இலங்கையில் 14 ஆண்டுகளின் பின்னர், பதிவாகிய மலேரியா மரணம்
பேருவளை - சீனக்கோட்டை பகுதியில் 14 வருடங்களின் பின்னர் நாட்டில் மலேரியா நோயாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 15 ஆம் திகதி பேருவளை - சீனக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இரத்தின வியாபாரியான இவர், தான்சானியா சென்று, ஏப்ரல் 10ம் திகதி நாடு திரும்பியுள்ளார். கடந்த 14 ஆம் திகதி காய்ச்சல் தீவிரமடைந்ததால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மறுநாள் 15 ஆம் திகதி வர்த்தகர் உயிரிழந்துள்ளார். இங்கு நடத்தப்பட்ட சோதனையில் இவருக்கு மலேரியா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
குறித்த நபர் சுமார் இரண்டு வாரங்களாக வீட்டில் தங்கியிருந்ததால், குடியிருப்பாளர்கள் மற்றும் பிரதேசவாசிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக களுத்துறை தேசிய சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் தாமர களுபோவில தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் மலேரியா மரணம் எதுவும் பதிவாகாத நிலையில், மேலும் 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் இலங்கையை மலேரியா இல்லாத நாடாக அறிவித்துள்ளது.
இருப்பினும், வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடையே சில சந்தர்ப்பங்களில் மலேரியா பதிவாகியிருந்தாலும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மலேரியா இறப்பு பதிவாகியுள்ளது.
Post a Comment