Header Ads



டொலரை வைத்திருந்தவர்களுக்கு பயம், IMF உதவி கிடைத்தால் ரூபாய் எழுச்சி பெறுமா..?


இலங்கையில் நெகிழ்ச்சியுடைய நாணய மாற்று விகிதமே உள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். 


ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.    தொடர்ந்தும் தெரிவிக்கையில், 


நெகிழ்ச்சியுடைய நாணய மாற்று விகிதம் என்று சொன்னால் டொலர் வருகின்ற அளவு, டொலர் வெளியே செல்கின்ற அளவு. ஏற்றுமதி செய்யும்
போது எங்களுக்கு டொலர் உள்ளே வருகின்றது. இறக்குமதி செய்கின்ற போது டொலர் வெளியே செல்கின்றது. 


எனவே, இறக்குமதி அதிகமாக இருக்கின்றது. ஏற்றுமதி குறைவாக இருக்கின்றது. ஆகவே கேள்வி அதிகமாக இருந்து நிரம்பல் குறைவாக இருந்தால் விலை கூடும்.  ஆகவே டொலரின் விலை அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். 


ஆனால் இதில் மத்திய வங்கி தலையிட்டு ஒரு எல்லையை நியமித்துத்தான் செயற்படுகின்றது. இது அண்மை காலத்தில் இலங்கை நாணயத்தின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம் ஒரு செயற்கையானது. ஊகத்தின் அடிப்படையிலானது. 


உங்களுக்குத் தெரியும் இலங்கையில் பலர் டொலர்களை ஒரு சொத்தாக தங்களது வீடுகளில் பேணினார்கள். டொலரினுடைய பெறுமதி இன்னும் கூடும். எங்களுக்கு இலாபம் கிடைக்கும் என்று எண்ணியிருந்தனர். 


ஐஎம்எப் இன் உதவி தற்போது கிடைக்கின்றது என்ற நிலை வந்ததும் அவ்வாறானவர்களுக்கு மனதில் ஒரு பயம் வந்திருக்கும், டொலரின் பெறுமதி குறையப் போகின்றது என்ற ஒரு எண்ணம்  தோற்றம் பெற்றிருக்கும். 


எனவே, அனைவரிடத்திலும்  ஒரு திகில் ஏற்பட்டது. எனவே பெருமளவான டொலர்களை வைத்திருந்தவர்கள் உடனடியாக சந்தைக்கு வந்து தங்களது டொலர்களை மாற்ற முற்பட்டார்கள். டொலர்கள் இவ்வாறு வெளியில் வந்தது உண்மை. 


இந்தநிலையில்  இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் என்பது ஒரு ஊகத்தின் அடிப்படையிலானது.  நிலையானது அல்ல.  எனவே மீண்டும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிடைகிறது.  


ஆனால், உண்மையாக இலங்கை நாணயத்தினுடைய பெறுமதி நிலையாக இருக்க வேண்டுமானால் அது ஏற்றுமதி வருமானத்தின் ஊடாக வரவேண்டும். குறிப்பாக ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானவை.  ஆனால் அவை இரண்டும் நடக்கவில்லை. 


இந்த நிலையில், தற்போது ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வளர்ச்சி என்பது ஊகத்தின் அடிப்படையிலானதே தவிர நிலையானது அல்ல என குறிப்பிட்டுள்ளார்.  

No comments

Powered by Blogger.