கபூரியாவின் நிலையறிந்து கண்ணீர் விட்டழுத ஒரு தாய்
- ஏ.ஆர்.ஏ.பரீல் -
“எங்களது கல்லூரியின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட செய்தியறிந்து உம்மா தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு துயரம் மேலிட்டு அழுதார். உம்மாவின் அழுகை என்னையும் அழ வைத்துவிட்டது. யா அல்லாஹ் எங்களுக்கு ஏன் இந்தச் சோதனை? நாங்கள் யாருக்கு குற்றம் செய்தோம்? என்று நானும் கதறியழுதேன்.’’
மஹரகம கபூரியா அரபுக்கல்லூரியின் க.பொ.த சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரைச் சந்தித்து கல்லூரியின் மின்துண்டிப்பு தொடர்பில் வினவியபோது அவர் இவ்வாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அம்மாணவர் தொடர்ந்தும் தனதும் சக மாணவர்களினதும் நிலைமையினை விளக்கினார். “கல்லூரியில் மின் துண்டிக்கப்பட்டதால் நாங்கள் பல சிரமங்களை எதிர்கொண்டோம். சில வேளை எங்களுக்கு குடிப்பதற்குக்கூட போதிய நீர் இருக்கவில்லை. மின் துண்டிப்பு காரணமாக நீர் விநியோகமும் தடைப்பட்டது. கல்லூரியில் பரீட்சை நடந்து கொண்டிருந்ததால் நாங்கள் இரவு வேளையில் பாடங்களை மீட்க முடியாது பல சிரமங்களை எதிர்கொண்டோம். இரவில் தூக்கம் வரவில்லை. விடுதிக்குள் மின்விசிறிகள் இயங்காமையினால் வெப்பமாக இருந்தது. நுளம்புகளும் தொல்லை தந்தன. பாடங்களை மீட்டிக்கொள்ள வாய்ப்பு கிடைக்காமையினால் எங்களுக்கு பரீட்சைக்கு ஒழுங்காக முகம் கொடுக்க முடியாமற்போனது.
எங்களது நிலைமையையறிந்து உம்மா தொலைபேசியூடாக அழுதமை என்னை மீளா கவலையில் ஆழ்த்தியுள்ளது’’ என்றார்.
கல்லூரியில் பயிலும் கல்விப்பொதுத்தாராதர உயர்தர மாணவர் ஒருவர் விளக்கமளிக்கையில் “நான் கபூரியாவில் உயர்தர வகுப்பில் படிக்கிறேன். 5ஆம் வருட மாணவன். பரீட்சை நடந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலே கல்லூரிக்கான மின்சாரம் கல்லூரியின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களின் கோரிக்கைக்கு இணங்க மின்சாரம் வழங்கும் நிறுவனத்தினால் துண்டிக்கப்பட்டது.இப்போது பரீட்சை முடிந்து விட்டது. பல சவால்களுக்கு மத்தியில் பரீட்சையை எதிர்கொண்டோம். படித்தவைகளை மீட்டிப்பார்க்கக் கிடைக்கவில்லை. இருளுக்குள் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாதவாறு முடங்கிக்கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
வழமையாக மாணவர்கள் படித்து விட்டு இரவு 10 மணிக்கே நித்திரைக்குச் செல்வோம். அதிகாலை 4 மணிக்கு எழுந்து தஹஜ்ஜத் தொழுகையில் ஈடுபடுவோம்.இந்த மின்துண்டிப்பு எங்கள் அனைத்து செயற்பாடுகளையும் துண்டித்து விட்டது.
பரீட்சைக்குக் படிக்க கிடைக்கவில்லை.மின் துண்டிப்பு காரணமாக நீர்விநியோகமும் தடைப்பட்டது. இதனால் எங்களுக்கு குடிப்பதற்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. நான் நான்கு நாட்கள் குளிக்கவில்லை. விடுதிக்குள் வெப்பம் காரணமாக தூங்க முடியாமற் போனது. நுளம்பு தொல்லையினால் அவதிப்பட்டோம். பகலில் விடுதிக்குள் வெப்பம் காரணமாக தங்கியிருக்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
சில சந்தர்ப்பங்களில் அதிபர் மெழுகுவர்த்தி வாங்கித்தந்தார். விடுதியொன்றிலிருந்து அடுத்த விடுதிக்குச் செல்வதற்கு எம்மிடமிருந்த ஒரிரு டோர்ச்லைட்களைப் பயன்படுத்தினோம். கல்லூரியில் ஒரு விடுதி மேற்பார்வையாளர் உட்பட உஸ்தாத்மார் ஐவர் இருக்கிறார்கள். அவர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்கள். எங்களது நிலைமை குறித்து கல்லூரியின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை. எனது வாப்பா ஒரு மெளலவி. உம்மா எனது நிலைமையறிந்து துன்பத்தில் இருக்கிறார். அழுது கொண்டிருக்கிறார். வாப்பா பொறுமை காக்கும்படி கூறுகிறார்.
மின்துண்டிப்பு காரணமாக நீர்விநியோகமும் தடைப்பட்டதால் விடுதியில் சாப்பாடும் உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. தாமதமாகவே கிடைக்கிறது என்றார்.
வக்பு நியாய சபையின் உத்தரவுக்கமைய மின்விநியோக நிறுவனம் (LECO) கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை கல்லூரிக்கான மின் இணைப்பினை மீண்டும் வழங்கியுள்ளது.
Vidivelli
அழுதும் கண்ணீர் விட்டும் புலம்பியும், உணர்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இதற்கு இரண்டு தீர்வுகள் உள்ளன. முதலில் மாணவர்களாகிய நீங்களும், ஆசிரியர்களும் தஹஜ்ஜத் தொழுது அல்லாஹ்விடம் முறையிட்டு அந்த ரப்புடைய உதவியைத் தேடுங்கள். கபூரிய்யா கல்லூரி அதன் பணியைத் தொடர்வது அல்லாஹ்வுடைய ஏற்பாடுகளில் இருந்தால் நிச்சியம் அந்த ரப் அந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவைத் தருவான். இரண்டாவது, சட்டப்பிரச்சினை. அதனை எவ்வாறு முன்னே எடுத்துச் செல்வது என்பதை இலங்கையில் சிறந்த சட்டத்தரணிகள், சட்ட ஆலோசகர்களை அணுகி அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்பதை நுணுக்கமான முறையில் ஆய்வு செய்து பிரச்சினையை எதிர்நோக்குவது. மூன்றாவது இராஜதந்திர ரீதியாக இந்தப்பிரச்சினையை எவ்வாறு எதிர்நோக்கலாம் என்பதை மிகச்சிறந்த இராஜதந்திரிகள் இலங்கையில் இருக்கின்றார்கள். அவர்களை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி திட்டமிட்டு அவர்கள் மூலமும் இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளலாம். உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விட்டு சரியான முறையில் சிந்தனையையும், அணுகு முறைகளையும் பின்பற்றினால் இந்தப்பிரச்சினைக்கு நிச்சியம் சுமுகமான தீர்வைக் காணலாம். அவை எல்லாவற்றையும் இங்கு எழுத்து மூலம் தெரிவிக்க முடியாது.
ReplyDelete