Header Ads



"மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை, மோதியின் கண்களில் அச்சம் தெரிகிறது" - ராகுல் காந்தி


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் வியாழனன்று தீர்ப்பளித்த நிலையில், அடுத்த நாளே அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டது.


எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமையன்று ராகுல் காந்தி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலோட், சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகெல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


அப்போது பேசிய ராகுல் காந்தி, “சில வாரங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் சில கேள்விகளை எழுப்பியிருந்தேன்.


அதானி குழுமத்தில் போலி நிறுவனங்கள் மூலம் 20,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதானி குழுமம் கட்டமைப்பு துறையில் பணியாற்றுவதால் அவர்களால் இவ்வளவு பெரிய தொகையைதிரட்டியிருக்க முடியாது.


பின்னர் எங்கிருந்து இந்தப் பணம் வந்தது. யாருடைய பணம் இது? இந்த நிறுவனங்கள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றுகின்றன. இந்த விவகாரத்தில் சீன நாட்டவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. யார் அந்த சீன நபர் என்று ஏன் யாரும் கேள்வி எழுப்பவில்லை என்று கேள்வி எழுப்பினேன்.


இரண்டாவதாக, பிரதமர் மோதிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பு குறித்துக் கேள்வி எழுப்பினேன். உடனடியாக பாஜகவினர் அவர்களின் வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டனர்.


எனது நாடாளுமன்ற பேச்சு நீக்கப்பட்டது. இது தொடர்பாக என் பேச்சுக்கான ஆதாரம் குறித்து சபாநாயகருக்கு விரிவாக விளக்கமளித்து கடிதம் எழுதினேன்.


நேரில் சந்தித்தும் விளக்கம் கேட்டேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை, எனது பேச்சு நாடாளுமன்ற குறிப்புகளில் சேர்க்கப்படவில்லை. கார்கேவுக்கும் இதுவே நடந்தது.


என்னை குறித்து நாடாளுமன்றத்தில் பாஜக அமைச்சர்கள் பொய் கூறினர். அதானி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட 20,000 கோடி ரூபாய் யாருடையது என்ற என்னுடைய கேள்வியை திசைத் திருப்புகின்றனர்.


அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள 20,000 கோடி பணம் யாருடையது என்ற கேள்வியில் இருந்து பிரதமரைப் பாதுகாக்க இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுகின்றன.


நாட்டின் ஜனநாயகத் தன்மையைப் பாதுகாப்பதே எனது பணி. அதாவது நாட்டின் நிறுவனங்களைப் பாதுகாப்பது, நாட்டின் ஏழை மக்களின் குரலைப் பாதுகாப்பதும் பிரதமருடனான உறவைப் பயன்படுத்திக் கொள்ளும் அதானி போன்றவர்களைப் பற்றிய உண்மையை மக்களுக்குச் சொல்வதும் தான் என் பணி," என்று பேசினார்.


தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "என் அடுத்த பேச்சு குறித்து பிரதமர் மோதி அச்சம் கொள்கிறார். அதனால்தான் நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளேன்.


அதானி குறித்து அடுத்த என்ன பேச்சு வரும் என்று அவர் அஞ்சுகிறார். அவர் கண்ணில் நான் அச்சத்தை பார்த்தேன். அதானி குறித்த அடுத்த பேச்சு நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடாது என்று அவர் எண்ணுகிறார்.


அதனால் முதலில் திசைத் திருப்பினார்கள், தற்போது தகுதி நீக்கம் செய்துள்ளார்கள். அதானிக்கும் மோதிக்கும் இடையே ஆழமான உறவு உள்ளது," என்று குறிப்பிட்டார்.


"என்னை நிரந்தரமாகத் தகுதி நீக்கம் செய்தாலும், என் பணியைச் செய்துகொண்டே இருப்பேன். நான் நாடாளுமன்றத்திற்குள் இருக்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை. நாட்டுக்காகத் தொடர்ந்து போராடுவேன்.


ஒருவர் குற்றம் செய்தால், அதை திசை திருப்பவே விரும்புவார். நீங்கள் ஒரு திருடனைப் பிடித்தால், முதலில் நான் திருடவில்லை என்று கூறுவார். பின்னர், அங்கே பாருங்கள் என்று கூறி திசை திருப்புவார். அதைத்தான் பாஜக செய்கிறது," என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார்.


வெளிநாட்டில் பேசிய பேச்சு தொடர்பாக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் கூறி வருவது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அவர், "என் பெயர் ராகுல் காந்தி, சாவர்க்கர் அல்ல. காந்தி எப்போதும் மன்னிப்புக் கேட்க மாட்டார்," என்று தெரிவித்தார். bbc

No comments

Powered by Blogger.