இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா - நாட்டிலிருந்து அழைத்துச்செல்ல 110 முகவர்கள் நியமனம்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்வருட ஹஜ் யாத்திரைக்காக இலங்கையிலிருந்து ஹஜ் யாத்திரிகர்களை சவூதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்வதற்-கு 110 ஹஜ் முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்நியமனம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஹஜ் முகவர்களுக்கென நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையின் பின்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹஜ் முகவர்களுக்கான அனுமதிப்பத்திரக் கட்டணமாக ஹஜ் முகவர்களிடமிருந்து தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா திணைக்களத்தினால் அறவிடப்பட்டுள்ளது. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு மீள பெற்றுக்கொள்ளக்கூடியதான பதிவுக்கட்டணம் 25 ஆயிரம் ரூபா செலுத்தி தங்களைப் பதிவு செய்து கொண்டுள்ள ஹஜ் யாத்திரிகர்களுக்கு அவர்களது பதிவு இலக்க வரிசைக்கிரமத்துக்கு அமைவாக சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இவ்வருடம் சவூதி அரேபிய ஹஜ் அமைச்சு இலங்கைக்கு 3500 ஹஜ் கோட்டா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருட ஹஜ் கட்டணம் ஹஜ் முகவர் நிலையங்கள் வழங்கும் சேவையின் தரத்துக்கு அமைவாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் கட்டணம் தொடர்பில் விடிவெள்ளி சில ஹஜ் முகவர்களைத் தொடர்பு கொண்டு வினவியபோது 18–20 இலட்சம் ரூபாயாக அமையும் என அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சவூதி அரேபியாவுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டு சவூதி அரேபிய ஹஜ் அதிகாரிகளுடன் ஹஜ் கட்டணம் மற்றும் தரமான சேவைகள் தொடர்பில் கலந்துரையாட வேண்டுமெனவும் குறைந்த செலவில் ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுக்க ஆவண செய்ய வேண்டுமெனவும் ஹஜ் முகவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Post a Comment