வேலைக்கு ஆள் தேவை - சம்பளம் 27 ஆயிரம் பவுண்ட்ஸ்
- அன்டோனெட் ராட்ஃபோர்ட் -
ஒரு வருடத்திற்கு தேவையான காய்கறி, பழம், மளிகை பொருள் எல்லாம் கொடுத்து, தங்க வசதியும் செய்து கொடுத்து வருடத்திற்கு இந்திய மதிப்பில் 25 லட்சம் முதல் 27 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இந்த வேலைக்கு ஆள் தேவை என சமீபத்தில் விளம்பரம் வெளியாகி இருக்கிறது.
பிரிட்டனைச் சேர்ந்த வனவிலங்கு குழு, உலகின் தொலைதூரத்தீவில் 13 மாதங்கள் தங்கி வேலை செய்ய பொருத்தமான நபரைத் தேடுகிறது.
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டனுக்கு சொந்தமான காஃப் தீவில் நிரந்தரமாக யாரும் தங்குவது இல்லை. ஆனால் இந்த தீவில் 80 லட்சம் பறவைகள் வசிப்பதாக கூறப்படுகிறது.
இந்த தீவு ஆப்ரிக்க கண்டத்தின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 2,400 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தீவில் விமான நிலையம் இல்லை. காஃப் தீவை அடைய தென்னாப்பிரிக்காவிலிருந்து ஏழு நாள் படகில் பயணம் செய்து செல்ல வேண்டும்.
தற்போது காஃப் தீவில் பணியாற்றும் ரெபேக்கா குட்வில், லூசி டோர்மேன் ஆகியோர் இந்த தீவுக்கு படகு மூலமாகவே சென்றடைந்தனர்.
இந்தத் தீவில் 7 பேர் முழு நேர ஊழியர்களாக பணியாற்றுகின்றனர். இவர்கள், காஃப் தீவை தங்கள் வீடாக கருதுகின்றனர்.
காஃப் தீவு, தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள மலைமுகடு
ரெபேக்காவும், லூசியும் பறவைகள் பாதுகாப்புக்கான ராயல் சொசைட்டியில் (RSPB) பணிபுரிகின்றனர்.
காஃப் தீவுக்குச் செல்வதற்கு முன், லூசி அண்டார்டிகாவில் பணிபுரிந்தார். ரெபேக்கா ஸ்காட்லாந்தில் பறவைகள் பாதுகாப்புக்கான ராயல் சொசைட்டியில் பணிபுரிந்தார்.
இப்போது காஃப் தீவில் வேலை பார்த்து வரும் ரெபேக்காவின் பணிக் காலம் செப்டம்பர் மாத இறுதியில் முடிவடைகிறது. அவருக்கு மாற்றாக வேறு ஒரு நபரை பணியமர்த்த, புதிய கள அதிகாரியை பறவைகள் பாதுகாப்புக்கான ராயல் சொசைட்டி தேடுகிறது.
இதற்காக அந்த அமைப்பு அண்மையில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. காஃப் தீவில் பறவைகள் குறித்து தங்கி ஆய்வு செய்ய விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
தேர்வு செய்யப்படும் தகுதியான நபருக்கு ஆண்டுக்கு 25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் பவுண்ட்ஸ் (£25,000 - £27,000) வரை ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 25 லட்சம் முதல் 27 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.
ஆண்டுக்கு 26 நாள் விடுமுறையும், விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓய்வூதியமும், ஆயுள் காப்பீடும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன வேலை?
இந்த வேலையில் சேரும் நபரின் முக்கிய பணி என்பது, இந்த தீவுக்கு வரும் கடல் பறவைகளை கண்காணித்து கணக்கெடுப்பதாகும்.
இந்த தீவுக்கு பல இனங்களை சேர்ந்த அரிய வகை கடல் பறவைகள் வரும் என்பதால், அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும் அவற்றின் பாதுக்காப்பை உறுதி செய்யும் வகையில் பல்லுயிர் பெருக்கத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
மேலும் அண்டார்டிகாவுக்கு அருகே இருக்கும் இந்த தீவின் தட்பவெப்ப நிலை கடினமாக இருக்கும் என்பதால், அதற்கேற்ப வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடத்தில் அறிவியல் பட்டம் அல்லது அதற்கு சமமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் கள அனுபவம் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு வரும் நபர் கடினமான வானிலையை எதிர்கொள்ள வேண்டும். மேலும் ஒரு வருடத்திற்கு வீடு திரும்பும் வரை அவர்களால் ஃப்ரெஷான உணவு எதுவும் சாப்பிட முடியாது, என ரெபேக்காவும் லூசியும் எச்சரிக்கிறார்கள்.
"பிரிட்டனைச் சேர்ந்த எங்களுக்கு மழை ஒன்றும் பெரிதல்ல, நாங்கள் பார்க்காத மழையா என்று நினைத்து இங்கு வந்தேன். ஆனால் மிக கனமழை பெய்யும். 'ரோரிங் ஃபோர்டிஸ்' என்று அழைக்கப்படும் மோசமான குளிர் முனையில் இருக்கிறோம். அதனால் இங்கு கடுமையான குளிர் காற்று வீசும்,"என்கிறார் லூசி.
