Header Ads



வீடியோ கேமா? சர்வதேசப் போட்டியா? உலக சாதனை படைத்த போட்டி


வீடியோ கேமா? சர்வதேசப் போட்டியா? என்று ரசிகர்கள் ஆச்சர்யப்படும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்ரிக்கா இடையிலான டி20 போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்ரிக்க அணி அசாத்திய சாதனை புரிந்துள்ளது.


தென் ஆப்ரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆடடத்தில் ரன் மழை பொழிந்தது. இரு அணிகளும் சேர்ந்து 517 ரன்களைக் குவித்தன. சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஒரே ஆட்டத்தில் 500 ரன்களுக்கும் மேல் குவிக்கப்பட்ட ஆட்டமாக இது அமைந்தது.


முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஜான்சன் சார்ல்ஸ் அடித்த அபார சதத்தின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைக் குவித்தது.


அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் தென் ஆப்ரிக்க அணி குயின்டன் டி காக்கின் அதிரடி சதத்தின் உதவியுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்களைக் குவித்து 7 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே சாதனை வெற்றியை ருசித்தது.


வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜான்சன் சார்ல்ஸ் 39 பந்துகளிலேயே சதம் கடந்து அசத்தினார். மொத்தம் 46 பந்துகளை எதிர்கொண்ட அவர் 10 பவுண்டரிகள், 11 சிக்சர்களை விளாசி 118 ரன்களைக் குவித்தார்.


அவருக்கு உறுதுணையாக களத்தில் நின்ற கைல் மேயர்ஸ் 27 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். 2-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இருவரும் 58 பந்துகளில் 135 ரன்களை விளாசி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பலம் சேர்த்தனர்.


ஜான்சன் சார்ல்ஸ் அவுட்டாகி வெளியேறியதும் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோவ்மன் பொவல் 19 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். அதிரடி காட்டிய ரொமாரியோ ஷெப்பர்ட் 18 பந்துகளில் 41 ரன்களை விளாசினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களைக் குவித்தது. தென் ஆப்ரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


டி20 போட்டிகளில் 250 ரன்களைக் கடந்து இதுவரை எந்த அணியும் வென்றதே இல்லை என்பதால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி நிச்சயம் என்ற ரசிகர்களின் எண்ணத்தை தென் ஆப்ரிக்க வீரர்கள் அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் பொய்யாக்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்ரிக்காவின் தொடக்க வீரர்களான குயின்டன் டி காக் - ரைஸா ஹென்ட்ரிக்ஸ் ஜோடி தொடக்கம் முதலே எந்தவொரு அழுத்தமும் அணியின் மீது விழாமல் பார்த்துக் கொண்டனர்.


அதாவது, இருவரது பேட்டில் இருந்தும் பவுண்டரி, சிக்சர்களாக பந்து பறந்து கொண்டிருந்ததால் ஸ்கோர் போர்டு ஏகத்திற்கும் எகிறியது. முதல் ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு ஓடவிட்ட குயின்டன் டி காக், இரண்டாவது ஓவரின் முதல் 3 பந்துகளையும் சிக்சர்களாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.


முதல் ஓவரில் இருந்தே தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்குத் தேவையான ரன் ரேட்டைக் காட்டிலும் மிக அதிகமாகவே பராமரிப்பதில் சிக்கல் எழவே இல்லை. இருவருமே களத்தில் ருத்ர தாண்டவமாடியதால் தென் ஆப்ரிக்க அணி ஆறாவது ஓவரிலேயே 100 ரன்களைக் கடந்தது.


தென் ஆப்ரிக்க அணிக்கு சரவெடி தொடக்கம் தந்த குயின்டன் டி காக் - ஹென்டிரிக்ஸ்


தென் ஆப்ரிக்காவின் தொடக்க வீரர்களான குயின்டன் டி காக் - ஹென்டிரிக்ஸ் ஜோடி முதல் விக்கெட்டிற்கு வெறும் 65 பந்துகளில் 152 ரன்களைக் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.


களத்தில் பவுண்டரி, சிக்சர்களாக விளாசி ரன் மழை பொழிந்த குயின்டன் டி காக் 44 பந்துகளை எதிர்கொண்டு சதம் அடித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 8 சிக்சர்களும் அடங்கும். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இது அவருக்கு முதல் சதமாக அமைந்தது.


மறுமுனையில், தென் ஆப்ரிக்க அணிக்கு மிக முக்கியமான பங்களிப்பை அளித்த மற்றொரு தொடக்க வீரர் ஹென்டிரிக்ஸ் 28 பந்துகளில் 68 ரன்களை விளாசினர். அவர் மொத்தம் 11 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் அடித்தார்.


