Header Ads



இலங்கையில் ஆபத்தும், அச்சுறுத்தலும் என மோடிக்கு 7 அமைப்புகள் அனுப்பியுள்ள கடிதம்


இலங்கையில் இந்து மதத்துக்கும், அதன் பாரம்பரியத்துக்கும் ஆபத்தும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து கடிதம் எழுதியுள்ளன.


அந்தக் கடிதத்தில் உள்ளதாவது:- இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தின் உதவியுடன் இலங்கையின் வடக்கு - கிழக்கில் இந்து கலாசாரம், பாரம்பரியம், ஆலயங்கள் ஆகியவற்றை இலக்கு வைக்கிறது.


இலங்கையின் வடபகுதியில் அதிகளவு மதிப்புக்குரியதாகக் காணப்படும் கீரிமலை பகுதியில் காணப்பட்ட ஐந்து நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள ஆதிசிவன் ஆலயம் இராணுவ ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அழிக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்த கரிசனையுடனும் அவசரத்துட னும் நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்.


இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது இராணுவம் அந்தப் பகுதியைக் கைப்பற்றி, மிக நீண்டகாலம் தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த பின்னர் பொதுமக்களை அங்கு செல்வதற்கு அண்மையில் அனுமதித்தபோது இந்த விடயம் தெரியவந்தது.


ஆலயம் இருந்த பகுதியில் அதனை அழித்துவிட்டு அதிபர் மாளிகையொன்றைக் கட்டியுள்ளனர். இதன்மூலம் இந்துக்கள் இறந்தவர்களுக்கான இறுதி மரியாதைகளை முன்னெடுக்கும் பகுதியின் புனிதத்தை இராணுவத்தினர் சீர்குலைத்துள்ளனர்.


இந்துப் பாரம்பரியம், கலாசாரத்தின் இறுதிச் சின்னமாகக் காணப்படுகின்றவற்றை அழிக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இலங்கை அரசாங்கம் செயற்படுகின்றது.


இலங்கை அரசாங்கத்தை பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியாவும். சர்வதேச சமூகமும் பிணையெடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளபோதிலும் இந்த அடக்கு முறைகள் இடம்பெறுகின்றன.


புனிதப் பொருள்களை அவமதிக்கும் இந்தச் செயல் இடம்பெற்ற சில காலத்துக்குள் திருகோணமலையில் உள்ள இந்துக்களின் புனித பகுதியான கன்னியா வெந்நீரூற்றை அநுராதபுர நகரத்துடன் தொடர்புடையது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.


அதனை இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. முல்லைத்தீவு குருந்தூர்மலையில் உள்ள ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அழிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட் டம் வெடுக்குநாறிமலையில் உள்ள ஆலயத்தின் பல விக்கிரகங்கள் திருடப்பட்டும், அழிக்கப்பட்டும் உள்ளன.


இலங்கைக்கான சர்வதேச உதவிகளை நாங்கள் வரவேற்கும் அதேவேளை. இலங்கையில் இந்து பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை அழிக்கும் தனது நிகழ்ச்சி நிரலுக்கு இலங்கை அரசாங்கம் இந்த உதவியை பயன்படுத்த, நிதி வழங்கும் சமூகம் அனுமதிக்கக்கூடாது என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.


இந்து மதகலாசாரம் அழிக்கப்படுவதை தடுப்பதற்காக இலங்கையின் வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சர்வதேச பாதுகாப்புப் பொறிமுறையை அமைக்கவேண்டும் என இலங்கை அரசாங்கத்தை இலங்கைக்கு நிதி வழங்கும் சமூகம் வலியுறுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் - என்றுள்ளது.

No comments

Powered by Blogger.