ஈராக்கை ஆக்கிரமித்து 20 ஆண்டுகள் - சதாம் ஹுசேன் இல்லாதது எப்படியுள்ளது..?
- BBC -
அமெரிக்கா இராக் மீது படையெடுத்து இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்நிலையில் இராக்கியர்கள் பலர் சதாம் உசேனின் காலத்தில் இருந்ததைவிட தற்போது நிலைமை மோசமாகவுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
இராக் அதிபர் சதாம் உசேன் 2003ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.
லாப நோக்கம் அற்ற கணக்கெடுப்பு நிறுவனமான கேல்லப் இன்டர்நேஷனல், நாட்டின் 18 பிரதேசங்களில் (மாகாணங்களில்)சுமார் 2,024 பேரிடம் பிப்ரவரி மாதம் கணக்கெடுப்பு ஒன்றை எடுத்தது.
அமெரிக்க படையெடுப்புக்கு முன்னதாக ஒப்பிட்டால் தற்போதைய நிலைமை எவ்வாறு உள்ளது என்று கேட்டதற்கு 60 சதவீதம் பேர் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது என்று தெரிவித்தனர். 40 சதவீதம் பேர் நிலைமை மேம்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
2003ஆம் ஆண்டுக்கு பிறகு இராக்கில் பெரும்பான்மையாக இருக்கும் ஷியா அரபு மக்களின் கை ஓங்கியது. இது இராக்கின் சன்னி அரபு, குர்து, மற்றும் பிற சிறுபான்மை மக்கள் வாழும் பகுதிகளில் கோபத்தை உண்டாக்கியது.
இந்த பாகுபாடு கணக்கெடுப்பில் நன்கு தெரிகிறது. பெரும்பான்மையான சன்னி முஸ்லிம்கள் அதாவது 54 சதவீதம் பேர் சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் வாழ்க்கை நன்றாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
மோசமான சில முடிவுகளுக்கு மத்தியில் ஒரு சிறிய முன்னேற்றத்திற்கான அறிகுறியும் இந்த கணக்கெடுப்பின் மூலம் தெரிகிறது. அதாவது இராக்கில் நிலைமை மோசமாக உள்ளது என மூவரில் ஒருவர் பதில் அளித்துள்ளனர்..
கெல்லப் இண்டர்நேஷனல் தனது பழைய ஆவணங்களை புரட்டிப் பார்த்தால் , 2003ஆம் ஆண்டு இதே கேள்விக்கு மூன்றில் இருவர் நிலைமை மோசமாக உள்ளது என்று பதிலளித்திருந்தனர்
அன்பர் மாகாணத்தில் வாழும் 45 வயது நபர் ஒருவர் கணக்கெடுப்பு குழுவிடம், “சதாம் உசேன் காலத்திலிருந்து நிலைமை மோசமாகியுள்ளதா அல்லது மேம்பட்டுள்ளதா என்பதை கணிப்பது மிக கடினம். மாற்றம் நம்பிக்கையை கொடுக்கிறது. நாமும் கடந்த காலத்தை மறக்கிறோம். பொருளாதாரம் மேம்பட்டிருக்கலாம் ஆனால் உற்பத்தியும் பாதுகாப்பும் குறைந்ததுள்ளது.” என்றார்.
பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்களை இராக் வைத்திருப்பதாக கூறி 2003ஆம் ஆண்டு அமெரிக்கா இராக்கை படையெடுத்தது. சதாம் உசேனின் ஆட்சி சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் கூறப்பட்டது.
ஆனால் ஆயுதங்கள் இருந்ததாக இதுவரை எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை. அந்த போர் ஆயிரக்கணக்கான இராக்கியர்களின் உயிரை காவு வாங்கியதுடன் நாட்டில் ஒரு ஸ்திரத்திமற்ற நிலையையும் உருவாக்கியது.
அமெரிக்க அரசு தனது படையெடுப்பை நியாயப்படுத்தினாலும், பல இராக்கியர்கள் இன்றும் இந்த போருக்கான உண்மையான நோக்கம் குறித்து பல சந்தேகங்களை எழுப்புகின்றனர்.
51சதவீத இராக்கியர்கள் அமெரிக்கா, தங்கள் நாட்டின் வளங்களை திருடுவதற்காகதான் படையெடுப்பை மேற்கொண்டது என நம்புகின்றனர்.
இந்த எண்ணம் எண்ணெய் வளம் மிகுந்த தென் கிழக்கு மற்றும் அன்பர் மாகாணங்களில் வலுவாகவே உள்ளது.
