Header Ads



சுவிஸிலிருந்து சென்ற 3 பேர் உட்பட, 5 பேர் படுகொலை - நெடுந்தீவில் பதற்றம்


சுவிசர்லாந்திலிருந்து யாழ்ப்பாணம் வருகை  தந்த மூவர் உட்பட ஐந்து பேர் இன்று கொலை செய்யப்பட்டுள்ளமை நெடுந்தீவிற்கு மட்டுமல்லாமல் தீவகத்திற்கே பாதுகாப்பற்ற தன்மை நிலவுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது என தீவக சிவில் சமூகத்தின் உப தலைவர் கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார்.


ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“ வீட்டில் படுகொலை செய்யப்பட்ட பெண்மணியின் கணவர் 1985 இல் குமுதினி படகுப் படுகொலையில் கொலை செய்யபட்டார். மேலும் குறித்த பெண்மணி பல சமூக செயற்பாடுகளை செய்துகொண்டிருந்தார்.


இந்நிலையில் நெடுந்தீவு திருக்கேதீச்சரம் சிவன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதற்காக சுவிஸிலிருந்து மூன்று பேர் அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்களுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவரும் வீட்டில் இருந்துள்ளனர்.


இந்நிலையிலேயே நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மித்த வீடொன்றில், சுவிசர்லாந்திலிருந்து வருகை தந்த மூவர் உட்பட ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு பெண்மணி யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் குறித்த வீட்டிற்கு அருகாமையில் சுமார் 300 கடற்படை வீரர்களை கொண்ட கடற்படை முகாமொன்றும் காணப்படுகின்றது.


இவ்வாறான நிலையில் இன்று இடம்பெற்றுள்ள கொடூரமான படுகொலைகள் தீவகத்திற்கே பாதுகாப்பற்ற தன்மை நிலவுகின்றதா என்ற கேள்வியை எழுப்புகின்றது.”என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.