"இந்த தீவில் இருந்து அருகில் உள்ள நாட்டுக்கு செல்ல நீங்கள் சில ஆயிரம் கிலோமீட்டர் கடலில் பயணம் செய்ய வேண்டும். அப்படி என்றால் எப்படி உங்களுக்கு ஃப்ரெஷான உணவு கிடைக்கும். கேனில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். அதை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்," என்கிறார் ரெபேக்கா.
"நான் இங்கு வருவதற்கு முன்பே இங்கு கிடைக்கும் உணவு பற்றி எனக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டது," என்று லூசி கூறினார்.
"ஃபிரெஷான கேரட்டையும் ஆப்பிளையும் கடித்து சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது," என லூசி தெரிவித்தார்.
பழங்கள், காய்கறிகளை ஃபிரெஷாக சாப்பிடுவதால், அந்த விதைகள் இந்த தீவு முழுவதும் பரவி அவை இங்கு முளைக்கும் அபாயத்தை தவிர்க்கவே கேனில் அடைக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்கின்றனர். இதனால் இந்த தீவில் பல்லுயிர் பெருக்கத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இதனால் ஒரு வருடத்திற்கு தேவையான காய்கறிகளையும், இறைச்சியையும் சேமித்து வைக்க இரண்டு பெரிய ஃபீரிஸர் இங்கு பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும், புதிய நபரை அழைத்து வரும் போது அந்த வருடத்திற்கான உணவு இங்கு நிரப்பப்படுகிறது. அந்த உணவை வைத்து இந்த 7 பேரும் ஒரு வருடம் உயிர் வாழ வேண்டும்.
செப்டம்பர் மாதத்தில் பழைய ஊழியர்கள் விடுப்பில் செல்வார்கள். அப்போது அவருக்கு பதிலாக புதிய நபர் காஃப் தீவில் வேலைக்கு சேர்ந்து கொள்வார்.
இப்போது தேர்வு செய்யப்படும் நபர் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காஃப் தீவுக்கு சென்று தனது பணியை தொடங்க வேண்டும்.
"நான் ஸ்காட்லாந்தில் பணிபுரிந்த போது செலவிட்ட நேரத்தை விட இங்கு எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவது போல் உணர்கிறேன்," என்கிறார் ரெபேக்கா.
இங்கு பணியாற்றும் அனைவருக்கும் இணையதள வசதி வழங்கப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரங்களில் இங்குள்ள பணியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக நிற்பார்கள் என்று ரெபேக்கா கூறுகிறார்.
"இங்குள்ளவர்கள் நல்ல மனிதர்கள். நாங்கள் அனைவரும் எங்கள் கதைகளை பகிர்ந்து கொள்வோம். தெரியாத விஷயத்தை பிறரிடம் இருந்து கற்றுக் கொள்கிறோம். கடினான காலங்களில் ஒருவரையொருவர் ஆதரிக்கிறார்கள்.''
லூசியும் ரெபேக்காவும் பறவைகள் பாதுகாப்புக்கான ராயல் சொசைட்டிகாக அழிந்து வரும் பறவை இனங்களான அட்லாண்டிக் மஞ்சள்-மூக்கு அல்பாட்ராஸ்(Atlantic yellow-nosed albatross), அட்லாண்டிக் பெட்ரல் (Atlantic petrel), மேக்கில்லிவ்ரேயின் ப்ரியான்(MacGillivray Prion) போன்ற பறவைகளை கண்காணித்து வருகின்றனர்.
பகல் நேரங்களில் நீர் புகாத மழை கோட், முழங்கால் அளவு பூட்ஸை அணிந்து கொண்டு தீவு முழுவதும் இந்த பறவைகளின் தடங்களை தேடி பதிவு செய்ய வேண்டும்.
இந்த பறவைகள் பொரிக்கும் குஞ்சுகளை அடையாளம் கண்டு கணக்கெடுப்பதும் இவர்களின் தினசரி பணிகளின் ஒரு அங்கமாகும்.
"இங்கே வாழும் எலிகளுக்கு சாப்பிட வேறு விலங்குகள் இல்லாத நிலையில், அவை கடல் பறவைகளை பிடித்து உண்ணத் தொடங்கியுள்ளன. அதனால் அந்த குஞ்சுகளுக்கு ஆபத்தாக இந்த எலிகள் மாறுகின்றன,'' என்கிறார் லூசி.
எலிகளால் ஏற்பட்ட பிரச்னையால், 2017-18ஆம் ஆண்டில் டிரிஸ்டன் அல்பாட்ராஸ் குஞ்சுகளில் 21% மட்டுமே பிழைத்தன. அழிந்து வரும் மேக்கில்லிவ்ரேயின் ப்ரியான் இனத்தின் குஞ்சுகள் பிழைக்கவே இல்லை.
19 ஆம் நூற்றாண்டில் மாலுமிகளால் காஃப் தீவில் எலிகள் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என பறவைகள் பாதுகாப்புக்கான ராயல் சொசைட்டி கருதுகிறது. அதனால் எலிகளை ஒழிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
தற்போது எலித்தொல்லை குறைந்து இருந்தாலும், இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை.
பறவை, எலி, பதப்படுத்தப்பட்ட உணவு, இயற்கை, கடலுடன் காஃப் தீவில் ஒரு வருடம் வேலை செய்ய விண்ணப்பிக்க கடைசி தேதி மே 1ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
Post a Comment