித்து வைத்து எதிர்கால ஆய்வுக்குப் பயன்படுத்தினால் என்ன என்ற யோசனை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சிறிய யோசனைதான் மாபெரும் மூளை சேமிப்பகத்தின் பின்னணியாகக் கூறப்படுகிறது. ஃபார்மால்டிஹைட் உதவியுடன் இந்த மூளைகள் சேமிக்கப்படுகின்றன.
"உலகில் உள்ள மிகப் பெரிய மூளை சேமிப்பகம் இதுதான் என்று நான் எண்ணுகிறேன். 1945இல் இருந்து 1980 வரை சுமார் 10,000 மூளைகள் இங்கு சேமிக்கப்பட்டுள்ளன. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், பிரேத பரிசோதனை முடிந்ததுமே அவர்கள் மூளையைத் தனியாக எடுத்து பக்கெட்டில் சேமித்துள்ளனர் என்று மூளை சேமிப்பகத்தைச் சேர்ந்த நோயியல் நிபுணரான மார்ட்டின் வயர்ன்ஃபெல்ட் நீல்சன் கூறுகிறார்.
தற்போது இல்லையென்றாலும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் சிலர் வந்து மூளையைப் பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்வார்கள் என்ற நோக்கில் அவர்கள் இதைச் சேமித்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மன ஆரோக்கியம் பற்றிய கருத்து சமீப ஆண்டுகளில் பெரிதும் மாற்றமடைந்துவிட்டது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் நோயாளிகளின் உரிமைகள் பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
நோயாளிகள் இறந்ததும் அவர்களுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்ட பிறகு அவர்களின் மூளை தனியாக எடுத்து சேமிக்கப்படும். இதற்காக எவ்வித அனுமதியும் பெறப்பட்டதில்லை.
இது தொடர்பாக வரலாற்று ஆய்வாளரான எஸ்பெர் வாச்சிவ் கவ் பேசும்போது, "ஆய்வகத்தின் உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியே இருந்து யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. மனநல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மிகக் குறைவான உரிமைகளே இருந்தன.
குறிப்பிட்ட சிகிச்சைக்கு நீங்கள் இசைவு தெரிவிக்காமலேயே அதற்கு சிகிச்சையளிக்கப்படலாம். அந்தக் காலத்தில் நோயாளிகள் பிற மக்களைப் போல் சமமாக மதிக்கப்படவில்லை," என்று தெரிவித்தார் .
எனினும் 1990இல் மனித மூளைகளை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தலாம் என்று டேனிஷ் நெறிமுறைகள் கவுன்சில் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்புக்குப் பிறகு மூளை சேமிப்பகம் தொடர்பாக சமூகத்தில் நடந்து வந்த விவாதம் முடிவுக்கு வந்ததாகக் கூறிய மார்ட்டின் வயர்ன்ஃபெல்ட் நீல்சன், "மனரீதியிலான நோய்கள் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கு இந்த ஆராய்ச்சி மிகவும் உதவிகரமாக இருக்கும்" என்றும் தெரிவித்தார்.
டிமென்ஷியா, மன அழுத்தம் போன்ற பல்வேறு உடல் நலமின்மை தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு இந்த மூளைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தற்போது 4 ஆய்வுகளுக்கு இந்த மூளைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Post a Comment