550 குழந்தைகளுக்கு தந்தை - போதும் நிறுத்து என நீதிமன்றம் உத்தரவு
தொழில்நுட்பம் நன்கு வளர்ச்சியடைந்துவிட்ட இன்றைய உலகில் கிட்டத்தட்ட அனைத்துக்குமே மாற்று (Alternative) என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அதிலும் மருத்துவத்துறையில் நினைத்துப் பார்க்க முடியாத வளர்ச்சியை அடைந்துவிட்டோம், ரத்த தானத்தைப் போல விந்தணு தானம் என்பது அவ்வளவு எளிதாகிவிட்டது. ஆனால், நெதர்லாந்து நீதிமன்றம் விந்தணு தானம் செய்யும் ஸ்பெர்ம் டோனர் (sperm donor) ஒருவரை இனி விந்தணு தானம் செய்யத் தடை விதித்திருப்பதன் பின்னணி பலரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.
காரணம் நெதர்லாந்திலுள்ள மருத்துவ வழிகாட்டுதலின்படி, ஒரு ஸ்பெர்ம் டோனர் 12 பெண்களுக்கு மேல் விந்தணு தானம் செய்யக் கூடாது அல்லது 25-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக இருக்கக் கூடாது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த விவகாரத்தில் ஜொனாதன் (Jonathan) எனும் 41 வயது ஸ்பெர்ம் டோனர் கிட்டத்தட்ட 550-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக 2017-லேயே 100-க்கும் குழந்தைகளுக்கு ஜொனாதன் தந்தையாக இருப்பது தெரியவந்த பிறகு, நெதர்லாந்திலுள்ள கருவுறுதல் கிளினிக்குகளுக்கு (fertility clinics) விந்தணு தானம் செய்ய அவருக்குத் தடை விதிக்கப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனாலும் ஜொனாதன், ஆன்லைன் மூலம் தொடர்ந்து விந்தணுக்களை தானம் செய்துவந்திருக்கிறார்.
தற்போது இந்த விவகாரமானது அறக்கட்டளை மற்றும் ஒரு குழந்தையின் தாயார் ஒருவர் ஜொனாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த பிறகு, தற்போது தெரியவந்திருக்கிறது.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இனி விந்தணு தானம் செய்யக்கூடாது என ஜொனாதனுக்கு உத்தரவிட்டு, மீறினால் ரூ.90 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என நேற்று தீர்ப்பளித்தது. மேலும் இது குறித்து வழக்கை விசாரித்த நீதிபதி தேரா ஹெஸ்லிங்க் (Thera Hesselink), “கடந்த காலத்தில் பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து வருங்கால பெற்றோருக்குத் தவறான தகவலளித்திருக்கிறார். எனவே புதிய வருங்கால பெற்றோருக்கு அந்த நபர், தனது விந்தணு தானம் செய்வதை நீதிமன்றம் தடை செய்கிறது” என்று நீதிமன்றத்தில் கூறினார்.
Post a Comment