Header Ads



5 பேரின் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மீட்பு


நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்தியதாக கருதப்படும் கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரம் என்பன கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேக நபரை 2 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது. அதனடிப்படையில் சந்தேக நபர் இன்று அதிகாலை நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


சந்தேக நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற வீட்டின் பின்புறமாக உள்ள கிணற்றிலிருந்து கொலைக்கு பயன்படுத்தியதாக கத்தி மற்றும் சந்தேக நபர் அணிந்திருந்த சாரமும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேனன் தலைமையில் மீட்கப்பட்டது. 


நெடுந்தீவு – மாவலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் நேற்றுமுன்தினம் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன. அதன்போது, வயோதிபப் பெண்ணொருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 


இந்த பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலை இடம்பெற்ற தினத்தன்று காலை அங்கிருந்து வெளியேறிச் சென்றதாக சொல்லப்படும்  நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.   குறித்த நபரிமிருந்து 26 பவுண் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.