“இஸ்லாமிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவேன்” என சஜித் தெரிவித்தாரா..?
– ஆர்.யசி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முஸ்லிம் நாடுகள் தொடர்பாக வெளியிட்டதாக கூறப்படும் அறிக்கையை மேற்கோள்காட்டி உதயன் பத்திரிகையின் உத்தியோகபூர்வ சின்னம் மற்றும் பக்க வடிவமைப்புகளை பயன்படுத்தி சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் போலியான செய்திகள் பகிரப்படுவதாக Factseeker கண்டறிந்துள்ளது.
அனைத்து முஸ்லீம் நாடுகளும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதால், இலங்கைக்கு இவ்வாறான “இஸ்லாமிய பயங்கரவாத நாடுகளின்” உதவி தேவையற்றது எனவும், இஸ்லாமிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கு சிங்கள மக்கள் பலமான ஆதரவை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்ததாக குறித்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் “இஸ்லாமிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவேன்” என்று பிரதான தலைப்பிட்டும் “அனைத்து முஸ்லிம் நாடுகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன” என்றவாறு உப தலைப்பிட்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் திலிப் அமுதனிடம் factseeker தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த செய்தியுடன் வெளியாகியுள்ள பக்க வடிவமைப்பு உதயன் பத்திரிகையினது அல்ல எனவும், போலியான பத்திரிகை வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ள போலி பத்திரிகையை இவ்வாறு உதயன் பத்திரிகையின் பெயரில் பிரசுரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டிலும் இவ்வாறே தமது பத்திரிகையின் உத்தியோகபூர்வ குறியீட்டு இலட்சினையை பயன்படுத்தி அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் முஜிபூர் ரகுமான் எம்.பி ஆகியோரை குறிப்பிட்டு செய்திகள் வெளியாகியதாகவும், தற்போதும் அவ்வாறான போலி செய்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் காரியாலயம் உதயன் நிருவாகத்தை தொடர்புகொண்டு இது குறித்து வினவியதாகவும், எனினும் குறித்த செய்தித்தாள் உதயன் பத்திரிகையின் இதழ் அல்ல எனவும், எனவே இதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் பக்கத்தில் இருந்து முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு உதயன் நிருவாகம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்திடம் FactSeeker வினவியபோது, வடக்கில் முன்னிலை ஜனரஞ்சகப் பத்திரிகையான உதயன் பத்திரிகையின் உத்தியோகபூர்வ குறியீட்டு இலட்சினையை ஒத்த இலட்சினை பதிக்கப்பட்ட பத்திரிகையில் “இஸ்லாமிய பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவேன்” என்று பிரதான தலைப்பிட்டும் “அனைத்து முஸ்லிம் நாடுகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன” என்றவாறு உப தலைப்பிட்டும் 30.03.2023 ஆந் திகதியான இன்றைய தினம் சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்ட செய்தியை நாம் முற்றாக மறுக்கிறோம் என தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராகவோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகவோ இவ்வாறான கருத்துப்பட எந்த விதமான உரைகளிலுமோ,தேர்தல் மேடைப் பேச்சுக்களிலுமோ,பல் ஊடக நேர்காணலின் போதோ அல்லது ஊடக வெளியீடுகளின் போதோ தெரிவிக்கவில்லை என்பதை அறியத்தருகிறோம் என குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயம், இத்தகைய பிற்போக்குத்தனமான அரசியல் போக்குகளை தாம் ஒருபோதும் கடைப்பிடிப்பதில்லை எனவும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஐம்பெரும் பிரதான கொள்கைகளில் “முற்போக்குத் தேசியவாதம்” பிரதான அம்சமாக காணப்படுவதாகவும், சகலரையும் ஒன்றிணைத்து இலங்கையர்களாக முன்னோக்கிப் பயணிக்கவே தாம் விரும்புவதாகவும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவராகவும்,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகவும் கடந்த இரண்டரை வருடங்களாக எத்தகைய இன மத வேறுபாடுகளையும் பொருட்படுத்தாது ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்த மக்கள் சேவைகளையும்,அரசியல் நிலைப்பாடுகளையும் கொண்டு வெளிப்படையாகவே புரிந்து கொள்ள முடியும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம் என எதிர்க்கட்சி தலைவர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
Post a Comment