அமெரிக்காவில் TikTok க்கு தடை - அழித்து விட 30 நாட்கள் அவகாசம்
அரச தகவல்களை பாதுகாக்கும் முயற்சியாக அரசின் அனைத்து துறைசார்ந்த சாதனங்களில் TikTok செயலியை தடை செய்யும் சட்ட வரைவு அமெரிக்க பாராளுமன்றத்தில் கடந்த டிசம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில், மத்திய அரசு துறைகளின் சாதனங்களில் TikTok செயலிக்கு தடை விதித்து அமெரிக்க அரசு கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், TikTok தரவிறக்கப்பட்டுள்ள சாதனங்களில் அதனை நீக்குவதற்கு 30 நாட்கள் அவகாசம் அளித்து, வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.
'நாட்டின் எண்மக் கட்டமைப்பை வெளிநாட்டு அச்சுறுத்தல்களிடமிருந்து பாதுகாக்க தற்போதைய அரசு அதிகளவில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்க மக்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையைக் காக்க எண்மக் கட்டமைப்பை மேம்படுத்தும் அரசின் முயற்சியில் இந்த உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது,' என அரசின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி கிறிஸ் டீரூசா குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, TikTok உள்ளிட்ட பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான எந்தவொரு செயலியையும் நாடு முழுவதும் தடை செய்ய அதிபருக்கு அதிகாரம் வழங்கும் சட்ட வரைவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய குடியரசுக் கட்சி பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனா்.
இந்நிலையில், TikTok செயலிக்கு தடை விதிக்கும் அமெரிக்க அரசின் செயற்பாடு, அவர்களின் பாதுகாப்பின்மையைக் காட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது. உலகின் முன்னணி நாடு என அடையாளப்படுத்திக்கொள்ளும் அமெரிக்கா, ஒரு பொழுதுபோக்கு செயலியைத் தடை செய்யும் அளவிற்கு பயப்படுவது ஏன் என சீனா கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் TikTok செயலிக்கு எதிரான தடை உத்தரவு கடந்த 2 ஆண்டுகளாக அமுலில் உள்ளது.
அண்மையில் கனடாவும் அரச சாதனங்களில் TikTok செயலியை பயன்படுத்த தடை விதித்தது.
Post a Comment