Header Ads



நட்டத்தில் இயங்கும் 13 அரச நிறுவனங்களின் நட்டம் 1029 பில்லியன் ரூபா, இலாபம் ஈட்டும் 39 நிறுவனங்களின் இலாபம் 218 பில்லியன்


நட்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை இனி திறைசேரியால் பாதுகாக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.


நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த 52 அரச நிறுவனங்களில் 39 நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாகவும், 13 நிறுவனங்கள் நட்டம் அடைவதாகவும் அமைச்சர் கூறினார்.


நட்டத்தில் இயங்கும் 13 அரச நிறுவனங்களின் நட்டம் 1029 பில்லியன் ரூபா எனவும், இலாபம் ஈட்டும் 39 நிறுவனங்களின் இலாபம் 218 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


அரச நிறுவனங்களின் வருடாந்த இழப்பு 811 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


அத்துடன், இலாபம் ஈட்டும் நிறுவனங்களால் திறைசேரிக்கு வரியாக 28 பில்லியன் ரூபாவே செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


சந்தை ஏகபோக உரிமை அரசாங்கத்திற்கு இருந்தாலும், இந்த நிறுவனங்கள் நஷ்டமடைந்து வருவதாக அமைச்சர் கூறினார்.


மேலும், திறைசேரியில் இருந்து பணம் ஒதுக்குவது என்பது இந்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் பணத்தை இந்த நிறுவனங்களின் பராமரிப்புக்காக ஒதுக்குவது என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


இதன்படி, அரசாங்கம் மக்களுக்கு சுமையை அதிகரித்து நிறுவனங்களை பராமரிக்காமல், ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாகவே செயற்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.