5 கோடி ரூபா நஷ்டம்
2021 ஆம் ஆண்டில், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 50 மருந்தகங்களில் (ஒசுசல) 26 க்கு தேவையற்ற செலவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 கோடியே 32 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், அவற்றில் 10 மருந்தகங்களின் இழப்பு, 15 இலிருந்து 175 வீதம்வரை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை, பண்டாரகம மற்றும் மொனராகலை ஆகிய நான்கு மருந்தகங்கள், கடந்த 2020ஆம் ஆண்டில் இலாபம் ஈட்டியிருந்தது.
எனினும், 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2021 ஆம் ஆண்டில் மருந்தக ஊழியர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை, ஆனால் ஊழியர்களின் செலவுகள் 10 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக கணக்காய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை மருந்தகத்தின் ஊழியர்களின் செலவு முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டில் 47 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகவும், இது மருந்தகத்தின் வருமான இழப்பை நேரடியாகப் பாதித்துள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2021ஆம் ஆண்டு தம்புள்ளை மருந்தகம் 59 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமாக நஷ்டமடைந்துள்ளதாக தெரிவிக்கும் கணக்காய்வு அதிகாரிகள், இது மருந்தகம் ஒன்றுக்கு ஏற்பட்ட பாரிய நஷ்டம் என தெரிவித்துள்ளனர்.
மருத்துவப் பொருட்கள் சேதம் மற்றும் காலாவதியானமை இந்த இழப்புக்கு முக்கியக் காரணம் என்று கணக்காய்வு அறிக்கை மேலும் கூறுகிறது.
எவ்வாறாயினும், கொவிட் தொற்று பரவலும் இந்த நஷ்டத்துக்கு முக்கியமானதொரு காரணம் என்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கூறுகிறது.
Post a Comment