இருப்பினும் கண்கெடுப்பில் 29 சதவீதம் பேர் சதாம் உசேனின் ஆட்சியை தூக்கி எறியவே இந்த படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக நம்புகின்றனர். அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக, பயங்கரவாதத்திற்கு எதிரான போர், இராக்கில் ஜனநாயகத்தை கொண்டுவர போன்ற பிற காரணங்களை மக்கள் குறைவாகவே தேர்வு செய்தனர்.
வடக்கில் தங்களின் உரிமை பறிபோனதாக உணர்ந்த சன்னி மக்களின் ஆதரவுடன் ஐஎஸ் அமைப்பு வளர்ந்து, 2014ஆம் ஆண்டில் இராக்கின் உயிர்நாடியான பாக்தாத்திற்கான சண்டையை தொடங்கியது. ஆனால் அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் ராணுவ ஆதரவால் 2018ஆம் ஆண்டு ஐஎஸ் விரட்டப்பட்டது. அப்போதிலிருந்து அங்கு அமைதி திரும்பியது.
எதிர்காலத்தில் அமெரிக்காவின் இருப்பு குறித்து இராக்கியர்கள் பல்வேறு கருத்துக்களை கொண்டுள்ளனர். 2007ஆம் ஆண்டு கிளர்ச்சி உச்சத்தில் இருந்தபோது இராக்கில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க சிப்பாய்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அது 2500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இராக்கின் தெற்கு பகுதியில் உள்ளவர்கள் அமெரிக்கா உடனடியாக தனதுபடைகளை திரும்பப் பெற வேண்டும் என விரும்புகின்றனர் ஆனால் வடக்கில், குர்திஸ்தான் பகுதியில் உள்ளவர்கள் சிலர் அமெரிக்க வீரர்களின் இருப்பு தேவை என்று கூறுகின்றனர்.
75 சதவீத ஷியா மக்கள் அமெரிக்க கூட்டணிப் படைகளின் வருகையை மோசம் என்று கருதுகின்றனர். அவர்கள் ரஷ்யா, அரசியல் மற்றும் பாதுகாப்பு கூட்டாளியாக இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இரான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே இருக்கும் உறவை கருத்தில் கொண்டால் வன்முறை நிறைந்த பகுதியில் இது ஆச்சரியமளிக்கக்கூடிய பதில் அல்ல.
மத்திய கிழக்கு பிராந்தியம் அமெரிக்காவின் பாதுகாப்பு குடையின்கீழ் இருந்தாலும் சமீப வருடங்களாக, சீனா அங்கு பொருளாதார ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரான் மற்றும் சவுதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சமீபத்தில் சீனாவில் சந்தித்து கொண்டு இருநாட்டு உறவுகளை புதுப்பிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 47 சதவீதம் பேர் இராக்கிலேயே தங்கி நாட்டை சீரமைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் 25 சதவீத அளவில் அல்லது நான்கில் ஒருவர் இராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கணக்கெடுப்பின்போது பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர், “இராக்கின் இளைஞர்கள் பலரும், குறிப்பாக பாக்தாத்தில் வாழும் இளைஞர்கள் வெளிநாடுகளில் தங்களுக்கான வாய்ப்புகள் சிறப்பாக அமைந்துள்ளதாக கருதுகின்றனர்” என்றார்.
இதில் வயது வாரியாக வெவ்வேறு பதில் கிடைத்துள்ளது. 18-24 வயதுக்குட்ப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என விரும்புகின்றனர்.
நாட்டில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் நீண்ட காலமாக நிலவும் ஊழல் பிரச்னையின் வெளிப்பாடுதான் இது.
ஆனால் இராக்கின் கடினமான சூழல்களை புள்ளியல் விவரங்களால் விளக்கிட முடியாது. பல லட்சக்கணக்கான இராக்கியர்களுக்கு தங்களின் கடந்த காலம் வலிகள் நிறைந்ததாக உள்ளது. புதிய தலைமுறையினர் இந்த கடந்த கால வலிகளை சுமந்து கொண்டே ஒரு சிறப்பான எதிர்காலத்தை நோக்கி பயணிக்க வேண்டும்.
இராக்கில் 40 சதவீதம் பேர் 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள். இவர்கள் விரும்புவது பொருளாதார பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்புகள்தான். ஆனால் அதே நேரத்தில் அமைதியும் ஸ்த்திரத்தன்மையும் இவர்களின் மிக முக்கிய தேவை.
தரவுகள்: லியோனி ராபர்ட்சன்
Post a Comment