Header Ads



2 கண்களையும் இழந்த அப்துல்லாஹ், குறிப்பிட்ட விஷயம் உள்ளத்தை பிழிகின்றது (வீடியோ)

- Ash-Sheikh Agar Muhammed -


إنا لله وإنا إليه راجعون!

எனது அபிமானத்திற்குரிய காரி,தெய்வீகக் குரலோன் ஷெய்க் அப்துல்லாஹ் காமில் அவர்களின் மரணச் செய்தியைக் கேள்வியுற்று நான் பேரதிர்ச்சியடைந்தேன். இந்த இளம் வயதில் அல்லாஹ் அவரை தன்பக்கம் அழைத்துக் கொள்வான் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.


வபாத்தாகும் போது அவருக்கு வயது வெறும் 38 மாத்திரமே.

https://www.facebook.com/watch/?v=775685233882600

لله ما أخذ وله ما أعطي وكل شيء عنده بأجل مسمي!


தனது உணர்வுபூர்வமான அல்குர்ஆன் திலாவத்தினால் இலட்சோப இலட்ச மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர் அவர்.அவரது அல்குர்ஆன் பாராயணத்தைக் கேட்கும் போது கல் நெஞ்சம் கூட கரைந்து உருகும்;கண்ணீர் வடிக்கும்.எனது உள்ளத்திற்கு அமைதியும் ஆறுதலும் தேவைப்படும் பொழுதெல்லாம் நான் செவிமடுக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய காரிகளில் முக்கியமானவர் இவர்.


ஷெய்க் அப்துல்லாஹ் அஹ்மத் காமில் ஓர் எகிப்தியர்;கண் பார்வையை இழந்தவர்.சிறு பிராயத்திலேயே ப்ரேல் முறையில் அல்குர்ஆனை ஓதக்கற்று அதனை மனனம் செய்தவர்;ஒரு பட்டதாரியும் கூட.தஃவாவிலும் ஈடுபாடு கொண்டிருந்தவர்.


கடந்த றமழானில் அமெரிக்க முஸ்லிம்களின் அழைப்பையேற்று அங்கு சென்றிருந்தார். அமெரிக்காவின் பல பாகங்களிலுமுள்ள மஸ்ஜித்களுக்குச் சென்று தொழுகை நடாத்தினார்; உபதேசங்கள் செய்தார்.


இறுதியாக 26-04-2023 ஆம் திகதி அதாவது நேற்று முன்தினம் தான் தங்கியிருந்த அமெரிக்கா-நிவ்ஜேர்ஸி மஸ்ஜிதில் ளுஹர் தொழுகையை இமாமாக நின்று நிறைவேற்றியவர் சற்று ஓய்வெடுத்துக் கொள்வதற்காக தனது அறைக்குச் சென்றார். ஆயினும் அஸர் தொழுகைக்கு அவர் மஸ்ஜிதுக்கு வரவில்லை. இதனை அவதானித்தவர்கள் சற்று நேரம் கழித்து அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது அவரது ரூஹ் பிரிந்திருந்தது.


إنا لله وإنا إليه راجعون!


இந்த ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை அல்குர்ஆனை 24 நான்கு தடவைகள் ஓதி முடித்திருக்கின்றார் ஷெய்க் அப்துல்லாஹ். தொடர்ந்தேர்ச்சியான பயணங்கள் காரணமாக இதைவிட அதிகமாக அல்குர்ஆனை 'கத்ம்' செய்வதற்கான சந்தர்ப்பம் தனக்குக் கிடைக்கவில்லையே என ஆதங்கத்தோடு தனது சகாக்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.


தனது இரு கண்களையும் இழந்திருந்த ஷெய்க் அப்துல்லாஹ் ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட விஷயம் நமது உள்ளத்தை பிழிகின்றது:


"நாளை மறுமையில் எனது றப்பை நான் என் கண்களால் பார்க்கின்ற பேற்றைப் பெறுவேன் என்ற எனது அசையாத நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே கண்களை இழந்துள்ள என்னை பொறுமை காக்க வைக்கின்றது."


اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والبرد والثلج ونقه من الخطايا كما ينقي الثوب الأبيض من الدنس!


யாஅல்லாஹ்!  அன்னாருடைய பாவங்களை மன்னிப்பாயாக!   அவருக்கு அருள் செய்வாயாக!   அவருக்கு ஆபியத்தை நல்குவாயாக!   அவரை பொறுத்தருள்வாயாக!   


அவரை வரவேற்று கண்ணியப்படுத்துவாயாக!   அவருடைய நுழைவிடத்தை விசாலமானதாக ஆக்கியருள்வாயாக!


தண்ணீர்,  பனிக்கட்டி,  ஆலங்கட்டி  ஆகியவற்றைக் கொண்டு அவரை சுத்தம் செய்வாயாக!  அழுக்கிலிருந்து  வெண்மையான ஆடை சுத்தம் செய்யப்படுவது போன்று, அவரைப் பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்துவாயாக!   


அவருடைய இல்லத்தை விட  மிகச் சிறந்ததோர் இல்லத்தை அவருக்கு நீ வழங்குவாயாக!  அவருடைய குடும்பத்தை விட  சிறந்த குடும்பத்தினரை அவருக்கு நீ மாற்றீடாக கொடுப்பாயாக!   


மேலும் அவரை கப்ருடைய வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக; நரக வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக!  அவரை நீ சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக!


No comments

Powered by Blogger.