Header Ads



"இயேசுவை சந்திக்க சாப்பிடாமல் நோன்பு இருங்கள்" மத போதகரின் பேச்சைக் கேட்டு உயிர்நீத்த 47 பேர்


கென்யாவின் கடற்கரை நகரான மெலிந்தி அருகே மண்ணில் புதைக்கப்பட்டிருந்த 47 பேரின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. மத போதகரின் பேச்சைக் கேட்டு, கடவுளைப் பார்க்கும் ஆசையில் அவர்கள் நோன்பிருந்து உயிர் நீத்ததாக கூறப்படுவது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


தோண்டி எடுக்கப்பட்ட உடல்களில் சில குழந்தைளுடையது என்று கூறியுள்ள போலீசார், மேலும் சில உடல்கள் கிடைக்கக் கூடும் என்று தெரிவித்துள்ளனர்.


ஷகாஹோலா வனப்பகுதியில் குட் நியூஸ் இண்டர்நேஷனல் சர்ச் உறுப்பினர்கள் 15 பேர் ஆழமில்லாத கல்லறையில் இருந்து கடந்த வாரம் மீட்கப்பட்டார்கள்.


இதுதொடர்பாக குற்றம்சாட்டப்படும் மத போதகர் பால் மெக்கின்ஸியிடம் காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.


கென்ய அரசு தொலைக்காட்சியான கே.பி.சி., அவரை மக்கள் வழிபடும் தலைவர் என்று வர்ணித்துள்ளது. 58 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.


அவற்றில் ஒரு கல்லறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதில், 3 குழந்தைகளும், அவர்களின் பெற்றோரும் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.


தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத போதகர் மெக்கின்ஸி, தனது சர்ச்சை கடந்த 2019-ம் ஆண்டே மூடிவிட்டதாக கூறியுள்ளார். எனினும், அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.


"இயேசுவைச் சந்திக்க" வேண்டுமானால் சாப்பிடாமல் நோன்பு இருங்கள் என்று தன்னைப் பின்பற்றும் மக்களிடம் அவர் போதித்ததாக குற்றம்சாட்டப்படுகிறது.


அவர்கள் உயிரிழப்புக்கு பட்டினி தான் காரணமா என்பதை உறுதி செய்ய, உடல்களில் இருந்து டி.என்.ஏ. மாதிரிகளை எடுத்து, நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாக 'தி டெய்லி' என்ற கென்ய நாளிதழ் கூறியுள்ளது.


சாப்பிடாமல் நோன்பிருந்து உயிரிழந்ததாக நம்பப்படும் 4 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுமே போதகர் மெக்கின்ஸியை கடந்த 15-ம் தேதி காவல்துறையினர் கைது செய்துவிட்டனர்.


சிட்டிசன் தொலைக்காட்சியில் பேட்டியளித்த மெலிந்தி சமூக நீதி மையத்தைச் சேர்ந்த விக்டர் கவுடோ, "நாங்கள் அந்த வனப்பகுதிக்குச் சென்ற போது பெரிய, உயரமான சிலுவை நடப்பட்டிருப்பதைக் கண்டோம். அதன் மூலம், அங்கே 5 பேருக்கும் அதிகமானோர் புதைக்கப்பட்டிருக்கலாம் என்பதை புரிந்து கொண்டோம்" என்றார்.


கென்ய உள்துறை அமைச்சர் கிதுரே கிந்திகி, "அந்த குறிப்பிட்ட வனப்பகுதியில் 800 ஏக்கர் பரப்பளவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அது குற்றம் நடந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.


அந்த மத போகதர் 3 கிராமங்களுக்கு நாசரேத், பெத்லஹேம், ஜூதேயா என்று பெயரிட்டதாகவும், தன்னைப் பின்பற்றும் அனைவருக்கும் உண்ணாவிரதத்தை தொடங்கும் முன்பு குளங்களில் ஞானஸ்நானம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.


மத அடிப்படைவாதம் நிறைந்த கென்யாவில் இதுபோன்ற ஆபத்தான, அரசால் ஒழுங்குபடுத்தப்படாத அல்லது தன்னையே கடவுளாக வழிபடச் செய்யும் போதகர்களால் மக்கள் ஈர்க்கப்பட்டதற்கு ஆதாரமாக ஏற்கனவே பல நிகழ்வுகள் உள்ளன.

No comments

Powered by Blogger.