Header Ads



அமைச்சர், ஆளுநர், Mp க்கள், சபை தலைவர்கள், மேயர், அதிகாரிகளுக்கான புதிய கட்டுப்பாடு

நாட்டிலிருந்து வெளியேறும் பெருமளவிலான அன்னியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கில், அரசுத் துறை அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்கான


கொடுப்பனவுகள் மற்றும் அது தொடர்பான செலவுகளை மார்ச் 20ஆம் திகதி முதல் மட்டுப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .


இதன்படி, இந்த தீர்மானத்தில் அமைச்சர்கள், ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபைகளின் தலைவர்கள், மேயர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் ஆகியோர் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மே 15, 2015 முதல் நடைமுறைக்கு வந்த எப்.எம்.01/2015/01 சுற்றறிக்கைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, ஒரு நாளைக்கு 40 அமெரிக்க டொலர்கள் கொடுப்பனவை அதிகபட்சமாக 30 நாட்களுக்கு மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படிப்பு, பயிற்சி, கலந்துரையாடல்கள், மாநாடுகள் போன்ற திறன்களை மேம்படுத்துவது தொடர்பான வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 25 அமெரிக்க டொலர்கள் வீதம் 15 நாட்கள் முதல் 40 நாட்கள் வரை வழங்கப்படுகிறது.

அரசு சார்பாக உத்தியோகபூர்வ பணிகள் அல்லது பிற வெளிநாட்டு விவகாரங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும்போது வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும், 30 சதவீதம் குறைக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.


மேலும், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தும் அமைச்சின் செயலாளரின் வேண்டுகோளின் பேரில் வழங்கப்படக்கூடிய 750 அமெரிக்க டொலர் பொழுதுபோக்கு கொடுப்பனவை முற்றாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.