அடுத்து வந்த ருஸ்ஸோவும், டேவிட் மில்லரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் தென் ஆப்ரிக்க அணியின் ரன் ரேட் மிகவும் வலுவாக இருந்ததால் பெரிய அளவில் நெருக்கடி எழவில்லை.


தென் ஆப்ரிக்க அணி கேப்டன் மார்க்ரம் 21 பந்துகளில் 38 ரன்களைக் குவித்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார். அவர் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். கேப்டனுக்கு உறுதுணையாக களத்தில் நின்ற ஹெயின்ரிச் லாஸ்ஸன் 7 பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார்.


முதல் பந்து முதலே பவுண்டரி, சிக்சர்களாக விளாசத் தொடங்கிவிட்ட தென் ஆப்ரிக்க வீரர்கள் வெற்றி இலக்கை எட்டும் வரையிலும் தங்களது வேகத்தை குறைக்கவே இல்லை. அவர்களது வேகத்திற்கு அணை போட வெஸ்ட் இண்டீஸ் அணி பலவாறாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை.


தென் ஆப்ரிக்க அணியின் ஆவேச ஆட்டத்திற்கு முன்பாக, வெஸ்ட் இண்டீஸ் அணியின் இமாலய இலக்கு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. இவ்வளவு பெரிய இலக்கை எட்ட முடியுமா என்று ரசிகர்கள் மலைத்திருந்த ஒரு ஸ்கோரை தென் ஆப்ரிக்க அணி போகிற போக்கில் எட்டிவிட்டது.


அதிரடி சரவெடி ஆட்டத்தால் தென் ஆப்ரிக்க அணி 7 பந்துகள் மீதமிருக்கும் நிலையிலேயே 18.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டிவிட்டது.


வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென் ஆப்ரிக்க வெற்றிகரமாக இலக்கை துரத்திப் பிடித்த இந்த ஆட்டம் சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றிகரமான சேஸிங்காக அமைந்தது.


இந்த ஆட்டம், 2006-ம் ஆண்டு வான்டரர்ஸ் மைதானத்தில் தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஒருநாள் போட்டியை ரசிகர்களுக்கு நினைவூட்டியது. முதலில் பேட்டிங் செய்யும் அணி 300 ரன்களுக்கு மேல் எடுத்தாலே கிட்டத்தட்ட வெற்றி உறுதி என்று கருதப்பட்ட அந்த காலத்தில், ஆஸ்திரேலிய அணி குவித்த 434 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து தென் ஆப்ரிக்க அணி மலைக்க வைத்தது. இந்த ஆட்டத்தின் வீடியோ பதிவு டி.வி.டி.யாக பதிவு செய்யப்பட்டு விற்பனைக்கு விடப்பட்டது என்பதில் இருந்தே அந்த ஆட்டம் கிரிக்கெட் உலகில் எவ்வளவு தூரம் வியந்து பார்க்கப்பட்டது என்பதற்கு சான்று.


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 500 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்ட முதல் ஆட்டமாக இது அமைந்துள்ளது. 2016-ம் ஆண்டு இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில் 489 ரன்கள் சேர்க்கப்பட்டதே இதுவரை சாதனையாக இருந்தது. அப்போது, ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போதைய சாதனை ஆட்டத்தில் தோல்வியின் பக்கம் இருக்கிறது.


சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றிலும் இதுவே அதிகபட்ச ரன்கள் குவிக்கப்பட்ட ஆட்டமாக அமைந்துள்ளது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இம்மாதம் நடந்த ஆட்டம் ஒன்றில் முல்தான் சுல்தான்ஸ் - குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மோதிய ஆட்டத்தில் 515 ரன்கள் குவிக்கப்பட்டதே உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடர்களில் சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்தது. அதையும், தென் ஆப்ரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் ஆட்டம் தகர்த்துள்ளது.


இந்த ஆட்டத்தில் மொத்தம் 35 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. வெஸ்ட் இண்டீஸ் அணி 22 சிக்சர்களையும், தென் ஆப்ரிக்க அணி 13 சிக்சர்களையும் விளாசின.


இரு அணிகளும் சேர்ந்து 46 பவுண்டரிகளை அடித்துள்ளன. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு எந்தவொரு ஆட்டத்திலும் இந்த அளவுக்கு சிக்சர்களோ, பவுண்டரிகளோ அடிக்கப்பட்டதே இல்லை. அந்த வகையிலும் இந்த ஆட்டம் சாதனை ஆட்டமாக அமைந்துவிட்டது.


சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில், 2006-ம் ஆண்டு தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம் போல, டி20 போட்டிகளில் தென் ஆப்ரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான இந்த ஆட்டமும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரு வகை கிரிக்கெட்டிலும் சாதனை ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியாக தென் ஆப்ரிக்காவே இருப்பது சிறப்பம்சம். BBC

No comments

Powered by Blogger.