சவூதி வழங்கிய 50 தொன் பேரீத்தம்பழம் 2265 பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிப்பு - வதந்தி பரப்பாதீர் என்கிறார் பணிப்பாளர்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ரமழான் அன்பளிப்பாக சவூதி அரேபியா அரசு இலங்கைக்கு வழங்கிய 50 தொன் பேரீத்தம் பழங்கள் நாடு தழுவிய ரீதியில் பதிவு செய்யப்பட்டுள்ள 2265 பள்ளிவாசல்களுக்கு 14 கிலோ வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் பேரீத்தம் பழ விநியோகம் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் தகவல்கள் தவறானவையாகும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட். ஏ.எம்.பைஸல் தெரிவித்தார்.
பேரீத்தம் பழ விநியோகம் தொடர்பில் பரப்பப்பட்டு வரும் செய்தி தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில், பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு தொகைப் பள்ளிவாசல்களுக்கு வேறு அமைப்புகள் மூலம் பேரீத்தம் பழம் விநியோகிக்கப்பட்டதால் அவற்றுக்கு திணைக்களம் விநியோகிக்கவில்லை.
முதற்கட்டமாக திணைக்களத்துக்கு 30 தொன் பேரீத்தம் பழங்களும், பின்பு இரண்டாம் கட்டமாக 6 தொன்னும், மூன்றாம் கட்டமாக 14 தொன்னும் வழங்கப்பட்டன. மூன்றாம் கட்டமாக கிடைக்கப்பெற்ற 14 தொன் பேரீத்தம் பழங்கள் புத்தளம், கம்பஹா, கேகாலை, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளிவாசல்களுக்கு மேலதிகமாக விநியோகிக்கப்பட்டது.
கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களுக்கும் விநியோகிக்கப்பட்டன. ஆரம்பக் கட்டத்தில் தலா 14 கிலோ வீதம் விநியோகிக்கப்பட்ட பேரீத்தம் பழங்களை சில பள்ளிவாசல்கள் பெற்றுக்கொள்ளவில்லை. இதேவேளை பல்வேறு அமைப்புகளால் இறக்குமதி செய்த பேரீத்தம் பழங்கள் பெரும் எண்ணிக்கையில் சில பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
திணைக்களத்தினால் பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கப்பட்ட தலா 14 கிலோ பேரீத்தம் பழம் வீடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதற்கு போதுமானதல்ல என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இதன் காரணமாகவே சிலர் சமூக வலைத்தளங்கள் மூலம் தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றனர். இவ்விநியோகத்தில் எவ்வித முறைகேடுகளும் இடம்பெறவில்லை என்பதை திணைக்களத்தின் பணிப்பாளர் என்ற வகையில் பொறுப்புடன் கூறுகிறேன்.
பொதுமக்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்கள் பேரீத்தம் பழங்கள் விநியோகம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள விரும்பினால் 011 2667909 என்ற இலக்கத்துடன் திணைக்களத்தை தொடர்புகொண்டு பெற்றுக் கொள்ளலாம். திணைக்களம் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய விரும்புகிறேன் என்றார்.- Vidivelli
உங்கள் சேவையைப் பாராட்டுகின்றோம். உங்கள் மீது எமது சமூகத்துக்கு எந்த தவறான எண்ணங்களும் இல்லை. எதிர்வரும் காலங்களில் எங்களுக்கு சவூதி அரேபியாவின் ஈத்தம் பழம் நோன்பு திறக்கத் தேவையில்லை என உத்ததியோகபூர்வமாக சவூதி தூதரகத்துக்கும், சவூதி வௌிநாட்டு அமைச்சுக்கும் அறிவியுங்கள், அவர்கள் செய்யும் உதவிக்கு நன்றி தெரிவித்து இந்த 50 தொன் ஈத்தம்பழங்களை வைத்து எங்கள் நேரங்களை வீணாக்கி பகிரமுடியாததை பகிரும் பலவந்தமாக செயல்பாடுகளில் இனியும் எங்கள் நேரத்தை வீணாக்க முடியாது என அறிவியுங்கள் . நோன்பு நோற்கும் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்க அறவே வசதியில்லாவிட்டால் நாம் இன்ஷா அல்லாஹ் சுத்தமான நீர் பருகி நோன்பு திறப்போம். அல்லாஹ்வுடைய கிருபையால் இதுவரை நீருக்கு எம்மிடத்தில் பஞ்சமில்லை
ReplyDelete